உள்ளடக்கத்துக்குச் செல்

பூ உதிரும்

விக்கிமூலம் இலிருந்து

பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.

அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டது; அதற்குக் காரணமாகயிருந்த ஒரு சீனாக்கார நண்பன் தன் நினைவாய் அவருக்குத் தந்த -- இப்பொழுதும் கையிலிருக்கும் ஒரு பழைய மாடல் கைக் கெடியாரம்; இடுப்பில் சாவிக் கொத்துடன் தொங்கும் நீண்ட பேனாக்கத்தி; அதன் உதவியால் இரண்டு எதிரிகளைச் சாய்த்தது.... இவ்விதம் அவரோடு சம்பந்தப்பட்ட சகலமும் யுத்தத்தின் முத்திரை பெற்று விட்ட பின் அவரால் வேறு எவ்விதம் பேச இயலும்?

அரும்பு மீசைப் பிராயத்தில் முதல் மகா யுத்தத்திலும், கரு கருவென முறுக்கு மீசை வளர்ந்த நடுத்தர வயதில் இரண்டாவது மகா யுத்தத்திலும் சமராடி வந்தவர் அவர். சுதந்திரமும் அமைதியும் நிலவும் ஒரு நாட்டின் பிரஜையாய் நரைத்த மீசையுடன் தளர்ந்த உடலுடன் இப்போது வாழ்ந்த போதிலும், அவரது பட்டாளத்துக்கார மனத்துக்கு அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்வதில் ஒரு போதை இருந்தது. அதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறந்தது.

அவர், தான் சந்திக்க நேருகின்ற ஒவ்வொரு வாலிபனிடமும் முதல் தடவையாகவும், பின்னால் சந்திக்கும் சமயங்களில் அடிக்கடியும் ஒரு விஷயத்தை வற்புறுத்துவார்: "இந்த தேசத்திலே பொறந்த ஒவ்வொரு வாலிபப் புள்ளையும், இருபது வயசுக்கு மேலே ஒரு பத்து வருஷம் ---கொறஞ்சது அஞ்சு வருஷமாவது கட்டாயமா பட்டாளத்து அநுபவம் பெத்து வரணும்.....ஆமா ....மாட்டேன்னா---- சட்டம் போடணும்'......"

தன் மகனை ராணுவ வீரனாக்க வேண்டும் என்ற அவரது ஆசை பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், அவரது பேச்சையும் தீர்மானத்தையும் கண்டு பயந்த அவர் மனைவி மரகதம் உறவினர்கள் மூலம் கிழவரின் முடிவை மாற்ற முயன்றாள்.....

"எதுக்குங்க பட்டாளமும்....கிட்டாளமும்? பையன் பத்து படிச்சி பாஸ் பண்ணி இருக்கு. ஏதாவது கெவுருமெண்டு உத்தியோகம் ஒண்ணு பாத்து வெச்சி, கலியாணம் காட்சி நடத்தி பேரன் பேத்தியைக் கொஞ்சிக்கிட்டிருக்காம--- பையனைப் பட்டாளத்துக்கு அனுப்பறது சரியில்லீங்க அவ்வளவுதான்......" என்று கூறிய அந்த உறவினர்களையும், அவர்கள் அவ்விதம் வந்து யோசனை கூறக் காரணமாயிருந்த மனைவியையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு லேசாய்ச் சிரித்தார் பெரியசாமி. பிறகு அவர்கள் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தார். அதில் பொருளிருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. குறுகிய பாசம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை என்றே தோன்றியது.

அவர்களுக்கு அவர் சொன்னார்: "உங்களுக்குத் தெரியாது....ம்.... நான் வாழ்நாள் பூராவும் வௌபுள்ளிளைக்காரங்ககிட்டே அடிமைச் சிப்பாயாவே காலங் கழிச்சவன்.... அப்பல்லாம் ஒரு சாதாரண வௌபுள்ளிளைக்கார சோல்ஜருக்கு இருந்த மதிப்புக்கூட ஒரு கறுப்பு மேஜருக்கு கிடையாது, ஒரு சுதந்திர நாட்டு ராணுவத்திலே ஒரு சாதாரண சிப்பாயாக இருக்க மாட்டோமான்னு ஏங்கினது எனக்கில்லே தெரியும்? இப்ப எம்மகனுக்கு அந்தச் சான்ஸ் கெடைக்கிறதுன்னா அதெ விடலாமா? பட்டாளத்துக்குப் போனா, சாகறது தான் தலை விதின்னு நெனச்சிக்காதீங்க. பட்டாளத்துக்குப் போகாதவங்களுக்கும் சாவு உண்டு... வாழ்கையிலே ஒரு பொறுப்பு' அநுபவம், தேசம்ங்கிற உணர்வு...ம்...ஒரு 'டிஸிப்ளின்' எல்லாம் உண்டாகும் பட்டாளத்திலே..இதெல்லாமில்லாம சும்மா வெந்ததைத் தின்னுட்டு வேளை வந்தா சாகறதிலே என்னா பிரயோசனம்?... சொல்லுங்க" என்று அவர் கேட்கும் போது தந்தையின் அருகே நின்றிருந்த சோமநாதன், தந்தையின் இதயத்தையும் எண்ணத்தையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டான். அவர் உடலில் ஒரு துடிப்பும் அவர் கண்களில் 'தனக்கு வயதில்லையே' என்றொரு ஏக்கமும் பிறந்ததை அவன் மட்டுமே கண்டான்.

