9. ஆசிரியருக்குப் பயிற்சி!
ஒரு நாள் முற்பகல் முழுவதும் கல்வித் துணை அமைச்சர் தோழர் ஜிம்மின் அவர்களோடு இருந்தோம். கவனமாகக் கேட்டோம். பலப்பல தெரிந்து கொண்டோம். மூன்று மணிகளை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்ததற்காக நன்றி கூறி விட்டு வந்தோம்.
அன்றைய பிற்பகல் அலுவல் என்ன? ஆசிரியர்களின் (பெரும்) மேற்படிப்பிற்கான மத்தியக் கழகத்தை (இன்ஸ்டிடியூட்களை)ப் பார்வையிடல். மாஸ்கோ நகரிலுள்ள அக் கல்விக்கூடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். வழக்கம் போல், அக் கூடத்தின் தலைவருக்கு அறிமுகப் படுத்தப்பட்டோம். அவர், அதன் நோக்கத்தை யும் நடைமுறைகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார், அம்மத்தியக் கழகம் எதற்கு? ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கவா? பேராசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கவா? இல்லை; இல்லை. நமக்குத் தெரிந்தது, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ; இவ்விருவகைப் பயிற்சிக் கூடங்களே. இதில் எவ்வகையிலும் சேராதது அக் கல்விக்கூடம். ஏற்கெனவே, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தகுதியை அதிகப்படுத்துவதற்காக ஏற்பட்டது அக் கலைக்கழகம் என்று விளக்கினார் அதன் தலைவர்.