பொங்குமாங்கடல்/பேச்சு
இந்தப் பேச்சு எனக்கு எவ்வளவு பரபரப்பை உண்டாக்கியது என்று உமக்குச் சொன்னால் கூடத் தெரியாது. அந்தப் பெண்பிள்ளை யார், அவள் யாரிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறாள் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் ஏற்பட்டது. ஆகவே விரைவாக நடையைக் கட்டினேன். முன்னால் சென்றவர்களை நெருங்கினேன். சுமார் இருபத்தைந்து வயதுள்ள பெண்ணும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரியவரும் போய்க் கொண்டிருந்தார்கள். பெரியவர் செண்பகாதேவி கோயிலின் பூசாரி என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் மெதுவாக நடந்தாலும், நான் வெகு விரைவாக நடந்ததாலும் மலைப்பாதையில் அவர்களைத் தாண்டிச் சென்றேன். தாண்டி ஐந்தாறு அடி தூரம் சென்றதும் அந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்று தெரிந்து கொள்ளுவதற்காகத் திரும்பிப் பார்த்தேன். பாண்டிய நாட்டுக் குடியானப் பெண்களைப் போல ஒல்லியாகவும், உயரமாயும் இருந்தாள். முகத்தில் நல்ல களை இருந்தது. கூந்தலை அழகாக எடுத்துக் கட்டிச் செருகியிருந்தாள். இதையெல்லாம் கவனிக்க எனக்கு ஒரு கண நேரந்தான் பிடித்தது. உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு விடுவிடுவென்று மேலே நடந்தேன். இப்போது நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனே, இதே இடத்தில், முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்பு சடாமகுடதாரியான ஒரு சாமியார், ஒரு வெள்ளிக்கிழமை நடுப்பகலில் உட்கார்ந்திருந்தார். செண்பகாதேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தண்ணீர் கொண்டு போவதற்காக ஓர் இளம் பெண் இங்கே வந்தாள். அவள் முதலில் சாமியாரைக் கவனிக்க வில்லை. அவள் குனிந்து குடத்திலே தண்ணீர் மொண்ட போது, சாமியார் கனைத்தார். அதைக் கேட்டு அப்பெண் சாமியாரைப் பார்த்தாள். அருகில் வந்து கும்பிட்டாள். "பெண்ணே! உன் மனதில் ஏதோ கவலை இருக்கிறது!" என்றார் சாமியார். "ஆமாஞ்சாமி! தங்களைப் போன்ற பெரியவர்தான் தீர்த்து வைக்க வேணும்!" என்றாள் அந்தப் பெண். "அப்படியே தீர்த்துவைப்போம்! என்ன கவலை, சொல்!" என்று சாமியார் கேட்டார்.
"தங்களுக்குத் தெரியாதா சாமி, இந்தப் பொன்னியம்மா சொல்லித்தானா தெரிஞ்சுக்க வேணும்!"
நம்பிக்கையும் சந்தேகமும் பொன்னியம்மாள் மனதை குழப்புவதாகச் சாமியார் ஊகித்துக் கொண்டார்.
"ஆகட்டும்; நாமே சொல்கிறோம்; உன் புருஷன் விஷயமாகக் கவலைப்படுகிறாய். அவனுடைய நடத்தை ஓர் ஆறு மாத காலமாகச் சரியாக இல்லை. வேளா வேளையில், காலாகாலத்தில் வீட்டுக்கு வருவதில்லை. இரவு நேரங்களில் வெளியே போகிறான். ஊர் விட்டு ஊர் போகிறான். காரணம் சொல்ல மாட்டேனென்கிறான். சில சமயம் நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு வைச்சுக்கிறான். இதெல்லாம் உண்மையா, இல்லையா?" என்றார் சாமியார்.
"ஆமாஞ்சாமி! தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே, சாமிதான் என் புருஷனை காப்பாத்த வேணும். என்னைக் குடியும் குடித்தனமுமாய் வைக்க வேணும்" என்று பொன்னியம்மாள் கண்ணீருடன் கூறினாள்.
"ஆகட்டும், காப்பாத்துகிறேன். ஆனால் நீ என்னிடம் நம்பிக்கை வைக்க வேணும். ஒரு விஷயத்தில் நிஜத்தைச் சொல் பார்க்கலாம். இந்த இரண்டு மூன்று நாளிலே உன் வீட்டைத் தேடி யாராவது அசலூர்காரர்கள் வந்ததுண்டா? உன் புருஷனுக்கு ஏதாவது செய்தி சொன்னதுண்டா?"
"உண்டு, சாமி! முந்தாநாள் செங்கோட்டை ஆள் ஒருத்தர் வந்தாரு. நாளை ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் தூத்துக்குடி கடற்கரையிலே கூட வேணும் என்றும், கையிலே அடையாளத்துக்கு ஒரு கிளிஞ்சல் வச்சிருக்க வேணும் என்றும் சொன்னாரு. எதுக்கு, என்னத்துக்கு என்று எனக்கு ஒண்ணும் தெரியாது! அசலூர்க்காரங்க வந்தாலே எனக்குச் சந்தேகம். சாமி! ஒளிஞ்சிருந்து கேட்டதை உங்களிடம் சொன்னேன்."
"நல்ல காரியம் செய்தாய். நீ கொஞ்சமும் கவலைப்படாதே. உன் புருஷன் ஒரு மலையாளத்து மந்திரவாதியிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவனை நான் காப்பாத்திக் கொடுக்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை இந்த இடத்திலேயே என்னை வந்து பாரு! இன்னும் சில செய்தி சொல்லுகிறேன்!" என்றார் சாமியார்.
இதற்குள் கோயிலுக்குள்ளேயிருந்து "பொன்னியம்மா!" என்று பூசாரி கூப்பிடும் சத்தம் கேட்டது.
"இதோ வந்துவிட்டேன்" என்று பொன்னியம்மாவும் உரத்த குரலில் கூறினாள்.
சாமியார் அவளை உற்றுப் பார்த்து, "ஜாக்கிரதை! என்னிடம் பேசிய விஷயம் யாருக்கும் சொல்லப்படாது. பூசாரிகிட்டக் கூடச் சொல்லக்கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும். உன் புருஷன் உனக்குக் கிட்ட மாட்டான்!" என்று எச்சரித்தார்.