பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வயிறும் உணவும்

ர் ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் பரம்பரைப் பிச்சைக்காரன். அதாவது அவன் தகப்பனும் பிச்சைக்காரன், பாட்டனும் பிச்சைக்காரன். அவர்கள் வழியில் வந்த அவனும் பிச்சைக்காரன்.

பொதுவாக உலகத்தில் வேலை செய்யச் சோம்பல் கொண்டவர்கள் பிச்சைக்காரர்களாக மாறுவார்கள். உழைக்காமல் பிழைக்கலாம் என்று பலர் பிச்சையெடுப்பார்கள். பரம்பரைப் பிச்சைக்காரனான அவனுக்கு வீடு வீடாகப் படியேறிப் பிச்சையெடுப்பதே தொல்லையாக இருந்தது.

ஒரு நாள், பிச்சையெடுத்ததை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு விட்டுப் பிள்ளையார் கோயிலில் படுத்துத் தூங்கினால் என்ன இன்பமாக இருக்கும் என்று அவன் கற்பனை பண்ணிப் பார்த்தான். ஆனால், வீடுகளில் பிச்சை போடுகிறார்களே, அவை இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்திருப்பதில்லை.

பழைய கஞ்சியும் சுண்டற் குழம்பும் எத்தனை நாளைக்குத்தான் நன்றாக இருக்கும். சில வீடுகளில் அரிசி போடுவார்கள். அதை அவன் வாங்குவதேயில்லை. அடுப்பு மூட்டி சோறு வடிப்பதென்றால் அது ஒரு பெரிய வேலையென்று அந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் அரிசி வாங்குவதில்லை. கஞ்சி, குழம்பே போதுமென்றிருப்பான்.