வலிமைபெற்று வந்திருக்கின்றன. உழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கெளரவிக்கப்பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக்கூடச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது. அதீதமான உடமை உரிமைகள் சந்து பொந்துகளுக்கு இடமின்றித் தவிர்க்கப்படவேண்டும். இந்தப் புதினத்தை நான் உருவாக்கிய காலத்தில் சமுதாய மனச்சாட்சி என்ற ஒன்றைத் தேடிய காலமாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். காவிரித்தாய் தன் கரங்களால் மண் அன்னையைத் தழுவிப் பிரியாவிடை கொள்ளும் இப்பிரதேசத்தில் அவள் வன்மையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். தனது மக்கட்செல்வங்கள் அனைவரும் வளமையுடன் வாழவேண்டும் என்ற அந்த இயற்கைத் தாயின் நியாயங்களை மனிதர் மதித்திருக்கவில்லை. தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும்போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும், வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள். இன்னமும் மிடிமைகளில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதர்களை நான் சந்தித்து. அவர்களுடன் மனமொன்றிப் பழகும் வாய்ப்பைத் தர எனக்குப் பல நண்பர்கள் ஆதரவளித்து உதவி புரிந்திருக்கின்றனர். அவர்களில் இருவரை மிக முக்கியமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குப் பழக்கமில்லாத சேற்றிலும், வயல் வரப்புக்களிலும் இம்மக்கள் குடியிருப்புக்களிலும் என்னுடன் துணையாக வந்தும். வேறுவகைகளில் ஆதரவளித்தும் திருமதிகள் மீனாட்சி சுந்தரத்தம்மாளும் ஏனங்குடி இராஜலட்சுமியும் எனக்குப் பேருதவிகள் புரிந்திருக்கின்றனர். ஒரு வாழ்வை நுணுகி அறிவதற்கு இத்தகைய நேர் அநுபவங்கள் இன்றியமையாதவை அன்றோ? எனக்குப் பல செய்திகளை ஆர்வத்துடன் கூறி உதவிய பலதரப்பட்ட சோதரர்களுக்கும் சோதரிகளுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். எனது ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்துவரும் பாரி புத்தகப் பண்ணையாரே. இந்த நூலையும் கொண்டு வருகிறார்கள். நூல் வடிவில் கொண்டுவரும்போது ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் முனைந்து நிறைவேற்றித் தரும் பாரி புத்தகப் பண்ணை திரு. கன. முத்தையா அவர்களுக்கும், இளவல் கண்ணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகரிடையே இந்நூலை வைக்கிறேன். _ - ராஜம் கிருஷ்ணன்
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/8
Appearance