சாதிக்கொடுமை

விக்கிமூலம் இலிருந்து

சாதிக்கொடுமை[தொகு]

கவிமணி[தொகு]


1. ஒற்றுமையே உயிர்நிலை[தொகு]


1. ஒற்றுமையாக உழைத்திடுவோம்- நாட்டில்
உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்
வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.

2. கூடி விருந்துண்ண வேண்டவில்லை - பெண்ணைக்
கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை
நாடி எவரொடும் நட்பினராய்த் - தேச
நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?

3. கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டுச் - சாதி
கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு,
பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று -நிதம்
பல்லவி பாடிப் பயன் எதுவோ?

4.வேதன் முகத்தில் உதித்தவரே - இங்கு
மேலாயெழுந்த குலத்தினராம்!
பாத மதில் வந்த பாவியரே - என்றும்
பாரில் இழிந்த அடிமைகளாம்!


5. வாயில் விடம்உண்டு பாம்பினுக்குக் - கொடும்
வாலில் விடம்உண்டு தேளினுக்கு
தாயிற் சிறந்த பிரமனுக்கும் - இரு
தாளில் விடம் உண்டோ? சாற்றுவீரே!

6. உச்சி மரத்திற் சுவைக் கனியும்- தூரில்
ஓடிப் பரந்தெழும் வேரதனில்
நச்சுக் கனியும் பழுத்த பலாமரம்
நானிலத் தெங்குமே கண்டதுண்டோ?

7. சாதி இரண்டலால் வேறுளதோ? ஔவைத்
தாயின் உரையும்மறந் தீரோ?
ஆதி இறைவன் வகுத்ததுவோ? - மக்கள்
ஆக்கிய கற்பனை தான்இதுவோ?

8. நாயனார் வந்த திருக்குலத்தை - உயர்
நந்தனார் வந்த பெருங்குலத்தைத்
தீயகுலம் எனத் தள்ளுவரேல் - அது
தெய்வம் பொறுக்கும் செயலாமோ?


9. வேதியராலே மழைவருமேல் - வயல்
வேலை செய்யாது விளைந்திடுமோ?
வாதமெலாம் கட்டி வைத்திடுவோம் - ஒத்து
வாழ்வதை மேற்கொண் டுழைத்திடுவோம்.

10. வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை
வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த
நாடகம் ஆடல் நகைப்பலவோ?

11. மானமே வாழ்வின் உயிர்நிலையாம் - அதை
மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்
ஈனச் சாதியெனும் பேச்சினைப்போல் - நெஞ்சை
ஈர்ந்திடும் வாளொன்றும் வேறுளதோ?

13. மன்னுயிர்காக முயல்பவரே - இந்த
மானிலத் தோங்கும் குலத்தினராம்!
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா!

2. தீண்டாதார் விண்ணப்பம்[தொகு]


(ஆண்டிப் பண்டாரம் மெட்டு)


1. விண்ணப்பஞ் செய்தோம் - விடையை
வேண்டிக் கொள்கின்றோம்.

2. கண்ணப்பன் பூசைகொளும்
கடவுள் திருக்கோயிலிலே,
நண்ணக்கூடாதோ? நாங்கள்
நடையில் வரல் ஆகாதோ?

3. என்பினையும் தோலினையும்
ஏந்துகின்ற சிவபெருமான்
அன்பர்எமக் காலயத்தில்
அருள் செய்ய மாட்டாரோ?

4. சிலந்திக்கும் வரமளித்த
சிவபெருமான் திருவடியை
நலம்பெறவே கண்டுநாங்கள்
நமக்கரித்தால் ஆகாதோ?

பாடல் குறிப்புகள்

1. சிலந்திக்கு வரம் அளித்தது திருவானைக்காவில்! முற்பிறப்பில் சிவபெருமானை வழிபட்ட சிலந்தியே, மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தது என்பது புராணக் கதை.(4)
2. ‘பெற்றான் சாம்பான்’ என்ற தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த அடியானுக்கு உமாபதி சிவாசாரியர் ஆகிய அந்தணர் முத்தி கொடுத்தார் என்பதைச் சுட்டுவது,(5).
3. நந்தனார் கதை அனைவரும் அறிந்ததே! (6)
4. திருமால் பறைச்சிக்குத் திருக்குறுங்குடியில் அருள் செய்ததனைச் சுட்டுவது (8)
5. பாணர்- திருப்பாணாழ்வார், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அவரைத் திருவரங்கக் கோயிலுக்குத் தோளில் சுமந்துகொண்டு வரும்படி திருவரங்கப்பெருமான், கோயில் பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட்ட கதையைக் குறிப்பது. (9)

5. <u<பெற்றான் சாம்பானுக்குப்
பேறளித்த பெருமானை
வற்றாத அன்போடு யாம்,
வணங்குதலும் வழுவாமோ?