"அப்படிச் செத்துப் போனத்தான் என்னப்பா? பட்டாளத்துக்குப் போறவன் அரசாங்கத்துப் பணத்திலே உடம்பை வளர்த்துக்கிட்டு, ஊருக்கு லீவில் வந்து உடுப்பைக் காமிச்சுப்பிட்டு போனாப் போதுமா? சண்டைன்னு வந்தா சாகவும் தான் தயாராப் போகணும்" என்று ஒரு வீரனின் மகனுக்குரிய துணிச்சலுடன் சோமநாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, கிழவரின் சுருட்டுக் கறையேறிய கரிய உதடுகள் உணர்ச்சி மிகுந்து துடித்தன.

"சபாஷ்' "என்று பெருமிதத்தோடு அவனைப் பாராட்டுகையில் அவர் கண்களில் அதீதமானதோர் ஔி சுடர்விட்டது. இடது கை ஆள் காட்டி விரலால் முறுக்கேறி உயர்த்தியிருந்த மீசையின் வளைவை லேசாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே மகனின் தோள் மீது கை வைத்து, அவனுக்கு நேரே நின்று மகனின் கண்களைப் பார்த்துக் கேட்டார் பெரியசாமி.

"டேய் தம்பி... இவங்களுக்கு ஒண்ணும் புரியாது; நீ சொல்லு பார்ப்போம்; இந்தியா மேலே சண்டைக்கி வர்ரவன் இனிமே இந்த உலகத்திலே எவனாவது இருக்கானா?...ம் தள்ளு' பட்டாளத்துக்குப் போறதுன்னா, காக்கி உடுப்பை மாட்டிக்கினவுடனே கையிலே துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கண்ட பக்கமெல்லாம் 'படபட'ன்னு சுட்டுக்கினு நிக்கறதில்லே.... பட்டாளத்து வாழ்க்கையைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டா அறிவும் அனுபவமும் வளரும். எழுதப் படிக்கத் தெரியாதவனாத்தான் நான் மிலிட்டரிக்குப் போனேன். நானே இவ்வளவு கத்துக்கிட்டு வளர்ந்திருக்கேன்னா யாரு காரணம்? பட்டாளம் தான். இல்லாட்டி 'எங்கம்மாவை விட்டுப்பிட்டு எப்பிடிப் போவேன்'னு ஊரிலேயே குந்திக்கினு இருந்தா, வெறவு பொறுக்கிக்கினு மாடுமேய்க்கத்தான் போயிருப்பேன். நீ என்னை மாதிரி தற்குறியில்லை; படிச்சிருக்கே....போனியானா ரொம்ப விசயம் கத்துக்கலாம்; ஆபீசராகூட ஆகலாம். இங்கேயே இருந்தியானா சினிமா பார்க்கலாம்; சீட்டி அடிக்கலாம்; அதான் உங்கம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும்.... ஊர்க்காரனுவ எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பானுவ... துப்பாக்கின்னா எது போலீஸஉக்காரனுக்கு மட்டும்தான் சொந்தம்னு நெனைச்சிக்கிட்டிருக்காங்க....ம், இந்த நாட்டிலே பொறந்த ஒவ்வொருத்தனும் துப்பாக்கி பிடிக்கக் கத்துக்க வேணாமா? அப்பத்தான் இன்னக்கி இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாளு தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னா நாடே துப்பாக்கி ஏந்தி நிக்கும்....."


தந்தை தன் சொல் வலியால், தாயின் ஆசீர்வாதத்துடனும் பத்து வருஷங்களுக்கு முன் பட்டாளத்தில் சேர்ந்தான் சோமநாதன்.

முதன்முறையாக, பட்டாளத்தில் சேர்ந்த அடுத்த ஆண்டில் அவன் லீவில் ஊருக்கு வந்திருந்தபோது... ஒரு வருஷத்தில்.....அவன் அதிகமாய் வளர்ந்திருப்பது கண்டு அவன் தாய் பூரித்துப் போனாள். அவனிடம் வெறும் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் உள வளர்ச்சியும் அறிவு விசாலமும் மிகுந்திருக்கிறதா என்பதையே சிரத்தையுடன் ஆழ்ந்து பரிசீலித்தார் பெரியசாமி. சதா நேரமும் அவனோடு பேசிக்கொண்டிருப்பதிலும் தன் அனுபவங்களைச் சொல்வதை அவன் எவ்விதம் கிரகித்து கொள்கிறான் என்று கவனிப்பதிலும் அவனை அளந்தார் அவர்.

லீவில் வீட்டுக்கு வந்திருக்கும்போதுகூட, காலையில் ஐந்தரை மணிக்கு மேல் அவனால் படுக்கையில் படுத்திருக்க முடியாது. எங்கோ நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தனது ராணுவ முகாமில் முழங்குகின்ற காலை நேர எக்காளத்தின் ஓசையைக் கேட்டவன் போன்று, அந்தப் பழக்கத்தால்---- படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து விடுவான் சோமநாதன். பின்னர், காலை நேர உலாப் போய்விட்டு, தேகப்பயிற்சி செய்து முடித்தபின் என்ன செய்வதென்று புரியாமல் நாள் முழுதும் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இரண்டாவது முறை அவன் லீவில் வந்தபோது அதற்கொரு பரிகாரம் காண்பதுபோல் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தான். அதன் விளைவாய் அவர்கள் வீட்டை சுற்றிலும் கட்டாந்தரையாகக் கிடந்த 'தோட்டம்' சண்பகமும், ரோஜாவும், மல்லிகையும் சொரியும் நந்தவனமாக மாறி அவனது நினைவாய் இன்றும் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறது.....

