பொய்மான் கரடு/நகைக் கடை வியாபாரிகள்
நகைக் கடை வியாபாரிகள்
ஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் நாலு பேர் ஓரிடத்தில் கூடினால் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசுவது இயற்கையேயாகும். நகைக் கடை வியாபாரிகள் நாலு பேர் ஓரிடத்தில் சேர்ந்தால் தங்கம், வெள்ளி விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். மளிகைக் கடைக்காரர்கள் துவரம் பருப்பு மிளகாய் வற்றல் அல்லது மிளகு விலையைப் பற்றிப் பேசுவார்கள். பத்திரிகையாளர்கள் சிலர் ஓரிடத்தில் கூடினால் அந்த அந்தப் பத்திரிகைகளின் 'சர்க்குலேஷன்' என்ன, யார் அதிகப் பொய் சொல்லுகிறார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ஐந்தாறு பேர் சேர்ந்தால் எதைப்பற்றிப் பேசுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? சில நாளைக்கு முன்னால் ஒரு 'டீ பார்ட்டி'க்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் தாமதித்துச் சென்றபடியால் எங்கே உட்காரலாமென்று அங்குமிங்கும் பார்க்க வேண்டியதாயிற்று. ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் சிலர் சேர்ந்திருந்த மூலையிலே தான் ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே சென்று உட்காரும்படி நேர்ந்தது.
அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் தெரியுமா? 'கொலைக் கேஸுகளைப் பற்றித்தான். கொலை வழக்குகள் எந்த எந்த ஜில்லாக்களில் குறைந்திருக்கின்றன எந்த ஜில்லாக்களில் அதிகமாயிருக்கின்றன என்னும் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். 'மதுவிலக்குச் சட்ட அமுலுக்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன' என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு அபிப்பிராயப்பட்டார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. "கோயமுத்தூர் ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் முன்போலவே இருக்கின்றன; குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை" என்றார் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு. அதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை.
இன்னொருவர், "சேலம் ஜில்லாவில் கொலைக் குற்றம் அதிகமாகியிருக்கிறது" என்று சொன்னார். "அப்படியா? அது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் கேட்டார். "எப்படி என்றால், அப்படித்தான்! உண்மை அப்படியிருக்கிறது!" என்று முதலில் பேசிய ஹைக்கோர்ட் ஜட்ஜு கூறினார். இதற்கு அப்பீல் ஏது?
பார்ட்டி முடிந்தது. அவரவர்களும் எழுந்துசென்றார்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தனித்தனியே பிரிந்ததும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சேலம் ஜில்லாவில் கொலை அதிகமாயிருக்கிறது என்று ஒரு ஜட்ஜு சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஜில்லாவுக்கு நான் போயிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு கதை கேள்விப்பட்டேன். அந்தக் கதையில் முக்கியமான சம்பவம் ஒரு கொலைதான்! குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை! அதன் வரலாறு என் மனத்தில் வந்து வட்டமிட்டது. அதை சுற்றிச் செங்கோடக் கவுண்டன், செம்பவளவல்லி, பங்காருசாமி, சுந்தரராஜன், குமாரி பங்கஜா முதலியவர்கள் வட்டமிட்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் பொய்மான் கரடு, ஒரு பெரிய கரிய பூதம் தன்னுடைய கோரமான பேய் வாயைத் திறந்துகொண்டு நிற்பது போல் நின்று கொண்டேயிருந்தது.
சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு ஒரு சிநேகிதரின் மோட்டார் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். காலை நேரம். வானத்தை நாலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.
"இந்த ஜில்லாவில் மழை பெய்து ஆறு மாதம் ஆயிற்று. இன்றைக்குத்தான் மேகம் மூடியிருக்கிறது. மழை பெய்தால் நல்லது. ஒருவேளை மேகம் இன்றைக்கும் ஏமாற்றிவிட்டுப் போய்விடுமோ, என்னமோ?" என்று மோட்டார் டிரைவர் கூறினான்.
"இந்த ஜில்லாவில் மட்டும் என்ன? தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை!" என்றேன்.
