பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 265


படாமல் கழுவுள் தான் ஒருவனுமே தனியனாய் வந்து இரும்பொறையின் இணையடி தாழ்ந்து புகல் அடைந்தான். அவனுடைய மான வுணர்வையும் கட்டாண்மையையும் கண்ட இரும்பொறை அருள் சுரந்து அவனைத் தனக்கு உரியனாக்கிக் கொண்டு முன் போல இருக்கச் செய்தான். ஆயர்களும் அவனுடைய தலைமையில் இருந்து வருவாராயினர். அன்றியும், ஆயருட் சிலர், பொறையனது தலைமையின் கீழ் அவற்குத் ‘துணைவராய்ப் பல போர்களில் நெறியும் வெற்றியும் காட்டித் தந்தனர். தோற்றோர் தந்த யானைகளையும் அருங்கலங்களையும் திறையாகப் பெற்றுக் கொண்டு இரும்பொறை வேறு பகைவரை நாடி மேற்செல்வானாயினன்.

அக் காலத்தில் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அண்மையில் காவிரியிலிருந்து அரிசிலாறு பிரியும், இடத்தில் அரிசிலூர் என்றோர் ஊரிருந்தது. அஃது இப்போது மறைந்து போயிற்று. ஆயினும், அஃது இருந்ததென்பதைக் குடந்தைக் கீழ்க்கோட்டத்துக் கல்வெட்டொன்று[1] காட்டி நிற்கிறது. அவ்வூரில் அரிசில்கிழார் என்றொரு சான்றோர் அந் நாளில் சிறந்து விளங்கினார். கபிலரினும் ஆண்டில் இளையராயினும், சான்றோரினத்தில் அவர் தாமும் ஒருவராகக் கருதப் படும் தகுதி வாய்ந்திருந்தார். அதனால், அவருக்கு நம் தமிழகத்தில் மிக்க சிறப்புண்டாகியிருந்தது. சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் புலவர் பாடும் புகழ்


  1. A.R. No. 255 of 1911.