இந்த பத்து வருஷ காலமாய் மகன் நினைவு வரும் போதெல்லாம் பெரியசாமிப் பிள்ளை தோட்டத்தில் போய் நின்று, அந்த மலர்ச் செடிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். மலர்ந்த புஷ்பங்களைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும். அதே போழ்தில் அங்கு உதிர்ந்த பூக்களைக் கண்டு பெருமூச்செறிந்து கொண்டிருப்பாள் அவர் மனைவி.

"ம்...சும்மாக் கெடந்த தோட்டமெல்லாம் செம்பகமும் ரோஜாவும் வெச்சிப் பூ மண்டிப் போவுது...ஊரிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போவுதுங்க... போறதுங்க சும்மா போவுதா? 'பூ இருக்கிற வீட்டிலே பொண்ணு இல்லியான்னு' பரியாசம் பண்றா ஒரு குட்டி..."

"அதாரு அந்த வாயாடி?... பொண்ணு இல்லே, நீதான் வந்து இருவேன்னு சொல்றதுதானே?..." என்று நரைத்த மீசையில் வழக்கம்போல் கை போட்டார் பெரியசாமி.

"அப்பிடித்தான் நானும் நெனச்சிக்கிட்டேன். அதை அவகிட்டே எதுக்குச் சொல்வானேன்... நேத்து கோயில்லே அவ ஆயியைப் பார்த்துச் சொன்னேன்... அவளுக்கு வாயெல்லாம் பல்லாப் போச்சு... நம்ப பயலுக்குப் பொண்ணு கொடுக்கக் கசக்குமோ, பின்னே?..." என்று மலர்களின் நடுவே மலர்ந்த முகத்தோடு, பல இரவுகளாய்த் தூங்காமல் கட்டிய மனக் கனவுகளைக் கணவனிடம் உதிர்க்கும் மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார் பெரியசாமி.

"சரி, சரி' இந்தத் தடவை நம்ப வீட்டிலே கலியாணம் தான்... நீ போயி மசிக்கூடும் காகிதமும் எடுத்து வையி... பையனுக்குக் கடுதாசி எழுதணும்" என்று உற்சாகமாய்க் கூவினார் பிள்ளை.

வாழ்க்கையில் இளம்பிராயத்தில் பெரியசாமிப் பிள்ளையின் மனைவியாகிப் பல வருஷங்கள் அவரைப் பிரிந்து ஒவ்வொரு நாளும் தாலிச் சரட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டே காலம் கழித்து, ஒருவாறு அந்தக் கவலை தீர்ந்து புருஷன் திரும்பிவந்த பின் தனக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பலகாலம் ஏங்கி, பின்னொரு நாள் சோமநாதனைப் பெற்றபோது என்ன பேருவகை கொண்டாளோ, அந்த அளவு தாங்கொணா இன்ப உணர்ச்சியினால் மெய் சிலிர்த்து ஆனந்தத்தில் கண்களிரண்டும் நீர்க் குளமாக உள்ளே சென்றாள் மரகதம்...

வழக்கமாய், தந்தையின் கடிதம் கண்ட ஓரிரு வாரங்களுக்காகவே ஊருக்கு வந்துவிடும் சோமநாதன் அந்தத் தடவை இரண்டு மாதங்களுக்குப் பிறகே வர முடிந்தது.

ஆம்; போன தடவை அவன் வந்தபோது, கோவாவில் போரிட்டு வெற்றி பெற்ற-யுத்த அனுபவம் பெற்ற--வீரனாய்த் திரும்பி இருந்தான்

அப்பனும் மகனும் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வந்து கலந்துகொள்ளத் தைரியம் இல்லாத மரகதம் தூரத்திலோ, அறைவாயிலிலோ நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

மகனது வார்த்தைகளைச் செவிகள் கிரகித்தபோதிலும் அவரது பார்வை மரகதம் நிற்கும் திசைக்கு ஓடி அவள் கண்களையும் அடிக்கடி சந்திக்கும்...அந்த ஒவ்வொரு நிமிஷமும், பேசிக் கொண்டிருக்கும் மகனின் வார்த்தைகள் காதில் விழாமல் ஒலியிழந்து போகும்; பேசாது தூரத்தே நிற்கும் மனைவியின் மௌன வார்த்தைகள்--அவளது இதயத் துடிப்பு-- அவர் செவியையும் இதயத்தையும் வந்து மோதும்; "தோட்டம் பூரா செம்பகமும் ரோசாவும் வெச்சுப் பூ மண்டிப் போவுது..."

--அவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த நேரம்போக, தான் பேச நேர்ந்தபோதெல்லாம் மகனின் கலியாண விஷயமாகவே பேசினார் பெரியசாமிப் பிள்ளை.

சோமநாதன் தனக்கொரு கலியாணம் என்பது பற்றி அதுவரை யோசித்ததில்லை. ஆனால் தகப்பனார் பேசுகிற தோரணையைப் பார்த்தால் தனக்கு யோசிக்க அவகாசமே தரமாட்டார் போலிருந்தது. இதில் யோசிக்கத்தான் அப்படி என்ன இருக்கிறது? சமாதானச் சூழ்நிலையில் வாழும் ஒரு தேசத்தின் ராணுவ உத்தியோகஸ்தன் கல்யாணம் செய்து கொள்ளலாம்... அவ்விதம் திருமணம் புரிந்துகொண்டு எத்தனையோ பேர் குடும்பத்தோடு அங்கேயே வந்து வாழ்கிறார்களே...என்பதையெல்லாம் நினைவு கூர்ந்து 'சரி' என்று ஒப்புக்கொண்டான்.

