உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

13


ஒரு ருபாய் பாரமில்லை. மதியம் துணி மடிக்க அவள் வரவில்லையென்றால், இவளே இப்போது அவற்றைப் பிழிந்து உலர்த்த வேண்டும்!

மாயாவுக்குக் கதவைச் சாத்திவிட்டு, மடியாகச் சாதம் பருப்பு குக்களில் வைத்துச் சமையலைத் தொடங்குகிறாள். பாயாசம் வைக்கச் சொல்லி உத்தரவாகி இருக்கிறது. இவள் துணிகளைப் பிழிந்து உலர்த்தி விட்டு, நிவேதனத்துக்குச் சித்தமாகப் பாயாசத்தையும் முடிக்கிறாள்.

ஜபம், பாராயணங்கள் எல்லாம் முடிந்து தெய்வங்களுக்கு நிவேதனமும் ஆகும் நேரத்தில் வாசலில் மணி அடிக்கிறது.

இந்நேரத்தில் யார்... வருகிறார்கள்?

கிரிஜா வாசற் கதவைத் திறக்கிறாள். பம்மென்று கூந்தல் எழும்ப அலங்காரக் கோலத்தில், கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் மல் வெடவெட என்று உயர்ந்து...

“என்ன கிரி? என்னைத் தெரியலையா?...கல்பனாவின் தங்கை ரத்னா. உங்க மாமியாரின் பேத்தி!”

கிரிஜா ஒரு சிரிப்பை நெளிய விடுகிறாள். 'ஓ...அடையாளமே தெரியாமே இளச்சிப் போயிட்டே... தலையை வேற எப்படியோ பண்ணிட்டிருக்கே... வா வா...”

“நீ வரோதேன்னாலும் வரத்தான் போகிறேன். வந்துட்டேன்...”

தோளில் கையைப் போட்டுக் கொள்கிறாள். கிரிஜா கூசி உதறும் வகையில் குறுக்கிக் கொள்கிறாள். “ஏய், என்ன மாமியார் மடியா? எப்படி இருக்கா பாட்டி?”

கைப்பெட்டியை முன் அறையில் வைக்கிறாள். முன் அறையின் கம்பளங்களையும் மூலை அலங்காரங்களையும் சுவரில் தொங்கிய ‘பதிக்’ ஒவியங்களையும் நடுவில் தொங்கிய படிக விளக்குகளையும் பார்த்து பிரமிக்கிறாள்!