பக்கம்:அவள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxvi

 

இருக்கும் நேரத்தில் என்னால் முழுக்கப் படிக்க முடியாது. வெள்ளோட்டம்கூட விட முடியாது. கண்ணோட்டம்தான் முடிந்தது. திருமதி பாதிமா நன்றாகச் செய்திருந்தாள். புத்திசாலித்தனமாகச் செய்திருந்தாள் என்பது முக்கியமில்லை. முதலில் இந்த விஷயத்தை ஆய்வுக்கெடுத்துக்கொண்டதே அவளுடைய துணிச்சலுக்குச் சான்று. புரியாத எழுத்தாளன் என்று எனக்குப் பேராச்சே! ஆங்காங்கே என்னை quote பண்ணியிருப்பதை அடுத்தடுத்துச் சேர்ந்தாற்போல் பார்க்கையில் எனக்கு ஒரு விதமாய்த் திகைப்பாயிருந்தது.

"என்ன பாதிமா, இதையெல்லாம் நானா சொன்னேனா? சொல்லியிருக்க முடியுமா?"

அவள் புன்னகைகூடப் புரியவில்லை. பணிவுடன் 'நீங்கள் என்னிடம் அவ்வப்போது பேசினதையெல்லாம் ஒலிப்பதிவு ஆயிருக்குதே! டேப் இருக்குது. இல்லா விட்டால் இவ்வளவு பெரிய workஐ நான் எப்படி செஞ் இருக்க முடியும்?' என்றாள்.

'எனக்கே இவையெல்லாம் ப்ரமிப்பாயிருக்கின்றன என்றேன்.

'ஐயா (மதுரை பாஷை, மரியாதை, பல சமயங்களில் அற்புதமாயிருக்கிறது), நீங்கள் வெளியிட்டிருக்கும் எண்ணங்கள், சிந்தனைகள் பல, எங்கள் எண்ணத்தின் சக்திக்கு அப்பாற்பட்டவை. அதேபோல், அவை வெளி வந்திருக்கும் சொல் உருவம், வார்த்தைக் கட்டுக்களும் எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இவை உங்கள் மூலம் வெளி வருவதற்கென்றே ஆண்டவன் உங்களைப் பிறப்பித்திருக்கிறார்’ என்று சொல்லி, உடனேயே என் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்

மெய்சிலிர்த்துப் போனேன். நான் பெருமை உணரவில்லை. ஒருவிதமான லேசான பயம்தான் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/26&oldid=1496088" இலிருந்து மீள்விக்கப்பட்டது