தியாக பூமி/இளவேனில்/மீனாவின் கணவன்
மீனாவின் கணவன்
'அந்த அம்மாள் என் அத்தை மீனாதான்!' என்று சாவித்திரி சொன்னதும், சம்பு சாஸ்திரி, "குழந்தை! கொஞ்சம் இரு! என்னமோ பண்ணுகிறது" என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.
சாவித்திரி கலவரமடைந்து, "டாக்டரை அழைச்சுண்டு வரச் சொல்லட்டுமா, அப்பா?" என்றாள்.
"வேண்டாம் அம்மா! எனக்கு உடம்பு ஒன்றுமில்லை; நெஞ்சுதான் படபடக்கிறது" என்றார்.
அப்போது சம்பு சாஸ்திரியின் மனக் கண்ணின் முன்பு சரியாக முப்பது வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் எதிரில் அப்போது நடப்பது போல் தோன்றியது. மீனாவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருஷம் ஆகிவிட்டது. அவளுடைய புருஷனைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. சிலர் அவன் அக்கரைச் சீமைக்குப் போய் விட்டானென்று சொன்னார்கள். வேறு சிலர் அவன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினார்கள். ராமச்சந்திரன் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபடியாலும், அந்தக் கல்லூரியை நடத்திய ரோமன் காதலிக் பாதிரிமார்கள் அப்போது மதமாற்றும் வேலையில் ரொம்பவும் தீவிரமாயிருந்தபடியாலும், அவன் கிறிஸ்தவனாகிவிட்டான் என்னும் வதந்தி நம்பக் கூடியதாயிருந்தது.
இந்த நிலைமையில், பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வரும் பிரசித்தமான மகாமக உத்ஸவம் வந்தது. சம்பு சாஸ்திரி தம்முடைய குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு கும்பகோணத்துக்குப் போனார். குடும்பத்தார், என்றால் சாஸ்திரியின் முதல் மனைவி பாக்கியம், தங்கை மீனா, வயதான அத்தை இவர்கள் தான். கும்பகோணத்தில் கடலங்குடித் தெருவில் சம்பு சாஸ்திரி ஜாகை போட்டிருந்தார். மகாமகத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே போய்விட்டார். மகாமகத்தன்று எல்லாரும் மாமாங்கக் குளத்திற்கு ஸ்நானம் செய்யப் போனார்கள். ஜனக் கூட்டம் ரொம்ப அதிகமாயிருந்தபடியால், ஒருவருக்கொருவர் பிரிந்து போனாலும் தனித் தனியாக ஜாகைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் திருட்டுப் பயத்தை உத்தேசித்து ஸ்திரீகள் நகை நட்டுகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வந்தார்கள். மாமாங்கக் குளத்தில் ஸ்நானம் செய்யும் வரையில் எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். கரையேறும்போதும் ஒன்றாக ஏறினார்கள். ஆனால், ஜாகைக்குப் போய்ச் சேர்ந்ததும் பார்த்ததில், மீனாவை மட்டும் காணோம்! கூட்டத்தில் பிரிந்து போயிருப்பாள், ஜாகைதான் தெரியுமே, தானே வந்துவிடுவாள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் வரையில் வராமற் போகவே கவலை உண்டாயிற்று. சாஸ்திரி மீனாவைத் தேடுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மனைவி பாக்கியம் ஓடி வந்து ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். கழற்றி வைத்த நகைகளை எடுத்துப் பூட்டிக் கொள்வதற்காக டிரங்குப் பெட்டியைத் திறந்ததாகவும், அதில் இந்தக் கடுதாசி இருந்ததாகவும் சொன்னாள். கடுதாசியில் பின் வருமாறு எழுதியிருந்தது:
'அண்ணா! இந்த ஜன்மம் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. நான் போகிறேன். நீயும் மன்னியும் என்னை மன்னித்து விடுங்கள். - மீனா.'