--அந்தத் தடவை லீவிலேயே அவனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்தது.

பூப்பறிக்க வந்த கௌரி பூந்தோட்டத்தின் சொந்தக் காரியானாள். ஒரு பலனும் கருதாமல் சோமநாதன் தன் கையால் நட்டுத் தண்ணீர் பாய்ச்சியதற்குப் பிரதியாக மலர்களை மட்டுமில்லாமல் அவனுக்கொரு மனைவியையும் கொண்டுவரத் தூதாகியிருக்கும் மகிழ்ச்சியில் சண்பகமும் ரோஜாவும் பூத்துக் குலுங்கிச் சிரித்தன. அந்த மலர்ச் செடிகளின் சிரிப்பால் ஆகர்ஷிக்கப்பட்டோ, தனக்கும் அவனுக்கும் உறவு விளையக் காரணம் இந்தச் செடிகள்தான் என்ற நினைப்பாலோ கௌரி பொழுதையெல்லாம் தோட்டத்திலேயே கழித்தாள். கல்யாணத்திற்குப் பிறகு சரியாக இரண்டு மாதங்களையும் சோமநாதன் அவளுடனேயே--ஒரு மணி நேரம் கூடப் பிரிந்திராமல்--கழித்தான்.

எத்தனை காலைகள் எத்தனை மாலைகள், எத்தனை இரவுகள் இவர்கள் இருவரும் அங்கேயே கழித்து, என்னென்ன பேசி, என்னென்ன கனவுகளை வளர்த்தார்கள் என்று அந்தச் சண்பகத்துக்குத் தெரியும்; அந்த ரோஜாவும் மல்லிகையும் அறியும்.

கடைசியில் ஒரு நாள்......

இரண்டு மாதங்கள் அவள் உடலோடும், இதயத்தோடும் இணைந்திருந்து, கனவோடும் கற்பனையோடும் கலந்து உடலால் மட்டும் விலகும்போது 'அடுத்த தடவை லீவுக்கு வந்து திரும்பும்போது உன்னை என்னோட அழைச்சுக்கிட்டுப் போவேன்' என்று வாக்குறுதி தந்து அவன் அவளைப் பிரிந்து சென்றான்.

கௌரியை பிரிந்து சென்ற பதினைந்தாம் நாள் அவளுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அவனிடமிருந்து மறு கடிதம் வரும்வரை, தனது தனியறையின் ஏகாந்தத்தில்.... அவனே வந்து எட்டிப் பார்ப்பது போல், ஜன்னலருகே வளைந்திருக்கும் சண்பக மரக் கிளையில் பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த ரகசியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் கௌரி.

சண்பகத்துக்குப் பக்கத்தில், மலர்ச்சியின் ரகசியத்தை மறைத்துக்கொண்டு,....முற்றாக மறைக்க முடியாமல்.... தாங்கொணாத் தவிப்புடன், கனத்துக் கிடக்கும் மொட்டுக்களைத் தாங்கி நிற்கும் ரோஜாவைப் பார்த்து அவள் சிரிக்கும் போது 'உன் கதை இன்னும் ஒரு மாதத்தில் தெரியும்? என்று 'பளீரென'ச் சிரித்துச் சிதறிய முல்லைக் கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்த ரகசியம் அவளுக்கு அப்போது புரியவில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின், சண்பகத்தையும் ரோஜாவையும் மடி கனக்கக் கட்டிக்கொண்டிருக்கும் உணர்வுடன் மனமும் உடலும் கூசிச் சிலிர்க்க அந்த விஷயத்தை அவனுக்கு அவள் எழுதும்போது.....அவனுக்கும் அவளுக்கும் விளைந்த உறவுக்குப் பின் சில இரவுகளே சேர்ந்து கிடந்து சிலிர்த்த அந்தப் படுக்கையின் தலைமாட்டில், சுவரில் தொங்கும் சோமுவின் படம் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் படத்தைக்கூட பார்க்கமுடியாமல் அவள் முகத்தை மூடிக்கொண்டாள். முகத்தை மூடிய கரங்களையும் மீறி வழிந்த நாணம் அவள் காதோரத்தில் சிவந்து விளிம்பு கட்டி நின்றது.

அவள் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, அந்தப் படத்தைக் கையிலெடுத்தாள். அருகே இருத்திப் பார்க்கப் பார்க்க விகசிப்பதுபோல் வடிவாயமைந்த உதட்டில் ஊர்ந்த அவனது மாயப் புன்னகை, அவள் இதயத்தை ஊடுருவியது.

திடீரென்று அவளுக்கு உடல் சிலிர்த்தது. நெஞ்சில் நிலைத்த அவன் நினைவு வயிற்றில் புரண்டது போலிருந்தது.....

"நீங்க எப்ப வருவீங்க?" என்று அந்தப் படத்தை முகத்தோடு அணைத்துக்கொண்டு அமைதியாய், சப்தமில்லாமல் தொண்டை அடைத்துக் கரகரக்க அவள் கேட்டபோது, தன் விழிகளில் சுரந்த கண்ணீரை அவளால் அடக்க முடியவில்லை.

"எப்ப வருவீங்க....எப்ப வருவீங்க?" என்று துடித்துக் கொண்டிருந்த அவள் இதயத்திற்கு அவனிடமிருந்து பதில் வந்தது.

இதயம் என்று ஒன்றிருந்தால், துடிப்பு என்ற ஒன்றும் உண்டு. அந்த இதயம் அவனுக்கும் இருந்ததால் அவன் கடிதமே அவனது இதயமாய் அவள் கரத்தில் விரிந்து துடித்தது.....