"மற்ற ஜில்லாக்களில் மழை இல்லாததற்கும் இந்த ஜில்லாவில் மழை இல்லாததற்கும் வித்தியாசம் உண்டு ஸார்! இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது!" என்றான். மேகத்துக்கும் மழைக்கும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் 'விர்' என்று போய்க்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் சேலம் ஜில்லாவில் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள்தான். விஸ்தாரமான சமவெளிப் பிரதேசங்கள், இடையிடையே கரிய நிற மொட்டைப்பாறைகள். சோளமும் பருத்தியும் முக்கியமான பயிர்கள். மழையில்லாமையால் சோளப் பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருந்தன.
பாலைவனத்து ஜீவ பூமிகளைப்போல் அபூர்வமாக அங்கங்கே பசுமையான சிறு தோப்புகள் காணப்படும். அந்தத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு கேணி இருக்கிறதென்று ஊகித்தறியலாம். ஒவ்வொரு கேணியைச் சுற்றிலும் ஐந்தாறு தென்னை, ஒரு வேம்பு, இரண்டு வாழை, அப்பால் சிறிது தூரம் பசுமையான பயிர் இவற்றைக் காணலாம். கேணிகளில் கவலை ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். கேணிகளில் ஒரு சொட்டு ஜலம் இருக்கும் வரையில் விடாமல் சுரண்டி எடுத்து வயலுக்கு இறைத்து விடுவார்கள்!
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, குடியானவர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு தூற்றல் போடத் தொடங்கியது. சாலையில் சென்றவர்கள் மழைக்குப் பயந்து ஓடவும் இல்லை; ஒதுங்க இடம் தேடவும் இல்லை. வேகமாய் நடந்தவர்கள் கூடச் சிறிது நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து மழையின் இன்பத்தை அநுபவித்தார்கள்.
சற்றுத் தூரத்தில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன சிறுவன் ஒருவன் குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.
தூற்றல் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேகங்கள் சற்று விலகிச் சூரியன் எட்டிப் பார்த்தது. காலைச் சூரிய கிரணங்களில் மழைத் துளிகள் முத்துத் துளிகளாக மாறின. வானம் அச்சமயம் முத்து மழை பெய்வதாகவே தோன்றியது.
சாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு குடிசை வீடுகள் இருந்தன. ஒரு குடிசையின் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து மழையை அநுபவித்துக் கொண்டிருந்தார். கட்டிலில் விரித்திருந்த ஜமக்காளத்தை கூட அவர் சுருட்டவில்லை.
குடிசைகளை யொட்டியிருந்த சில்லறைக்கடை ஒன்றில் ஒரு வாழைப்பழக் குலையும், ஒரு முறுக்கு மாலையும் தொங்கிக் கொண்டிருந்தன. வீதி நாய் ஒன்று முறுக்கு மாலையை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. அதைக்கூடக் கவனியாமல் கடைக்காரப் பையன் மழையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
மோட்டார் வண்டி நின்றது. சாலையின் ஒரு பக்கத்தில் குடிசைகள் இருந்தன என்று சென்னேனல்லவா? இன்னொரு பக்கத்தில் ஒரு செங்குத்தான கரிய பாறை. அதற்கு முன்புறம் ஓர் அரசமரமும் வேம்பும் பின்னித் தழுவி வளர்ந்திருந்தன. அரச வேம்பு மரங்களைச் சுற்றிக் கருங்கல் மேடை எடுத்திருந்தது.
டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான். வேறு ஏதோ காரியமாக இறங்குகிறான் என்று நினைத்தேன்.
"ஸார்! கொஞ்சம் கீழே இறங்குங்கள்! உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன்!" என்றான்.
வேண்டா வெறுப்புடன், "இந்த வம்புக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டோ மே?" என்று அலுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன்.
"என்ன வேடிக்கை? எங்கே?" என்று கேட்டேன்.
"அதோ பாருங்கள்!" என்று சாலைக்கு ஐம்பது அடி தூரத்தில் செங்குத்தாக உயர்ந்திருந்த கரிய பாறையைக் காட்டினான்.
"என்னத்தைப் பார்க்கிறது? மொட்டைப் பாறையாக நிற்கிறதே! ஒரு மரம் செடி புல் பூண்டுகூடக் காணோமே?" என்றேன்.
"இல்லை, ஸார்! அவசரப்படாமல் நிதானமாய்ப் பாருங்கள்! பாறையில் ஒரு பொந்து மாதிரி இருக்கிறதே அதற்குள் பாருங்கள்! நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும்!", என்றான்.