பாரதியாரின் தேசிய கீதங்கள்/3. நாட்டு வணக்கம்
Appearance
3. நாட்டு வணக்கம்
ராகம் - காம்போதி தாளம் - ஆதி
- எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
- இருந்ததும் இந்நாடே - அதன்
- முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
- முடிந்ததும் இந்நாடே - அவர்
- சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
- சிறந்ததும் இந்நாடே - இதை
- வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
- வாயுற வாழ்த்தேனோ? - இதை
- வந்தே மாதரம், வந்தே மாதரம்
- என்று வணங்கேனோ?
- இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
- ஈந்ததும் இந்நாடே - எங்கள்
- அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
- அறிந்ததும் இந்நாடே - அவர்
- கன்னிய ராகி நிலவினி லாடிக்
- களித்ததும் இந்நாடே - தங்கள்
- பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
- போந்ததும் இந்நாடே - இதை
- வந்தே மாதரம், வந்தே மாதரம்
- என்று வணங்கேனோ?
- மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
- வளர்த்ததும் இந்நாடே - அவர்
- தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
- தழுவிய திந்நாடே - மக்கள்
- துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
- சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
- அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
- ஆர்ந்ததும் இந்நாடே - இதை
- வந்தே மாதரம், வந்தே மாதரம்
- என்று வணங்கேனோ?