உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/வீரவாகுதேவர் தூது

விக்கிமூலம் இலிருந்து
சந்துமிகச்சொல்லி தான்விட்டார்சூரனுக்கு
சூரனிடத்தில் தூதாநீசென்றேகி
பாரமுள்ளகையிலை பருவதமுந்தேவருட
சிறைகளகற்றிவானோர் தேவரையும்நீயனுப்பி
திறவானாயாகச் சீமையரசாளுமென்று
இப்படியேஆகாட்டால் இன்றுகழித்தெட்டாம்நாள்
அப்படியேயுந்தனுக்கும் ஆனகந்தசுவாமியர்க்கும்
சண்டையென்று தான்கூறிவாவெனவே
அண்டர்பிரான்தூது அனுப்பினாரம்மானை
தூதன்மிகநடந்து சிவனேசெயலெனவே
காதமொன்றுதான்கடந்து கண்டானேசூரனையும்
கந்தசுவாமி கருத்தாயுரைத்ததெல்லாம்
அந்தவசுரனுக் கத்தூதன்றானுரைத்தான்
சூராகேள்கந்த சுவாமியருளென்றுரைக்க
ஏராதபாவி இகழ்த்தினானப்போது
தூதன்யென்றோன் போகாமல்துடர்ந்துமிகப்பிடித்து
பாதப்பெருவிலங்கில் பாவியென்றுரைத்தான்
ஆரடாநீதான் அறியாயோயென்பலன்கள்
பாரடவுந்தன் கந்தன்படுகிறதை
ஈசுரனுமெந்தனுக்கிருந்த இடமுமருளி
மாயனிடம்போயலையில் வாழ்ந்ததுநீகண்டிலையோ
எமலோகம்வான இந்திரலோகம்வரையும்
நவகோளு நானல்லவோ நாட்டமறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்ற தேவாதிகளுந்
நாற்பத்து நாற்கோடி ரிசி நமக்கென்றறிந்திலையோ
அறியாதவனே காண் ஆண்டிக்குத் தூது வந்தாய்
சிறியனென்றிராதே என்சிரசுடம்பு கண்டிலையோ
உந்தனுட கந்த னுயரமது நானறிவேன்
என்றனுட உயரம் இனி நீயறிவாயோ
ஆனதாலென்னுடைய ஆங்காரமத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக்கேயுரை நீ
என்றுமதமாயிவன்பேச தூதனுந்தான்
அன்றுவச்சூரனுக்கு அறையாமலேதுரைப்பான்
நீயோதானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்த்துப் பிடுங்கியுன்னை
கண்டயிடத்தில் கழுக்கள் மிகப்பிடிங்கி
கொண்டோடித் தின்ன வேலாயுதங் கொண்டு வந்தார்
தேவர் சிறையுந் தெய்வ மடவார் சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்கந் தீர்த்து
உன்னுடைய சேனை உற்ற படையழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வாரெங்கள் ஆறுமுகவேலவனார்
துரையாள கந்தசுவாமி சொல்லி அனுப்பினார்காண்
என்றேதான் தூதனிதை உரைக்கச் சூரனுந்தான்
அன்றே மனது உளந்துணிந்தேதுரைப்பான்
ஆனாலறிவோம் ஆண்டிதனையுமிங்கே
போனாலென்னோடே போருசெய்ய ஏவிடுநீ
சூரனிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிக நடந்து சொன்னான் சுவாமியர்க்கு
சுவாமி மிகமகிழ்ந்து சூரன்றனையறுக்க
காமி வேலாயுதத்தைக் கையிலெடுத்தாரம்மானை
வேலாயுதமெடுத்து வேதப்படை சூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசங் கலந்திருந்த மாயவரும்
வந்தார் காண் சூரன் வலுவிழந்தானம்மானை
சூரனவன் கண்டு தோசப்படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டாரீராறு கரத்தோன் மகிழ்ந்து
பண்டார வேசம் பண்பாய்யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தையவர் பார்த்து
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பிலிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தமையன் தளங்களிழவாதே
பர்ப்பக் கிரீடப் பவிசு இழவாதே
அற்பமிந்த வாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரண மீதில்லாமல் கவ்வையில்லா வாழ்ந்திருந்து
மரணம் வந்து ஜீவன் மாண்டு போகும் போது
நன்மையதுகூட நாடுமே அல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீர்ச்சையுடன் புத்தி செவ்வே நேரிட்டுலொரு
மோச்சமது தேட முடுக்கமது விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்க
புத்தி கெட்ட பாவி போர்ச்சூரனேதுரைப்பான்
இரந்து திரிகின்ற இரப்பனுக்குள்ள புத்தி
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலர்க்கு
ஏர்க்குமே ஞானம் இரப்போர்க்கல்லாது
ஆர்க்குமே செல்லாது ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தான்கூறித் தூதுவிட்ட
பண்டாரமென்ற படைக்காரனும் நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு கிடுவேனென்றதும் நீயோ
என்றேவச் சூரன் இயம்பி மிகநகைத்து
பண்டாரத்தோடே படையெடுத்தானம்மானை
சூரனுட படைகள் துண்டுதுண்டாய் விழவே
வீரர்களும் வந்து வெட்டினாரம்மானை
வெட்டதினால் செத்தார் மிகுசூரக் குலங்கள்
பட்டார்களென்று பார்சூரந்தான் கெட்டு
வந்தேயெதிர்த்தான் காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்ததென்று எம்பெருமாள் மகிழ்ந்து
வேலாயுதத்தை வீறுமா பதஞ்சேவித்து
மேலாம்பரனார் விமலனருளாலே
எறிந்தார் காண்சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தே வேலாயுதமும் பால்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் விண்ணவன் முன்பில் வந்து
சொன்ன மொழியெல்லாஞ் சூச்சமாய்க் கேளாமல்
இன்னிலமேல்ப் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடனுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையுமுன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
தந்துவிட்ட சொல்ப்படிக்கு தந்து அரசாளாமல்
விந்து குலங்களற்று வீணா நீ மாண்டாயே
மாளா வரங்கள் மகாகோடி கற்றோமென்று
பாழாக மாண்டாயோ பண்டாரங் கையாலே
என்றந்த ஆதி இத்தனையுந்தான் கூற
முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதாய்
என்னையோ கொல்ல இரப்பனாலேலுவது
உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான் துணிந்தால்
வேலாயுதத்தாலே வென்று கொன்றதல்லாது
ஏலாதுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரன் குறவுயிரை அம்மானை
சூரனைத் துணித்த சத்தி சூலமுங் கடலில் மூழ்கி
வீரமதால் பதத்தை போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னே மூர்ச்சூலமதாய் சபித்த சாபம்
தீரவேவேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்