இதைப் படித்த சாஸ்திரி பைத்தியம் பிடித்தவர் போலானார். அந்த மகாமகக் கூட்டத்தில் கும்பகோணத்தின் வீதிகளில், "மீனா! மீனா!" என்று கூவிக்கொண்டு அலைந்தார். கூட்டத்தில் இடிபட்டோ , குளத்தில் மூழ்கியோ செத்துப் போனவர்களைப் போலீஸார் எடுத்துப் போட்டிருந்த இடத்துக்கெல்லம் ஓடி, மீனாவின் பிரேதமாய் இருக்குமோ என்று பதைபதைப்புடன் பார்த்தார். ஆனால், மீனாவோ அவளுடைய உயிரில்லாத உடலோ கிடைக்கவேயில்லை. இரண்டு நாள் இப்படி சொல்ல முடியாத வேதனையும் துன்பமும் அநுபவித்துவிட்டுச் சாஸ்திரி தம் மனைவியையும் அத்தையையும் அழைத்துக் கொண்டு ரயிலேறப் போனார். அவர்களை ஊரில் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பி வந்து தேட வேண்டுமென்பது அவருடைய எண்ணம். ரயில்வே ஸ்டெஷனில், மகாமகக் கூட்டத்தைக் கொண்டு போவதற்காக அரை மணிக்கு ஒரு ரயிலாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ரயில் வந்து பிளாட்பாரத்தில் நின்றதும், ஜனங்கள் மோதிக் கொண்டு போய் ஏறினார்கள். சாஸ்திரியாரால் இந்தக் கூட்டத்தில் முண்டி அடித்து ரயில் ஏற முடியவில்லை. அவர் வந்த பிறகு மூன்று ரயில் போய்விட்டது. நாலாவது ரயிலிலும் அவருக்கு இடங் கிடைக்கவில்லை. ஆனால் நாலாவது ரயில் கிளம்பியபோது, அந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சாஸ்திரி ஓர் அதிசயத்தைக் கண்டார். அந்த நம்ப முடியாத காட்சியை அவர் கண்டபோது, அவருடைய நெஞ்சில் கூரிய ஈட்டியைச் செலுத்துவது போல் இருந்தது.
அவள் மீனாதான்; சந்தேகமில்லை. கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் சாஸ்திரியைக் கண்டதும் அவளுடைய முகம் அடைந்த மாறுதலினால் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. கண் விழி தெறித்து விழுந்துவிடும்போல் இருந்தது, அவள் சாஸ்திரியைப் பார்த்த பார்வை. மீனாவுக்குப் பக்கத்தில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான். அவன் நம் ஊர்க்காரனில்லை. வடக்கத்தியான். பார்ஸிக்காரர்களைப் போல் தொப்பியும் உடுப்பும் அணிந்து, கேரா கிருதா மீசையுடன் தோன்றினான்.
மீனா வெளிப்புறம் நோக்குவதையும், பிளாட்பாரத்தில் சம்பு சாஸ்த்ரி நிற்பதையும் கண்ட அந்தப் பார்ஸிக்காரன் சட்டென்று ரயிலின் ஜன்னல் கதவைத் தூக்கிச் சாத்தினான். அப்போது அவனுடைய கை மீனாவின் தோளின் மேல் இருந்தது.
இதெல்லாம் அரை நிமிஷத்தில் நடந்தவை. அவன் ஜன்னல் கதவைத் தூக்கும்போதே ரயில் நகரத் தொடங்கிவிட்டது. "மீனா! மீனா!" என்று கதறிக் கொண்டே சம்பு சாஸ்திரி நகருகிற ரயிலோடு தாமும் நடந்தார். அவர் நாலடி நடப்பதற்குள், ஒரு போர்ட்டர் வந்து அவரைப் பிடித்து நிறுத்தினான். வண்டி போயே போய் விட்டது.
பிறகு சாஸ்திரி நெடுங்கரைக்கு வந்தார். "கடுதாசியில் எழுதியிருந்தபடி மீனா செத்துப் போயிருக்கக் கூடாதா ஸ்வாமி! இந்த பாப காரியத்தைச் செய்ய வேண்டுமா?" என்று அவருடைய உள்ளம் கொந்தளித்தது. "என்னைப் பொறுத்த வரையில் இனிமேல் அவள் செத்தவள் தான்" என்று தீர்மானித்தார். ஊராருக்கும், "மீனா மாமாங்கக் குளத்தில் முழுகிச் செத்துப் போனாள்" என்று சொல்லிவிட்டார்.
அவர் ஒருவித வெறுப்புடன் இப்படிச் சொன்னபடியால் ஊரார் அவர் சொன்னதை நம்பவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவமும் அவர்கள் காதுக்கு அரை குறையாக எட்டிவிட்டது. எனவே, அவர்கள் தத்தமக்குத் தோன்றியபடி சொல்லி வந்தார்கள். "யாரோ வடக்கத்தியானைப் பிடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்" என்று சிலரும், "கிறிஸ்தவனாப்போன ஆம்படையானோடு சம்பு சாஸ்திரியே கூட்டி அனுப்பி விட்டார்" என்று வேறு சிலரும் கூறிவந்தார்கள்.
