நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/5வது திருமொழி
Appearance
5ம் திருமொழி மன்னு பெரும்புகழ் குயிற் பத்து எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை * உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே?* புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே!* பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய். 1 வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்* உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்* கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே! மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய். 2 மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல்*சர மாரி தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்* போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டு*உன் காதலி யோடுடன் வாழ்குயி லே!என் கருமாணிக் கம்வரக் கூவாய். 3 என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்* துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்* அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே! பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய். 4 மென்னடை யன்னம்பரந்து விளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்* பொன்னடி காண்பதோ ராசையி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா* இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை* உன்னொடு தோழமை கொள்வன் குயிலே! உலகளந் தான்வரக் கூவாய். 5 எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய* முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலையு மழகழிந் தேன்நான்* கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லே!என் தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே. 6 பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசையி னால்*என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்* அங்குயி லே!உனக் கென்ன மறைந்துறைவு? ஆழியும் சங்குமொண் தண்டும்* தங்கிய கையவ னைவரக் கூவில்நீ! சாலத் தருமம் பெறுதி. 7 சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்* நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்* தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லே!*திரு மாலை ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே. 8 பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்* பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லே!குறிக் கொண்டிதுநீகேள்* சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்* இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9 அன்றுல கம்மளந் தானை யுகந்தடி மைக்கண வன்வலி செய்ய* தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்* என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே!* இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன். 10 விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி* கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லே!என்ற மாற்றம்* பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன* நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ நாராய ணாயவென் பாரே. 11 ஆண்டாள் திருவடிகளே சரணம்