"........ஏழாம் மாதம் பூச்சூட்டலுக்கு வருவேன். மூன்று மாதம் லீவு கிடைக்கும். உன்னோடயே இருந்து குழந்தை பிறந்த பிறகு, என் மகனின் பூமாதிரி இருக்கிற பாதத்திலே முத்தமிடணும்னு என் உதடுகள் துடிக்கிற துடிப்பு....' என்று தன் கணவன் தனக்கெழுதிய கடிதத்தைப் பெரியசாமிப் பிள்ளைக்கும் மரகதத்துக்கும் படித்துக் காட்டிக்கொண்டிருந்த கௌரி "அவ்வளவுதான் முக்கிய விஷயம்" என்று கடிதத்தை மடித்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள்.

அறைக்கு வந்ததும் அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் கிடந்தும் இருந்தும் அந்தக் கடிதத்தின் வாசகங்களை அவனை அனுபவித்ததே போன்று ரகசியமாகவும் தன்னிச்சையாகவும் அனுபவித்து மகிழ்ந்தாள் கௌரி.

அதில் தான் அவன் என்ன வெல்லாம் எழுதியிருந்தான்'

புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள், உணர்ந்து கொள்ளத்தக்க அந்தரங்கமாய் அக்கடிதத்தில் பதிந்திருந்தன. அந்தக் கடிதத்தை எத்தனையோ முறை படித்து, இன்னும் எத்தனையோ முறை படிக்கப்போகும் கௌரி இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறாள்.......

'.....மகன்தான் என்று அவ்வளவு நிச்சயமாக எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்கிறாயா?.....எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்? நீ கர்ப்பமுற்றிருப்பதாக எழுதியிருந்ததை படித்த பின் , நேற்றுத்தான் நான் வேடிக்கையான கனவு ஒன்று கண்டேன்---அந்தக் கனவில் திடீரென்று எங்கள் 'கேம்ப்'பில் என்னைக் காணோம். எல்லோரும் என்னைத் தேடுகிறார்கள்.....எனக்கே தெரியவில்லை நான் எங்கிருக்கிறேன் என்று உடம்புக்குச் சுகமான வெதுவெதுப்பும், உள்ளத்திற்கு இதமான குளிர்ச்சியும் உள்ள ஓரிடத்தில் மிருதுவான பூக்கள் குவிந்திருக்க அதன் மத்தியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தேடுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. "இதோ இங்கே இருக்கிறேன்.....தெரியலையா" என்று கத்தினாலும் அவர்களுக்கு என் குரல் கேட்கவில்லை. அப்போ, என் முகத்தின் மேலே..... இல்லை----என்னைச் சுற்றிலும்தான் கண்ணாடிக் கூட்டால் மூடியிருப்பதுபோல் இருக்கே---அதன்மேலே அழகான ஒரு கை பதிந்து தெரியுது..... எனக்குத் தெரிந்த அழகான கை; தங்க வளையல்களும், 'அன்னிக்கி ராத்திரி' நான் போட்ட மோதிரமும் அணிந்த விரலோடு கூடிய உன் கை தெரியுது---இவ்வளவுதான் அந்தக் கனவிலே எனக்கு நினைவு இருக்கு. என் கூட ஒரு சர்தார் இருக்காரு; வயசானவரு; அவருகிட்டே இந்தக் கனவை சொன்னேன்....... 'ஒனக்கு ஆம்பிளைக் குழந்தை பொறக்கப் போகுது'ன்னு சொல்லி என்னைத் தூக்கிக்கிட்டுக் குதிச்சாரு அவர்....ஆமா, கௌரி....கௌரி.....ரொம்ப ஆச்சரியமா இல்லே? நமக்கு ஒரு குழந்தை பொறக்கப் போவுது.....' இப்பவே உன்கிட்டே ஓடி வரணும்னு மனசு துடிக்குது, கௌரி. வந்து....வந்து---இப்ப நான் எழுதறதை 'அசிங்கம்'னு நெனச்சிக்காதே.... ஓர் உயிரைத் தரப் போற, ஒரு பிறவியைத் தாங்கி இருக்கிற தாய்மைக் கோயிலான உன் அழகான வயித்தைத் தடவிப் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..... உள்ளே குழந்தை ஓடுமாமே....அதுக்கு நூறு முத்தம் குடுக்கணும்....இது தாய்மைக்கு செய்கிற மரியாதைன்னு நான் நினைக்கிறேன்....சரி, சரி ஏழாம் மாதம் தான் நான் வரப் போறேனே; தாய்மைக் குரிய காணிக்கைகளைத் தராமலா விடுவேன்....?'

--ஒவ்வொரு வரியும் இரண்டு உடல்களை, இரண்டு ஹிருதயங்களைச் சிலிர்க்க வைக்கும் சக்தி-- சிலிர்த்ததின் விளைவு அல்லவா?

ஏழாம் மாதம் வந்துவிட்டது. பெரியசாமிப் பிள்ளை எதிர்பார்த்ததுபோல் அந்தக் கடிதம் வந்தது.

'...எல்லையில் ஏற்பட்டிருக்கும் யுத்தமும் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். போர் வீரனுக்குரிய கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் நான் வரமுடியாது. வர விரும்புவது சரியுமில்லை. அதனாலென்ன? நம் வீட்டில் தான் கொள்ளை கொள்ளைப் பூ இருக்கின்றது. பூ முடித்துக் கொள்ளப் பெண்ணும் இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் சுபகாரியங்களைச் சிறப்பாகச் செய்யவும். நான் வராததற்காக வருந்தாதீர்கள். அங்கு நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சியுடனிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இங்கு நான் உற்சாகமாக இருப்பேன் என்று எண்ணிக் குதூகலமாய் இருக்கவும்...'