மேற்சொன்ன சம்பவத்திற்குப் பிறகு சம்பு சாஸ்திரியின் வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள் நடந்துவிட்டன. எத்தனையோ சுக துக்கங்களை அநுபவித்து விட்டார். ஆனால், அவருடைய இருதய அந்தரங்கத்தில் மீனாவின் ஞாபகம் குடிகொண்டிருந்தது. சம்பு சாஸ்திரி மீனாவிடம் அன்பு கொண்டிருந்தது போல் வேறு யாரிடமும் வைக்கவில்லை. பிற்காலத்தில் சாவித்திரியிடமும் சாருவிடமும் வைத்த அன்பு கூட அடுத்தபடியென்றே சொல்ல வேண்டும். ஆகையால், மீனாவையும் அவளுடைய பாப காரியத்தையும் மறப்பதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. சாவித்திரி மீனாவைப்பற்றி இப்போது சொன்னதும் சாஸ்திரியின் உள்ளத்தில் புதைந்து கிடந்த உணர்ச்சியெல்லாம் பொங்கி எழுந்தது. உணர்ச்சி மிகுதியினால் உடம்பு நடுங்கிற்று. கொஞ்சம் படபடப்பு அடங்கி பேசும் சக்தி வந்ததும், "குழந்தை! நிஜமாக மீனாதானா உனக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினாள்? அந்தப் பாப ஜன்மத்தின் சொத்துத்தானா இதெல்லாம்?" என்றார்.
"ஐயோ! அப்படிச் சொல்லாதேங்கோ, அப்பா! என் அத்தையைப் பாப ஜன்மம் என்று சொல்கிறவர்களுக்கு ஈரேழு பதினாறு ஜன்மத்திலும் விமோசனம் கிடையாது" என்றாள் சாவித்திரி.
அப்போது சாஸ்திரிக்குப் பளிச்சென்று இன்னொரு ஞாபகம் வந்தது: "குழந்தை, சாவித்திரி! அவா இரண்டு பேரும் நம்ம பக்கத்து மனுஷ்யாள் தான் என்று சொன்னே போலிருக்கே?" என்று ஆவலுடன் கேட்டார்.
"ஆமாம், அப்பா! அத்தையோட நீங்க ரயில்லே பார்த்தது வேறே யாருமில்லை; என் அத்திம்பேர் ராமச்சந்திரய்யர்தான்" என்றாள் சாவித்திரி.
சம்பு சாஸ்திரி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, "நிஜமா, சாவித்திரி! நிஜந்தானா சொல்றே?" என்று அலறினார்.
"சத்தியமா, அப்பா!" என்றாள் சாவித்திரி.
சாஸ்திரி உடனே சாந்தமடைந்தவராய் "ஆனால் ஏன் நிஜமாயிருக்கப்படாது? பராசக்தி அருளால் என்னென்ன அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது? இதுவுந்தான் ஏன் நிஜமாயிருக்கப்படாது?" என்று தமக்கு தாமே சொல்லிக் கொண்டார்.
சாவித்திரி சொன்னாள்: "அப்பா! அத்திம்பேர் மேலே அப்போது ஏதோ ராஜாங்கத் துரோகக் கேஸ் இருந்ததாம். அந்தக் காலத்திலே, அதாவது மகாத்மா காந்தி தலைவராய் வர்றதுக்கு முன்னாலே, வெடிகுண்டு போட்டாத்தான் நம்ம தேசத்துக்கு விடுதலை கிடைக்கும்னு சில பேர் முட்டாள் தனமா நினைச்சுண்டிருந்தாளாம். அந்த மாதிரி ஒரு வெடிகுண்டு கேஸிலே அத்திம்பேர் அகப்பட்டுண்டிருந்தாராம். அதிலே தப்பிக்கிறதற்காக அவர் பார்ஸிக்காரர் மாதிரி வேஷம் போட்டுண்டு இருந்தாராம். கும்பகோணத்திலே மாமாங்கத்துக்கு முதல் நாள் அவர் அத்தையைப் பார்த்துட்டு, கூட்டத்திலே உங்களிடமிருந்து பிரியற சமயம் பார்த்துண்டிருந்து, 'உங்க அண்ணாகிட்டக் கூடச் சொல்லாமே என்னோடு வர்றதா இருந்தா வா' என்று கூப்பிட்டாராம். அத்தை சம்மதிச்சு உங்களுக்குக் கடுதாசி எழுதி வைச்சுட்டு அவரோடே கிளம்பிப் போனாளாம். அவள் செத்துப் போய் விட்டதாக நீங்கள் நினைச்சுக்கணும்னு அத்தைக்கு எண்ணமாம். ஸ்டேஷன் பிளாட்பாரத்திலே உங்களைப் பார்த்ததும், அவளை நீங்க தெரிஞ்சுண்டுட்டயளோ என்னமோ, என்ன நினைச்சுண்டயளோ என்னமோன்னு அத்தை பட்ட மன வேதனைக்கு அளவேயில்லையாம். இருந்தாலும் அத்திம்பேர் மேலே கேஸ் இருந்தபடியினால் அப்படி உங்களிடம் சொல்லிக்காமே போக வேண்டியதாய் ஆச்சாம். இதையெல்லாம் உங்க கிட்ட விவரமாய்ச் சொல்லி அத்தையை நீங்க மன்னிக்கணும்னு கேட்டுக்கச் சொன்னாள், அப்பா!"
