உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மனத்தின் தோற்றம்



“கின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுதகண்ணால்
'கன்று வரவு' என்று பல நல்உரை பகர்ந்தான்
என்றும் உள தென்தமிழ் இயம்பிஇசை கொண்டான்” (47)

என்பது பாடல். நெடியோன் = இராமன். அகத்தியன் குறளன் அல்லவா? அழுத கண்ணும் வரவேற்றது போன்ற குறிப்பு பாடலில் மறைந்து கிடக்கிறது. இப்பொழுது நல் வரவாகுக - Welcome - என்றெல்லாம் போடுவதை அப்போதே கம்பர் தொடங்கி வைத்து விட்டார்.

இந்தப் பாடலின் இறுதி அடியில் தமிழின் இரண்டு சிறப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று: என்றும் உள்ளது; மற்றொன்று இசை தருவது.

தமிழ், சமசுகிருதம், இலத்தீன் போன்ற பழம்பெரு மொழிகளுள் சமசுகிருதமும் இலத்தீனும் இப்போது வழக் கிழந்துள்ளன. தமிழ் என்றும் வழக்கு இழக்காமல் நிலையாய் உள்ளது. இது ஒரு சிறப்பு. இங்கே, மனோன் மணியத்தில் சுந்தரம் பிள்ளை பாடியுள்ள -

“ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து
ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே”

என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதி எண்ணத் தக்கது.

அடுத்தது: தமிழை இயம்பியதால் அகத்தியர் இசை (புகழ்) பெற்றாராம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இயம்பிய தமிழாசிரியர்கட்கு இது கிடைத்ததா? மற்ற பாடத்து ஆசிரியர்களின் பெயர்கட்குக் கடைசியில் தமிழாசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்டனவே - அதாவது - தமிழாசிரியர்கட்கு ‘இறுதி மரியாதை’ செய்யப் பட்டதே.