தந்தைக்கு எழுதிய கடிதத்தோடு கூட மனைவிக்குத் தனியாய் இன்னொரு கடிதம் எழுதியிருந்தான் அவன். அந்தக் கடிதம் பொய்மைகலந்த குதூகலத்தோடும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில் உற்சாகம் மிகுந்திருப்பது போல் காட்டிக் கொள்ளும் வகையிலும் எழுதப் பட்டிருந்ததால்--சிற்சில இடங்களில் 'விரசம்' போலும் வெறியுற்றது போலும் அமைந்திருந்தது.

சில மாத பந்தத்திலேயே அவனை நன்கு புரிந்து கொண்டவளாகையால், எந்தச் சூழ்நிலையில், எவ்வித மனோ நிலையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கும் என்பதை கௌரி உணர்ந்தாள். இதன் மூலம் அவள் மனம் ஆறுதலடையும் என்று நம்பி அவனால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு--அவனது சிறுபிள்ளைத் தனமான வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் சிரிக்க முயன்று, அதில் மறைந்திருக்கும் துயரத்தின் கனத்தைத் தாங்க மாட்டாதவளாய்--மனம் பொருமி அழுதாள் கௌரி..

சில நாட்களுக்குப் பின் அவனுடைய வேண்டுகோளின்படி அவர்கள் குதூகலமாகவே இருக்க முயன்று, அப்படி இருந்தும் வந்தார்கள்.

பெரியசாமிப் பிள்ளை 'யுத்தம்' என்று தெரிவித்த அன்றிலிருந்தே மிகவும் துடிப்புடன் காணப்பட்டார். பக்கத்திலிருப்போரிடம் காலையிலும் மாலையிலும் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு ஒரு கையால் மீசையை முறுக்கியவாறே செய்தி விளக்கம் கூற ஆரம்பித்து, இரண்டாவது அல்லது முதல் மகா யுத்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதையாகச் சொல்லத்தான் அவரால் முடிந்தது.

அவர் கொஞ்சங்கூடக் கவலை இல்லாமல் இப்படி இருப்பது கண்டு முணுமுணுத்துக் கொண்ட மரகதத்தின் குரல் அவர் காதில் விழுந்தது.

அவர் மனைவியைப்பார்த்துச் சிரித்தார்; "போடி...போ' போர் வீரனின் சங்கீதமே பீரங்கி முழக்கம் தான்' உனக்கெங்கே அது தெரியும்...உன்வசமே தொடை நடுங்கிக் கும்பல், உன் பையன் வருவான் சிங்கம் மாதிரி, அவனைக் கேளு, சொல்லுவான்..."என்று அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறு அங்கு வந்த கௌரி, "அவங்க மகன் சிங்கமா இருந்தா, அந்தப் பெருமை அவங்களுக்கு இல்லையா?" என்றாள்.

"ம்...ம்... பெருமை இல்லேன்னு யாரு சொன்னா? அந்தப் பெருமைக்குக் காரணம் எங்க வம்சம்னேன்... நீ நாளைக்குப் பெத்துக்கப் போறியே அந்தப் பயலுக்காகவும் தான் சொல்றேன்...வீரன் மகன் வீரனாகத்தான் இருப்பான்"என்று அவர் சொன்னபோது, அவளுக்கு வயிற்றில் என்னவோ செய்தது... அந்த இன்பக் கிளு கிளுப்பில் தலை குனிந்தவாறு தன் அறைக்குப் போனாள் கௌரி.

நேற்று கௌரிக்குப் பூச்சூட்டல் என்றால் பிள்ளைச் சுமை போதாதென்று பூச்சுமையும் ஏற்றுவதுதானோ?

அடர்ந்து நீண்ட கூந்தலில் சண்பகத்தை அடுக்கடுக்காக வைத்துத் தைத்து, இடையிடையே மல்லிகையை விரவி ரோஜாவைப் பதித்து -- 'இந்த அலங்காரத்தில் கௌரியைப் பார்க்க அவன் இல்லையே' என்ற குறை ஒவ்வொருவர் மனத்திலும் ஏதோ ஒரு விநாடியில் நெருடி மறைந்து கொண்டு தானிருந்தது.

பூவுக்கும் வாழ்க்கை ஒரு நாள் தானே? நேற்று மலர்ந்து குலுங்கி ஜொலித்தவை யெல்லாம்.... இதோ வாடி வதங்கிக் கசங்கி, மணமிழந்து தலைக்குக் கனமாகிவிட்டன.

......தனியறையில் அமர்ந்து, தலையில் கசங்கிப் போன மலர்களைக் களைந்து கொண்டிருக்கிறாள் கௌரி.

அப்பொழுது ஜன்னலுக்கு வௌியே அவனே வந்து எட்டிப் பார்ப்பதுபோல் சண்பகமரக் கிளையின் பூ வடர்ந்த கொப்பொன்று அவளுக்கு எதிரே தெரிந்து கொண்டு தானிருந்தது...

'நேற்று இந்நேரம் இதே போல் செடியிலும் மரத்திலும் மலர்ந்திருந்த பூக்கள் தானே இவையும்?...' என்ற எண்ணம் தொடர்பின்றி அவள் மனத்தில் முகிழ்த்தபோதிலும், அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பிறந்த அடுத்த விநாடியே சில மாதங்களுக்கு முன்பு சோமநாதன் தோட்டத்தில் அவளிடம் சொன்ன வார்த்தைகளின் தொடர்ச்சியே இது என்று அவளுக்கு விளங்கியது.

