தமிழிசை இயக்கம் (வி. ராமலிங்கம்)

விக்கிமூலம் இலிருந்து

(நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை எழுதிய தமிழிசை இயக்கம் என்ற கட்டுரை கீழே தரப்படுகிறது. இது இசைத்தமிழ் என்ற நூலில் காணப்படுகிறது)

தமிழிசை இயக்கம் என்பது, தமிழன் தன்னுடைய தாய்மொழியாகிய தமிழில் இசையைக் கேட்கவேண்டுமென்ற இச்சைதான். இந்த இயக்கத்தில் பிறமொழித்துவேஷம் இருக்கவே இடமில்லை. இருந்தால் அது குற்றம். தமிழைப் போற்றுவது தாயைப் போற்றுவதே தமிழை வணங்குவது தாயை வணங்குவதாம். பிற மாதர்களும் தாய்க்குச் சமானம் தான். அவர்களுக்கும் மரியாதை செய்வோம். ஆனால் என்னதான் சொன்னாலும் பிற மாதர்கள், பெற்ற தாயாகி விட முடியாது.

எந்த மொழியில் எவர் பாடினாலும் அந்த மொழி அவருக்குச் சொந்த மொழியாக இருக்க வேண்டும். எவர் எந்தப் பாஷையில் பாட்டைக் கேட்டாலும் அவருக்கு அந்தப் பாஷை சொந்த பாஷையாக இருக்க வேண்டும். 'சொந்த பாஷை' என்றால் தாய்ப்பாஷையாகவாவது கற்றுணர்ந்த பாஷையாகவாவது இருக்க வேண்டும் என்பது தான். அப்படியில்லாத பாஷையில் பாடுவது குற்றம். கேட்பது பயனற்றது. இந்த விவஸ்தையில்லாத பழக்கத்தை இத்தனை நாளும் செய்துவிட்டோமென்றாலும் இனிமேலாவது மாற வேண்டும். இப்படிச் சொல்லும்போது நாம் பிறமொழிக் கலைஞர்களை விதிசெய்து விலக்குகின்றோமென்று யாரும் எண்ணிவிடக் கூடாது. பிறமொழிக் கலைஞர்களையும் வருந்தியழைத்துக் கொண்டு வந்தாவது அவர்களிடத்திலுள்ள - நம்மிடத்தில் இல்லாத- புதிய கலாஞானத்தை நம்முடைய மொழியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்து வளர்ந்த கலைகள்தான் நம்முடைய கலைகளெல்லாம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் செய்ததும் அதுதான். பிற்காலத்தில் தமிழ் வள்ளல்கள் செய்ததும் அப்படித்தான். ஆனால் அவர்கள் பிறமொழிக் கலைகளையும் பிறமொழி அறிவுகளையும் தமிழாக்கித் தாய்மொழி மூலமாகத்தான் வளர்த்தார்கள். வான்மீகி ராமாயணத்தை அப்படியே ஒரு வடமொழி அறிஞர் படிக்க, வடமொழியே அறியாத தமிழர்களே உட்கார்ந்துகொண்டு கேட்டுவிடவில்லை. வான்மீகர் சொன்ன கதை நல்ல கதையாக இருந்ததைக்கண்ட தமிழன் அதைத் தமிழாக்கி வடமொழி வழக்கங்களை யெல்லாம் நீக்கித் தமிழ் வழக்கங்களையும் தமிழ்மொழிப் பண்புகளையும் சேர்த்து முற்றிலும் ஒரு தனிக்கவிதையைக் 'கம்ப ராமாயணம்' என்று செய்து கொண்டான். இப்படியே பல கதைகளும், அறிவுகளும், கலைகளும் தமிழில் வளர்க்கப்பட்டன. தமிழிசை இயக்கம் பிறமொழிக் கலைஞரை விலக்க அல்ல.

ஆதலால் இந்த இயக்கத்தைத் தமிழ்மக்கள் வெகு வணக்கத்தோடு வரவேற்க வேண்டும். இந்த இயக்கம் இப்போது இசையைப்பற்றி எழுந்ததானாலும் பொதுவாக மொழிவளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இதில் அரசியல் கட்சிவாதங்களோ சாதி மதச் சண்டைகளோ கலந்துவிடாதபடி கண்ணுங் கருத்துமாகக் காக்கவேண்டும். மேலும் தமிழ்ப் பாட்டுகள் தனித்தமிழில் இருக்க வேண்டுமா என்பதும் இப்போது பேசவேண்டிய விஷயம் அன்று. அதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் வெவ்வேறு விவாதங்களுக்கு இடமுண்டாகி தமிழிசை இயக்கம் கெட்டுப் போகும். தனித்தமிழோ கலப்புத் தமிழோ இப்போதுள்ள பெரும்பாலரான ஜனங்களுக்குப் புரியக்கூடியதாகப் பாட்டு இருக்க வேண்டும். அவை நாளடைவில் தனித்தமிழே ஆய்விட்டாலும் எல்லாருக்கும் சந்தோஷம்தான். உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் தமிழே பரவி தனித்தமிழ் விளங்கமுடியுமானாலும் அதில் நாம் ஆனந்தம் அடைவோம்.

 
இராகம்:தோடி]                                             [தாளம்:ரூபகம்
                                '''பல்லவி'''

                        திருமுடி சூட்டிடுவோம்
                        தெய்வத் தமிழ்மொழிக்கு              (திரு)
                                 
                              '''அநுபல்லவி'''

                   வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி
                   வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய    (திரு)

                               '''சரணங்கள்'''

 பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத
 பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
 உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி
 உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம்            (திரு)

 அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
 அகிலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்
 முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று
 முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே               (திரு)

 தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
 தரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார்
 நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
 நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்         (திரு)