1.குலமுறை கிளத்துப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

1. குலமுறை கிளத்துப் படலம்[தொகு]

என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்கமுள் ளோரே என்கதை கேளும்!
நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்தும்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே!
ஏழையென் துயரம் எல்லாம் கேளும்,
காசினி மீதென் கதைபோல் இல்லை.
சீதையின் கதையும் சிறுகதை யாகும்,
பாஞ்சாலியின்கதை பழங்கதை யாகும்,
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை

கவிமணி அவர்கள் பற்றி

“ஸ்ரீ சி.தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் முற்போக்காளரில் முதன்மை பெற்றவர். ‘மலபார் குவார்ட்டர்லி ரிவியூ’ என்ற பத்திரிகையில், இவர்கள் நாஞ்சினாட்டு வேளாளரைக் குறித்து எழுதிய ஆங்கிலக்கட்டுரை, அதுகாறும் உறங்கிக் கிடந்த வேளாளரின் கண்களைத் திறந்து விழிக்கச் செய்தது. பிள்ளையவர்களுடைய தூய உள்ளமும் சீரிய நோக்கமும் மனத்தைக் கவர்ந்தன. நாஞ்சினாட்டு வேளாள் சமுதாயம் பலவகை இன்னல்களும் நீங்கி அதற்குரிய உயரிய நிலையை அடைய வேண்டுமென்ற ஆழ்ந்த உணர்ச்சி அவர்களுடைய சம்பாஷணைகளிலும் எழுத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அவர்கள் தமிழ் இலக்கியங்களில் ஊறியவர்கள்; தமிழ் மக்களுடைய சரிதத்தை நன்கு உணர்ந்தவர்கள்; தமிழர்களுடைய உயர்ந்த லட்சியங்களிலும் ஒழுக்க நியதிகளிலும் ஈடுபட்டவர்கள்; ஆங்கிலக் கவிஞர்களின் அறிவுரைகளில் திளைத்தவர்கள்; பிற சமுதாயச் சரித்திரங்களை ஊன்றி நோக்கியுணர்ந்தவர்கள்; நாஞ்சினாட்டு இளைஞர்களுக்கு ஒரு லட்சிய புருஷராக உள்ளவர்கள்; ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர்கள்; ஆதலால், பிரசங்க மேடைகளிலோ, பிரசங்கக் கூட்டங்களிலோ அவர்களைக் காணுதல் அரிது. ஆனால், அமைதியோடும் உள்ளுணர்ச்சியோடும் தங்கள் சமுதாய நன்மையின் பொருட்டு இடைவிடாது உழைத்து வந்தார்கள். அவர்கள் உழைப்பில் சுயநலம் என்பது சிறிதும் இருப்பதற்கிடமேயில்லை. தூய வாழ்க்கையையுடையவர்கள்; சந்தானம் அற்றவர்கள்; எனவே, அதுபற்றிய பாசபந்தங்களும் அற்றவர்கள்; இல்லறத்தேயிருந்தும் துறவியே.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” (45)

என்ற வள்ளுவர் குறளுக்கு லட்சியமாயுள்ளவர்கள். எப்பொழுதும் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் கவித்வ நிவேதனத்திலும் வாழ்ந்து வருபவர்கள். தாம் ஆற்றவேண்டும் அரிய முதற் கடமையாகும் என்று நினைத்தே, தமது சமுதாயச் சீர்திருத்தத்திலும் சட்டச் சீர்திருத்தத்திலும் பிள்ளையவர்கள் முனைந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில்நான் திருவனந்தபுரத்தில் பிள்ளையவர்கள் அருகில் வசித்து வந்தேன். ஆதலால் இங்கே எழுதுவனவெல்லாம் எனக்கு நேரில் தெரிந்தவையே. சட்டத்தைச் சீர்திருத்தும் விஷயமாகப் பல நண்பர்களும் பிள்ளையவர்களைக் கண்டு கலந்துகொண்டு சென்றார்கள். ‘ஸ்ரீமூலம் பிரஜாஸபை’யின் அங்கத்தினர் பலர், பிள்ளையவர்கள் கூடவே தங்கியிருந்து சட்ட விஷயமாக விவாதித்துப் பரிசீலனை செய்துவந்தார்கள். தமது சமுதாயத்தினர் சுயநலத்தின் காரணமாகச் சீர்திருத்தத்திற்கு இணங்காமற் போய்விடுவார்களோ என்ற கவலை பிள்ளையவர்களுக்கு இருந்தது. இக்கவலை மனத்திற் பட்டவுடன், ‘நாஞ்சினாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள்’ முதலிய பல துண்டுப் பத்திரங்களை வெளியிட்டார்கள். சமுதாயத்தின் பரிதாபகரமான நிலையைச் சித்திரித்துக் காட்டினால், தம்மவர்கள் உண்மையுணர்ந்து சீர்திருத்த விஷயத்தில் ஒரு முகமாய் உழைப்பார்கள் என்று பிள்ளையவர்கள் கருதினார்கள். இதுதான் நாஞ்சினாட்டு மருமக்கள் வழி மான்மியத்தின் உற்பத்தியாகும்.”
-எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் முன்னுரையிலிருந்து