அன்று... சோமநாதன் கோவாவில் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அவளிடம் வீரரசம் மிகுந்த கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தக் கதைக்குப் பின்னால் உள்ள எத்தனையோ தாய்மார்களின் கண்ணீரும், இளம் பெண்களின் சோகங்களும் அவளுக்குப் புலனாயின.

அவள் கெஞ்சுகின்ற குரலில் அவனிடம் கேட்டாள்: "இந்தப் பட்டாளத்து உத்தியோகத்தை நீங்க விட்டுட்டா என்ன? கோரமான சண்டையிலே பொன்னான உயிரையும், இன்பமான வாழ்க்கையையும் எதுக்குப் பலியிடணும்? ஜெயிக்கறது ஒரு பக்கம் இருந்தாலும், துப்பாக்கிக்குப் பலியாகிச் செத்தவனும் ஒரு மனுசனில்லியா?... சண்டை போட்டுச் சாகறதுதானா மனுசனுக்கு அழகு?..."

அவள் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமான யோசனையுடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு பக்கத்திலிருந்த ரோஜாச் செடியிலிருந்து ஒரு பெரிய பூவைப் பறித்தவாறே அவன் சொன்னான்: "சண்டை வேண்டாம்கிறதுதான் நம்மோட கொள்கை. ஆனா சண்டைன்னு வந்துட்டா, சண்டை போடாமே உயிருக்குப் பயந்து சமாதானம் பேசறது கோழைத்தனம்.சண்டைக்கு எப்படி ரெண்டு பேரும் காரணமோ...ரெண்டு பேரும் அவசியமோ...அதே மாதிரி சமாதானத்துக்கும் ரெண்டு பேருமே காரணமாகவும், அவசியமாகவும் இருக்கணும். ஆனா, நீ கேக்கறது இந்த சண்டையிலே எதுக்குப் பொன்னான உயிரை இழக்கணும்கறது தானே?..." என்று கேட்டுவிட்டுக் கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும்பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; "இதோ இந்தப்பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப்பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்...நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே... அதிலேதான் அந்தப் பூவுக்கு... உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு... இல்லியா?... அது மாதிரிதான், மனுஷன்னுபொறந்தா..பூத்திருக்கிறமலர் உதிர்ந்து போகிறமாதிரி... மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்... அப்படி விதிமுடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல... கௌரி, பூ...உதிரும்...மனுஷனும் சாவான்..." என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தானும் தன் எதிரே நிற்கும் கணவனும், தங்களைச் சுற்றிலும் பூத்துச் சிரிக்கும் மலர்களும்... எல்லாமே ஒவ்வொரு சோகமாய் அவள் நெஞ்சில் கனத்தன...

கௌரியின் கண்கள் கலங்குவதையும் உதடுகள் சிவந்து துடிப்பதையும் கண்ட சோமநாதன் 'பூ-உதிரும்' என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை என்று கூறிவிட்டுப் பேச்சை வேறு விஷயங்களில் திருப்பினான்.

'ஐயோ இதை ஏன் இப்போது நான் நினைக்கிறேன்... அவர் போர் முனையில் இருக்கும் இந்த நேரத்திலா எனக்கு அந்த நினைவு வரவேண்டும்' என்று ஒரு விநாடி துணுக்குற்று, கட்டிலின் தலை மாட்டில் தொங்கும் கணவனின் படத்தைப் பார்க்கப் பார்க்க விகஸிக்கும் அந்த மாயப் புன்னகையைப் பார்ப்பதற்காகப் படத்தருகே போய் நின்றாள் கௌரி.

அப்போது அறைக்கு வௌியே...

"சொல்லுங்க, கடுதாசியிலே என்ன சேதி?.... பேச மாட்டீங்களா? ஐயோ தெய்வமே'..... கௌரி....ஈ....." என்று தாய்மையின் சோகம் வெடித்துக் கிளம்பிய பேரோசை கேட்டுக் கௌரி அறைக் கதவை திறந்தாள்..... அப்படியே விழி பிதுங்கிச் சிலையாய் நின்றாள்.....

வராந்தா ஈஸிசேரில் கையில் பிரித்த கடிதத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கும் பெரியசாமிப் பிள்ளையின் காலடியில், தரையில் நெற்றியை 'மடார் மடா'ரென முட்டிக்கொண்டு கதறுகிறாளே மரகதம்.

செம்பில் வார்த்து விட்ட சிலை மாதிரி உணர்ச்சி மிகுதியால் உப்பிக் கனத்து இறுகிச் சிவந்த அவர் முகத்தில் சருமம் துடித்தது. மூடிய இமைகளின் வழியே கோடாய் வழிந்த கண்ணீர் நரைத்துப்போன மீசையின் மேல் வடிந்து நின்றது.....

"மகனே, சோமு----" என்று வானத்தை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு எழுந்தார். வராந்தாவில் சுவரில் தொங்கும் மகனின் போட்டோவை நோக்கி நடந்தார்.

"ஐயோ, நீ வீரனய்யா'...." என்று ஒற்றை மரமாய் மகனின் படத்தின் முன் நிமிர்ந்து நின்று ராணுவ முறையில் 'சல்யூட்' வைத்தார்.

விறைத்து நின்று வீர வணக்கம் செய்த கரத்தைக் கீழிறக்கிய போது முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடீரென அனுபவித்த உணர்வுடன் தளர்ந்து உட்கார்ந்தார் பெரியசாமி.

"எனக்கு வேறொரு மகன் கூட இல்லையே...." என்று வாய்விட்டுப் புலம்பினார்....அந்த வார்த்தைகளைக்கேட்டு எரித்து விடுவது போல் பெரியசாமியைப் பார்த்த மரகதம், அவரைச் சபிப்பதுபோல் ஆங்காரத்துடன் இரண்டு கைகளையும் அவரை நோக்கி நீட்டியவாறு விரித்த கூந்தலும் வெறித்த விழிகளுமாய் அலறினாள்: "பாவி'....வேறே மகன் நமக்கு கிடையாது--வேண்டாம் பட்டாளத்துக்குன்னு அடிச்சிக்கிட்டேனே கேட்டீங்களா? பட்டாளம் பட்டாளம்ன்னு நின்னு என் அருமைப் புள்ளையெக் கொன்னுட்டீங்களே.... ஐயோ' உங்க பாவத்துக்கு வேறே ஒரு மகன் வேணுமா? பட்டாளத்துக்கு அனுப்பி வாரிக் குடுக்கறத்துக்குத் தானே இன்னொரு மகன் இல்லேன்னு அழறீங்க?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவர் இதயத்தில் குத்துவது போல் கேட்டாள்.

"ஆமாம்' அதற்குத்தான்...." என்று பெரியசாமி, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய மீசையை முறுக்கிக் கொண்டே மரகதத்தின் கண்களுக்குள் பார்த்தவாறு சொன்னார். அவர் கண்களில் சுரந்த கண்ணீர் இமை விளிம்பில் பாத ரசம்போல் ஜொலித்தது....

அப்போது அறை வாசலில் 'தடா'லெனச் சப்தம் கேட்கவே திரும்பப் பார்த்து மயங்கி விழுந்த கௌரியைத் தூக்குவதற்காக ஓடினார் பெரியசாமி.

மரகதத்தின் அலறல் தெருவையே திரட்டியது'

பூவின் மேல் ஆசைப்பட்டுப் பூப்பறிக்க வந்த கௌரி, பூவிழந்து விட்டாள்....

ஆனால் சோமுவின் கைகளால் நட்டு வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளும் மரங்களும் அவன் நினைவாய் இப்போதும் மலர்களைச் சொரிந்து கொண்டு நிற்கின்றன.

அவற்றைப் பறித்து ஆரமாய்த் தொடுக்கவும், சோமுவின் படத்திற்கு அழகாய்ச் சூட்டவும், அவனது நினைவையே வழிபட்டு நிற்கவும் அவளிருக்கிறாள்.....

சோமுவின் படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றி வணங்கிக் கொண்டிருந்தாள் கௌரி..... மாலை மாலையாய்க் கண்ணீர் வழிந்து அவள் உடலை நனைக்கிறது.

"நான் வழிபடும் உங்கள் நினைவுக்கு அஞ்சலியாய் சமர்ப்பித்த இந்தப் பூக்களுக்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், உங்கள் மரணத்திற்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், இரண்டு மாதங்களேயானாலும் வீர புருஷனோடு வாழ்ந்த எனது சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு மகத்தான அர்த்தம் காண்கிறேன் நான்...... நாளைப் பிறக்கப் போகும் நம் மகன் வாழ்க்கையும் அர்த்தம் நிறைந்திருக்கும்----அவன் ஒரு வீரனின் மகன்' உங்கள் தகப்பனார் இன்னொரு மகன் இல்லையே என்று வருந்துகிறார். அந்தச் சிங்கம் குகைக்குள் இருந்து இன்னும் வௌியே வரவில்லை...... இந்த நாட்டின் பெண் குலம் உள்ளவரை வீரருக்கா பஞ்சம்'..... உங்கள் அம்மாவின் கண்ணீருக்குத்தான் மாற்றே இல்லை.....அவர்கள் எவ்வளவு பாக்கியசாலி...." என்று எவ்வளவு விஷயங்களை அவனோடு அவள் மௌனமாய் பேசுகிறாள்........

திடீரென்று அடிவயிற்றில், விலாப் புறத்தில் சுருக்கெனக் குத்தி வலிக்க கணவனின் படத்தின் முன் கைகூப்பி நின்றிருந்த கௌரிக் கட்டிலின் மீது சாய்ந்து படுத்தாள்......

அவள் கண் முன்னே நூறு வண்ணங்களில் ஆயிரக் கணக்கான பூக்கள் மலர்ந்து ஜொலிக்கின்றன.


வௌியே திண்ணையிலிருந்து மீசையை முறுக்கியவாறு பெரியசாமிப் பிள்ளை, தன் மகன் யுத்த களத்தில், மறைந்திருந்து குழியிலிருந்து மேலேறி வந்து, முன்னேறி வந்து கொண்டிருக்கும் எதிரிகளில் ஆறுபேரை ஒரே கணத்தில் சுட்டுக் கொன்றதையும், அப்போது தூரத்திலிருந்து வந்த குண்டொன்று அவன் உயிரைப் பறித்துச் சென்றதையும் பத்திரிக்கையில் படித்து யாருக்கோ விளக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம்; ஒரு வீரனின் மரணத்தில் உள்ள சோகம் பனிப்படலம் போல் மறைந்து போகும். அவன் வாழ்ந்தபோது புரிந்த வீர சாகசமே, காலம் காலமாய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பூ_உதிரும்&oldid=20013" இலிருந்து மீள்விக்கப்பட்டது