உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணன் பாட்டு/17. கண்ணம்மா - என் காதலி - 2

விக்கிமூலம் இலிருந்து

(பின் வந்து நின்று கண் மறைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்


மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபல நற் பகற்கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ... 1


ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,

ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்? என்று மொழிந்தேன். . ... 2


சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

திருமித் தழுவி என்ன செய்தி சொல் என்றேன்;

நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்ற நலங்கள் என்ன? பேசுதி என்றாள். ... 3


நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். ... 4