உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90

அவர்கள் கண்டுபிடித்திருந்தால் அவர்கள் வேலை சரியாக முடிந்திருக்கும். அதுவும் செய்யாமல் வழியிலே அதிக கால தாமதம் செய்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிப்பார் என்று தோன்றவே, அவர்கள் இரு பரிசல்களிலும் ஏறிக்கொண்டு, தாழிவயிறன் முதலியவர்களையும் எற்றிக்கொண்டு கூடல் பட்டணத்தை நோக்கிப் போய்விட்டனர்.

அது ஒரு வகையில் குள்ளனுக்கு நல்லதாயிற்று. அவன் 11 மணி அளவுக்குக் கரையில் நடந்து, தச்சுப்பட்டறையை அடைந்தான். தச்சுவேலை செய்யும் ஆள்களோடு அவனுடைய கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த பதினைந்து ஆள்களும் அங்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு இவனுடைய முகத்திலிருந்த காயங்களைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. ஆனால் யாரும் அவனிடம் அதைப்பற்றிக் கேட்கத் துணியவில்லை. கொல்லி மலைக் குள்ளன் நேராகத் தன் அறைக்குள் நுழைந்தான்; உடைகளை மாற்றிக்கொண்டான். அப்படி மாற்றும்போதே உணவு கொண்டுவரும்படி ஆணையிட்டான். பிறகு, அவனும் வேகமாகத் தன் முகக்காயங்களுக்கு மருந்து பூசிக்கொண்டான். உணவு வந்ததும் அதைச் சாப்பிட்டுக் கொண்டே மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைப்பற்றி எண்ணமிடத் தொடங்கினான். பேராசிரியர் வடிவேலும் மற்றவர்களும் மலைக் குகையை விட்டு உடனே கூடல் பட்டணத்தை நோக்கிப் புறப்பட முயல்வார்கள். அப்படிப் புறப்பட்டால் மேல் பக்கத்திலுள்ள ஏரி வழியாகப் பரிசலில் வந்து, தரைவழியாகப் கூடல் பட்டணம் போகலாம். வடிவேலுக்கு இவ்வழி தெரியாதென்றாலும் தில்லை நாயகமும், மருதாசலமும் கூறி விடுவார்கள். அந்த வழியில் வந்தால் தச்சுப்பட்டறையை அடையாமல் சென்றுவிடலாம். நூலேணி வழியாக வஞ்சியாற்றின் கரையில் இறங்கிப் பரிசலில் ஏறி, ஆற்று வழியாகவும் அவர்கள் அப்பட்டணத்திற்குப் போகலாம். ஆனால், அப்படிப் போனால் தச்சுப்பட்டறையில் இருப்பவர்களின் கண்ணில் படாமல் போக முடியாது. அதனால் வடிவேல் எரி வழியைத்தான் பயன்படுத்த நினைப்பார் என்று குள்ளன் கருதினான்.