பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

கடிதம் எழுதினார்கள். திருவாங்கூருக்கு வந்து வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அந்தக்கடிதம் வந்தபோது வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டு பெரியார் படுக்கையில் இருந்தார். அன்று. புத்தாண்டு நாள். பெரியார் எதையும் சிந்தித்துப் பார்க்கவில்லை. பயணத்திற்கு மூட்டை கட்டினார். நாகம்மையார் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"எனக்கு வயிற்றுவலி நின்றுவிட்டது. திருவாங்கூர் போய் வருகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார்.

வைக்கத்திற்கு ஈரோட்டு இரர்மசாமி வந்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தார் திருவாங்கூர் மன்னர். காவல்துறை ஆணையாளரைக் கூப்பிட்டு "இராமசாமி என் நண்பர். அவருக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுங்கள். நமது விருந்தானியாக நடத்துங்கள்" என்று கட்டளையிட்டார்.

காவல்துறையினர் வந்தவுடன் பொதுமக்கள் கூடிவிட்டார்கள். இராமசாமியாருக்கு அவர்கள் செய்த மரியாதைகளைப் பார்த்து மலைத்துப் போனார்கள். போராட்டத்தை நிறுத்துவதற்கு இது ஒரு புது வழியோ என்று நினைத்தார்கள். காவல்துறை அதிகாரிகள் பெரியாரைப் பார்த்து, "அரசர் உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.

"நான் உங்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். விருந்தாளியாக வரவில்லை, மன்னிக்க வேண்டும்" என்று கூறிவிட்டார் பெரியார்.

38