"சாவித்திரி! நான் என்ன சொல்லப் போறேன்! இருபத்தைந்து வருஷமா என் மனஸிலிருந்த புண் இன்னிக்குத்தான் ஆறித்து" என்றார் சாஸ்திரி. மீனாவையும் அவளுடைய புருஷனையும் பற்றிச் சாவித்திரி எவ்வளவுதான் சொன்னாலும் சம்பு சாஸ்திரி திருப்தியடையவில்லை. மேலும் மேலும் அவர்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரிக்கும் அவர்களைப் பற்றிப் பேசப் பிரியமாயிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் தன்னிடம் அவர்கள் காட்டிய அன்பைப் பற்றியும் சலிப்படையாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அத்தையும் அத்திம்பேரும் பல இடங்களில் அலைந்து திரிந்தது, கடைசியில் அத்திம்பேர் லாலா ராம்சந்த் ராய் என்ற பெயருடன் ஒரு பெரிய இரும்பு வியாபாரியின் கடையில் வேலைக்கு அமர்ந்தது, வியாபார நுட்பங்களைத் தெரிந்து கொண்டு தாமே இரும்பு வியாபாரம் ஆரம்பித்தது, ஐரோப்பிய மகா யுத்தத்தின் போது இரும்பின் விலை திடீரென்று உயர்ந்ததன் பலனாக, அவருக்கு ஏராளமான லாபம் வந்து பெரிய பணக்காரரானது - எல்லாம் தான் அத்தையிடம் கேட்டபடி கதை கதையாகச் சொன்னாள்.
"அப்பா! இந்த ஊர் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு நான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தேனே, ஏன் தெரியுமா?" என்று கேட்டாள்.
"சாரு, அந்த ஆஸ்பத்திரியிலே பிறந்தாள் என்றுதான் சொன்னயே, அம்மா!" என்றார் சாஸ்திரி.
"அது வாஸ்தவந்தான், அப்பா! ஆனால், அதற்காக அவ்வளவு பெரிய தொகையை நானாகவே கொடுத்துவிடவில்லை. அத்தையின் விருப்பத்தின்படிதான் கொடுத்தேன். நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லச் சொல்லிக் கேட்டு அத்தை கண்ணீர் விட்டு அழுவாள். அவ்வளவு கஷ்டப்பட்ட சமயத்தில் எனக்கு இந்த மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் அடைக்கலம் கிடைத்தது என்பது அத்தையின் மனத்தை உருக்கிவிட்டது. ஆஸ்பத்திரியின் பெயரும் தன்னுடைய பெயராயிருந்தபடியால் இதில் பகவானுடைய ஆக்ஞை இருப்பதாக நினைத்து, தன்னுடைய சொத்தில் பாதியை அந்த ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாகக் கொடுக்கவேண்டுமென்றும், பாக்கியை நான் வைத்துக் காப்பாற்றி என் குழந்தைக்குக் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னாள். அதன்படியேதான் ஐந்து லட்ச ரூபாய் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்குக் கொடுத்தேன், அப்பா!" என்றாள்.
இதையெல்லாம் அறிந்து சம்பு சாஸ்திரி எவ்வளவோ சந்தோஷமடைந்தார். மீனாவின் பேரில் தாம் கொண்ட சந்தேகம் தவறு என்று தெரிந்ததோடல்லாமல், தன் குழந்தைக்கு அடைக்கலம் அளித்தவள் அவள் தான் என்பதும் அவளுடைய சொத்துத்தான் இப்போது சாவித்திரியிடம் இருப்பது என்பதும் சாஸ்திரிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியளித்தது. ஆனாலும், அவருடைய ஆனந்தம் பரிபூரணம்டைவதற்குத் தடையாக இன்னும் ஒரே ஒரு குறை இருக்கத்தான் செய்தது.
நடந்து போனதையெல்லாம் சாவித்திரியும் ஸ்ரீதரனும் மறந்து மனம் ஒத்து வாழ வேண்டுமென்று அவர் விரும்பினார். கேஸில் சாவித்திரியின் பக்கம் தோற்று ஸ்ரீதரன் ஜெயித்தால் தான் இந்த விருப்பம் நிறைவேறுமென்று அவர் எண்ணினார். எனவே, "ஸ்வாமி! பகவானே! ஸ்ரீதரன் ஜெயிக்கட்டும், சாவித்திரி தோற்கட்டும்!" என்று அவர் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனை பலித்தது!