உள்ளடக்கத்துக்குச் செல்

வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2004

விக்கிமூலம் இலிருந்து

ஆக்கர்: வே. பிரபாகரன்
வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்
காலம்: நவம்பர் 27, 2004
பின்புலம்: 2004 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால், புலிகள் இயக்க போராளிகளின் நினைவு நாளான மாவீரர் நாள் அன்று ஆற்றப் பெற்ற உரை.


எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.

எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவு பெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.

தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற் படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.

எனது அன்பான மக்களே,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின. இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது. எமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம். பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது. நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.

இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.

சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.

நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார். எமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.

இவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது. இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றி பெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை. தமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவ வாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.

ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டி நிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.

கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.

போர்நிறுத்தம் செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்க முடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கி வருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம். நாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக் காட்டலாம். முதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். இரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர் போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம். மூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்பொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும்.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சமஷ்டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.

சிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக் கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.

தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டு கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்ட போதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதி பூணுவோமாக.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்