உமியாம் தவிடாம் ஊதும் பொடியாம்.
கேளும்! கேளும்! என்கதை கேளும்!
பதும நாபன் பாத பங்கயம்
அணிமுடி யாக அணிதிரு மூல
மன்னர் புரக்கும் வளமலி வஞ்சி
நாட்டிற் சிறந்த நாஞ்சில் நாட்டில்
தொல்லூ ராகும் நல்லூ ரதனில்
மேழிச் செல்வம் விரும்பும்வே ளாளர்
குலத்திலோர் எளிய குடியிற் பிறந்தேன்
தந்தைநோ யாளி, தாயுமோ ரேழை.
அண்ணன் தம்பிகள் ஐவரும் மாண்டார்.
அக்காள் தங்கையும் இல்லை, அடுத்தவர்
உற்றார் உறவினர் ஒருவரு மேயிலை;
ஒருதடி நிலமும் ஓரணை ஏரும்
ஒருசிறு குடிலும் உண்டெமக் காஸ்தி.
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒருகழி நூலாம்,
ஒருநாள் போதுமோ! இருநாள் போதுமோ?
முற்றும் கேளும் முடிவையும் பாரும்!
தாழையம் பதிக்குத் தலைவர்- அவர்பெயர்
ஏழையான் சொல்வது இசையுமோ! அம்மா!
பாவியாம் என்னைப் பதினா றாண்டில்
ஐந்தாம் மனைவி யாக மணந்தனர்
கணவர் வீட்டுக் கதையினைக் கேளும்,
மனைவியர் வேலை வகையினைக் கேளும்,
தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி!
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி!
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி!
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி!
அத்தனை பேருக்கும் அடிமை யாளாய்
ஏழை பாவி யானும் ஒருத்தி
எளியேன் சென்ற நாள்முத லாக
எல்லா வேலையும் என்தலை மேலாம்
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.
பெரிய அக்காள் பெருமாப் பிள்ளை,
“ஏனடி அம்மா! யான்ஏ காங்கி,
உரிய அரிசி உண்டெனில் சோறு,
உழக்குக் குறுநொய் உண்டெனில் கஞ்சி,
மக்களைப் பெற்ற மகரா சிகள்நீர்
உண்ண வேண்டும் உடுக்க வேண்டும்
உழைத்துப் பொருளுண் டாக்க வேண்டும்
எனக்கினி யிங்கே யாதுண் டம்மா?”
என்று பெருமூச் செறிந்து சொல்லி,
இருந்த இடம்விட் டகலவே மாட்டாள்.
அடுத்த அக்காள் அழுபிள்ளைக் காரி,
அடமும் கொஞ்சம் அதிகமாக் கொண்டவள்,
அம்மா மிளகை அரைஎன் றால்உடன்
அவள்கை மதலை அழுவது கேட்டிடும்
பிள்ளைக் குணமோ, பிடுங்கிவைப் பாளோ
என்ன மாயமோ யானேதும் அறியேன்!
மூன்றாம் அக்காள் முழுச்சோம் பேறி
அன்றியும்,
மூன்று மாதமாய் முழுகவு மில்லை!
வாயா லெடுப்பாள் வயாக்கோட் டியினால்,
ஏறின கட்டில் இறங்கவே மாட்டாள்.
இனியோர் அக்காள் எடுப்புக் காரி
இந்தி ராணியும் ஈடில்லை, இவளது
மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும்
சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும்
கோல உடையும் குலுக்கு நடையும்
கொண்டை யழகும் கண்டு, கணவர்
அண்டையி லிருந்து அகலவே ஒட்டார்,
‘தங்கப் பெண்ணே தாராவே!
தட்டான் கண்டால் பொன் என்பான்
தராசிலே வைத்து நிறு என்பான்
எங்கும் போகாமல் இங்கே யேயிரு’
என்று சொல்லுவ திவட்கே இசையும்,
இவள்,
அடுக்களை வந்திடாள் - அரக்குப் பாவையோ?
கரிக்கலம் கையெடாள் - கனக சுந்தரியோ?
வாருகோ லேந்திடாள் - மகராணி மகளோ?
வெயிலில் இறங்கிடாள் - பொன்மலர் இதழோ?
குடத்தை எடுத்திடாள் - குருடியோ நொண்டியோ?
வஞ்சகி இவள்செய் தலையணை மந்திர
உபதேசங்களை உண்மையென் றெண்ணிக்
கணவன் ஒவ்வொரு காலத் தெங்களைப்
படுத்திய பாடெல்லாம் பகர்வதும் எளிதோ?


பார்க்க[தொகு]

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
[[]] :[[]] :[[]] :[[]] :[[]] :[[]]