6. நந்தனுக்குப் பதமளித்த
நடராசன் எங்களுக்கும்
சொந்தம்எனக் கூறுவதில்
சொல்லிழுக்கும் உண்டோ? ஐயா!

7. நந்தனுக்குப் பதமளித்த
நடராசன் கோயிலிலே
வந்தனைகள் செய்துநாங்கள்
வழிபடுதல் முறையலவோ?

8. பண்ணமையப் பாடிவந்த
பறைச்சிக்கும் பரிசளித்த
கண்ணபிரான் திருவடியாம்
கண்டுதொழல் ஆகாதோ?

9.பார்ப்பார்கள் தோள்சுமந்து
பாணரைமுன் திருக்கோயில்
சேர்த்தார்கள் என்றகதை
தெரியாதார் உண்டோ? ஐயா!

10. கள்ளுடனே ஆடுகோழி
கலந்துண்ணும் காளிதேவி
உள்ளிருக்கும் கோயிலிலே
உரிமை எமக் கிலையோ? ஐயா!

**[தொகு]

11.கள்ளுடனே ஆடுகோழி
கலந்துண்ணும் காளிதேவி
பள்ளர் எம்மைக் கண்டவுடன்
பயந்தோடிப் போவாளோ?

12. காப்பாற்றி நமையாளும்
கடவுளரும் மக்களுள்ளே
பார்ப்பார்கள் பறையரென்ற
பகுப்பேதும் வைத்ததுண்டோ?

13. கோவிலிலே தீட்டேறிக்
குடிபுகுமோ? குளிப்பவரின்
பாவமெல்லாம் கங்கையிலே
படிந்திடுமோ? கூறும் ஐயா!

14. தேவிருக்கும் கோயிலிலே
சென்றுநமக் காரம்செய்து
பாவமெல்லாம் போக்கில் எம்மைப்
பாரிடமும் தாங்காதோ?

15. பூவாரம் அணிந்தபிரான்
பொன்னடிக்கீழ் நின்றெளியேம்
தேவாரம் பாடில் அவர்
செவிக்கின்பம் ஆகாதோ?


16. பாவிகளை ஈடேற்றிப்
பதம் அளிக்கும் பரமசிவம்
கோவிலிலே எமைக்கண்டால்
குடிமுழுகிப் போய்விடுமோ?

17.காணுதற்குக் கண்அளித்த
கடவுளடி கண்டுதொழ
வேணுமென்று மனிதருக்கும்
விருப்பமெழல் அதிசயமோ?

18. அண்டமெல்லாம் காக்கும் ஈசன்
ஆலயத்தில் மக்கள் எம்மைக்
கண்டகண்ணைக் கழுவுவரோ?
கருணைசெய்ய மாட்டாரோ?

19. தரும்உரு வாம் ஈசன்
தமிழரையும் கண்டவுடன்
கருணைவிழி அடைப்பாரோ?
கனல்விழியைத் திறப்பாரோ?

20. குற்றமிலா எமைக்கண்டு
கோயிலையும் அடைக்கலாமோ?
பெற்றவரைக் காணவரும்
பிள்ளைகளைத் தடுப்பாருண்டோ?

**[தொகு]

21. ஆண்டவனைக் கண்டுதொழ
ஆசைஎமக் கெழுந்திடாதோ?
நீண்ட மரஞ்செடியோ? நாங்கள்
நெடும்பாறை தானோ? ஐயா!


22. பத்தியொடு கோயில்சென்று
பணிந்துபதம் பெறுவோமேல்
முத்தியிடம் போதாமல்
முழுமோசம் வந்திடுமோ?

23.வனத்தில்ஒரு மரமாக
வளர்ந்தோமிலை, மானிடரின்
இனத்தினிலே பிறந்த இடர்
இனிப்போதும் போதும் ஐயா!


24. தாகம் என்று வருபவர்க்குத்
தண்ணீரை அளியாமல்
ஆகமங்கள் ஓதிநிற்றல்
அழகாமோ? அறமாமோ


25. ஆலயத்திற் சென்றுதொழ
ஆணையிடும் ஔவைமொழி
ஞாலமிசை எங்களுக்கும்
நன்மைதராப் புன்மொழியோ?

26. ஆவுரித்துத் தின்பரேனும்
அரனடிக்கீழ் அன்பர்எனில்
தேவர்அவர் என்றுரைக்கும்
திருமொழியும் வெறுமொழியோ?
(திருமொழி- அப்பர் தேவாரம்)

27. சாதியினால் குறைவில்லை
தாழ்ந்தவரும் பத்தியினால்
வேதியரிற் பெரியர் என
விளம்புமொழி வீண்மொழியோ?

28. சண்டாளர் ஆனாலும்
சக்கரத்தான் அடியவரேல்
கொண்டாடத் தக்கார் எனக்
கூறுவதும் பொய்ம்மொழியோ?
கூறுவது: பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் ‘அட்டப்பிரபந்தம்’.

29.சாவியிட்டுப் பூட்டுமிட்டுச்
சந்நிதியில் காவலிட்டுத்
தேவிருக்கும் கோயிலைநீர்
சிறைச்சாலை ஆக்கலாமோ?

30. கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பருளும் களிப்பினைநீர்
பொல்லாதார் பொருளெனவே
பூட்டிவைப்ப தழகாமோ?

**[தொகு]

31.நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நலமளிக்கும் நலத்தினைநீர்
கல்லாலே கோட்டைகட்டிக்
கடுங்காவல் செய்யலாமோ?

32. காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்ணளிக்கும் கண்ணுதலை
வீணாக மூடிவைத்து
விளங்காமற் செய்யலாமோ?

33. எல்லார்க்கும் வரமளிக்கும்
எம்பெருமான் ஆலயங்கள்
வல்லார்க்குச் சொந்தம்என
வழக்காடல் முறையோ? ஐயா!

34. சாத்திரங்கள் கண்டறியோம்
சரித்திரங்கள் படித்தறியோம்
சூத்திரங்கள் செய்யாமல்
துணைசெய்ய வேண்டும், ஐயா!

35. பதவியில்லை, பணமில்லை
படிப்பேதும் இல்லை எமக்கு
உதவிசெய்ய உங்களுக்கு
உள்ளம் இரங்காதோ?ஐயா!

36.வையகத்தில் ஏழைகளும்
மானிடராய்ப் பிறந்துவிட்டோம்
உய்யவழி தேடுகின்றோம்
உதவிசெய்ய வேண்டும், ஐயா!

37. வேண்டாத வாதம் இன்னும்
விளைப்பீரோ? அடிகளையும்
தீண்டாமைப் பேய்க்கு உயிரைத்
தியாகமிடச் செய்வீரோ?
(அடிகள் இங்குக் காந்தியடிகளைக் குறித்தது.)

38. நாடாளக் குடியரசு
நாடுவார் ஆலயத்தில்
நீடாகத் தனிஅரசு
நிலைநாட்டத் துணியலாமோ?

3. ஹரிஜனர்க்காக வருந்தல்[தொகு]

((“நினைப்பதெப்போது நெஞ்சே -
ஈசன் பதத்தை நினைப்ப தெப்போது நெஞ்சே!”
- எனும் மெட்டில் அமைந்த பாடல்.)


1. இந்தப் பிறப்பு வேண்டாம் - இதுவொழிய
எந்தப் பிறப்பும் வரட்டும்!

2.நொந்த புண்ணிலேஎரி
பந்தம் இடுவதுபோல்
சந்ததம் ஹரிஜன
நிந்தனைசெய்திடும்....(இந்தப்)

3. சாதி வெறியினால் வி-
ரோதிக ளாகி மக்கள்
வீதி வருவதும் அ-
நீதி என உரைக்கும்... (இந்தப்)

4. வழியில் விழுபவரைத்
தழுவி யெடாது படு-
குழியில் உருட்டிப் பெரும்
பழியை நிதமும் தேடும்....(இந்தப்)

5. உண்ணீர் விரும்பி வீட்டை
நண்ணி ஒருவன் நின்று
கண்ணீர் விடினும் செம்பில்
தண்ணீர் அளித்திடாத....(இந்தப்)

6. முங்கிக் குளிக்கக் குளம்,
தங்கி யிருக்க இடம்
எங்கு மிலா தெளியர்
பங்கப் படும் புவியில்....(இந்தப்)

7. ஈசன் அடி பணிய
ஆசைவளர்ந்து வரும்
நேசர் தமைத் தடையும்
நீச நில மிதனில்...(இந்தப்)

8. இட்ட சகோ தரரை
எட்ட விலக்கி நிதம்
கட்ட மிகப்படுத்தும்
துட்ட உலகு தனில்... (இந்தப்)

9. சண்டிக் குதிரை மேலே
நொண்டித்துரை சவாரி
கொண்டது போலும் வாழ்வு
கண்டது போதும், ஐயா!....(இந்தப்)

4. தீண்டாதார் விண்ணப்பம்[தொகு]

(ஆனந்தக் களிப்பு)


1. தீண்டாமைப் பேய் அறிவீரோ? -அதன்
சேட்டைகள் முற்றும் தெரிந்திடுவீரோ?

2. பண்டுபண் டேயுள்ள பேயாம்! -இந்தப்
பாரத நாட்டைப்பாழ் ஆக்கிய பேயாம்
சண்டைகள் மூட்டிடும் பேயாம் - அது
சாத்திரி மார்பூசை கொண்டிடும் பேயாம்!

3.


[தொகு]

பார்க்க
"https://ta.wikisource.org/w/index.php?title=சாதிக்கொடுமை&oldid=1399065" இலிருந்து மீள்விக்கப்பட்டது