உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

63



றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப் போல மாணிக்கவாசகர் தனித்துவிட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைவர்களாக விளங்கினமையால்தான் “நால்வர்” என இணைத்துச் சிறப்பிக்கப் பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மாணிக்கவாசகர் என்று கொள்ளலாம்.

இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஒர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,

“நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதம்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்...”

என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள நரியைக் குதிரை செய்வானும் என்னும் பகுதியைக்கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மாணிக்க வாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்பட வில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல சித்தர் என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி