இசை அமுது/காதல் பகுதி

விக்கிமூலம் இலிருந்து

வண்டிக்காரன்[தொகு]

அதோ பாரடி அவரே என் கணவர்--
அதோ பாரடி!

புதுமாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் என்னை வாட்டி!
அதோ பாரடி!

இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி
தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?
சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி?
அதோ பாரடி!

ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா
"ஆசைமுத்தம்" என்று தந்து நடந்தார்!
அதோ பாரடி!

மாடு மேய்ப்பவன்[தொகு]

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?<

பாவோடும் பெண்கள்[தொகு]

நடை ஓவியங்கள்! அடடா!
நடுவீதியிற் பாவோடும் மடவார்--
நடை ஓவியங்கள்!

இடதுகைத் திரிவட்டம் எழிலொடு சுழலும்
ஏந்தும் வலதுகை வீசுமுள் அசையும்--
நடை ஓவியங்கள்!

தண்டை யாடிடும் காலில்!
கெண்டை விழிபோகும் நூலில்!
கொண்டை மேலெலாம் நறுமலர்க் காடு
கொடியிடை அசையும் மிகஅழ கோடு--
நடை ஓவியங்கள்!

உலகினுக் குடை தேவை
உடைக்கு வேண்டும் நூற்பாவே
உலவும் மங்கைமார் இதனை எண்ணுவார்
உயிரும் உணர்வுமாய்த் தொண்டு நண்ணுவார்--
நடை ஓவியங்கள்!

தறித்தொழிலாளி நினைவு[தொகு]

இழை யெலாம் அவள் பூங்
குழலோ! கைத்தறியின்-- இழை

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்--என்
விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு--நான்
தூங்கு முன்னே எனைக் கண்டு--மங்கை,
"எழுதினீர்களா மேற்கொண்டு-- பதில்
என்தாய்க்" கென்று கேட்டதுண்டு--தேன்
பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?--அவள்
பின்னும் என்னிடம் நின்றதா பிழை?-- இழை

தார்கொண்ட நாடாவைக் கையினால்--நான்
தறியில் கோப்பதும் தேவை--அன்றோ?
பார்கொண்ட மானத்தை--நான்
பாதுகாப்பதும் தேவை--மிகச்
சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை--நான்
சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை!-- இழை

உழவன் பாட்டு[தொகு]

சென்று பொழுதுசாய--வரு
கின்றேனடி விரைவாக!
இன்று தவறினால் ஈரம் போகுமடி
இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி-- சென்று

வேலி முள்சுமந்த கூலிகொடடி
ஆள் வந்தால்--நீ
வேளை ஆகுமுன் கொண்டுவா
கூழிருந்தால்!

வேலைக்காகப் பகல் போதில்
உன்னைப் பிரிந்தால்
விடியுமட்டும் யார் கேட்பர்
காதல் புரிந்தால்-- சென்று

சேவல் குரல்கிழியக் கூவல்
கேளடி கரும்பு!--நின்
ஆவல் தெரியுமடி போக
விடைகொடு! திரும்பு!

தேவையிருக்கையில் உன்றன்
நெஞ்சோ இரும்பு!
சிவலைப் பசுவுக்கோ தீனி
வைக்க விரும்பு-- சென்று.

உழத்தி[தொகு]

களை யெடுக்கின்றாள் -- அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
களை யெடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!

கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா?--அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?-- களை

"செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்!--ஆம்"
என்ற நினைவினால்
என்னருந் தையல்,
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட-- களை

ஆலைத் தொழிலாளி[தொகு]

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின்...

காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,
வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே

ஆலையின் சங்கே...

மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே
ஆலையின் சங்கே...

குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும்
குந்திப்பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும்
ஆலையின் சங்கே...

இரும்பாலைத் தொழிலாளி[தொகு]

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்
அழுக்குத் துணிக்குள்ளே...

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ" என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே...

கோடாலிக்காரன்[தொகு]

வெய்யில் தாழ வரச் சொல்லடி -- இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்என்று
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கூரைக்குப்பின் னால் இருக்கும் தென்னை -- அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலூர் சென்றுவிட்டாள்; நாளை -- சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளழுகும் பாளை -- நாள்
மாறிவிட்டால் ஆசை எல்லாம் தூளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.

கூடைமுறம் கட்டுவோர்[தொகு]

கசங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம் -- நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே -- இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை

காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது -- நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடி யாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும் -- அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.

பூக்காரி[தொகு]

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!

பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து...

தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் கின்றாள் -- ஒரு
பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன்
பூவை "என்பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து...

காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து -- பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ!
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து...

குறவர்[தொகு]

காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்

சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்

ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்

தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடு பட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!

தபாற்காரன்[தொகு]

வருகின்றார் தபால்காரர் -- கடிதம்
தருகின்றாரோ இல்லையோ?
வருகின்றார் தபால்காரர்!

தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்
குரியதோ என் தந்தைக் குரியதோ?
வருகின்றார் தபால்காரர்!

வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்ததோ?
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக் குமோ இராதோ?
வருகின்றார் தபால்காரர்!

அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ விரைவிலோ?
இன்று போதல் நூறாண்டு போதலே
அன்றி நாளைஎன் பதுவென் சாதலே!
வருகின்றார் தபால்காரர்!

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்[தொகு]

மந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!
தொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி -- அவன்
எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி!

கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள் -- அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள் -- அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்
"கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ -- இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?" என்றாள்
"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான் -- "நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்.

ஓவியக்காரன்[தொகு]

ஓவியம் வரைந்தான் -- அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே
ஓவியம் வரைந்தான்!

கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
ஓவியம் வரைந்தான்!

காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன்கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
ஓவியம் வரைந்தான்!

இன்பம்[தொகு]

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா
பசி என்று வந்தால்...

பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்
பசி என்று வந்தால்...

அறத்தால் வருவதே இன்பம் -- அப்பா
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
பசி என்று வந்தால்...

மனுவின்மொழி அறமான தொருநாள் -- அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!
சினம்அவா சாதிமதம் புலைநாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
பசி என்று வந்தால்...

சிறார் பொறுப்பு[தொகு]

இன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்
இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

தூய்மை[தொகு]

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!

அன்பு[தொகு]

அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?

மெய்[தொகு]

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!

பொறுமை[தொகு]

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை

சினம்[தொகு]

சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு -- அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே -- காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே -- அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

மழை[தொகு]

மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...

நிலா[தொகு]

முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே --அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!
அழுதமுகம் சிரித்ததுபோல்
அல்லி விரித்தாற் போல் -- மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக்கிடந் தாற்போல்
முழுமை நிலா! அழகு நிலா!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு! -- நம்
பொருட்டு வந்ததுபாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்! -- பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
முழுமை நிலா! அழகு நிலா!

கறவை[தொகு]

நிறையப் பால் தரும் கறவை -- நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத் திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
நிறையப் பால்தரும் கறவை!

நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்
தூய்மை செய்எந் நாளும்!
தோய்வு குப்பை கூளம் -- இன்றித்
துடைக்க என் ஓக்காளம்?
வாய் மணக்கவே, உடல் மணக்கவே
வட்டில் நெய்யோடு கட்டித்தயிர் ஏடு
நிறையப் பால்தரும் கறவை!

ஈக்கள் மொய்த்தல் தீது! -- கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது -- மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும், நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
நிறையப் பால்தரும் கறவை!

சிட்டு[தொகு]

இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!
எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பி
இத்தனைச் சிறிய சிட்டு!

குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்
கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு
இத்தனைச் சிறிய சிட்டு!

கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத் தாலது திட்டும்!
இத்தனைச் சிறிய சிட்டு!

மல்லி பிளந்தது போன்றதன் கண்ணை
வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணை!
கொல்லையில் தன் பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
இத்தனைச் சிறிய சிட்டு!

காக்கை[தொகு]

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கை
அழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால் --அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும்! -- அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம் -- நல்ல
வரிசை கெட்டமக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -- அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

நாய்[தொகு]

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...

பூனை[தொகு]

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!
பூனை வந்தது பூனை!

காப்பி[தொகு]

காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

புகைச் சுருட்டு[தொகு]

புகைச் சுருட்டால் இளமை பறிபோகும் பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் -- நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசுபணத்தால் தீச்செயலை வாங்கிப் -- பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி -- நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இசை_அமுது/காதல்_பகுதி&oldid=23503" இலிருந்து மீள்விக்கப்பட்டது