புதிய வார்ப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும் நெடுக்கும் அலைந்துகொண்டு இருந்தது. வராந்தா வழியாக-அவளைத் தேடியவாறு-சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக் கருப்புப் பூனை.

பொழுது மங்கி வெகுநேரம் ஆகியும் விளக்கைப் பொருத்த வேண்டுமென்ற உணர்வுகூட அற்றவளாய், முன் ஹாலில் இருண்ட மூலையில் கிடந்த ஸ்டூல் ஒன்றில், யாருக்கோ அஞ்சிப் பதுங்கியவள் மாதிரி உட்கார்ந்திருந்த இந்துவின் தாய் குஞ்சம்மாள், தலை நிமிர்த்தி மாடி வராந்தாவைப் பார்த்தாள்.

இருளில் ஜொலிக்கின்ற அந்தக் கறுப்புப் பூனையின் இரண்டு கொள்ளிக் கண்களையும் காண அவள் அச்சம் கொண்டாள். அந்தப் பூனையும் 'இந்து எங்கே? . . . இந்து எங்கே . . .?' என்று சினம் மிகுந்து அவள் மீது பாய்ந்து குதறுவதுபோல் அலறியவாறு மாடிப் படிகளில் வாலை நௌித்துச் சுழற்றியவண்ணம் இறங்கி வந்து கொண்டிருந்தது.

அந்தப் பூனையின் அலறல் மனிதக் குரல்போல் அவளுக்கு 'உருவகம்' கொண்டது. குஞ்சம்மாள் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அவள் கண்களுக்கு அந்தப் பூனையின் விழிகள், தன் கணவரின் விழிகளைப் போன்று அச்சம் விளைத்தன.

அந்தச் சமயத்தில் தன் கணவரின் பிரசன்னத்தைக் கற்பனை செய்தே அவள் உடல் நடுங்கினாள்.

மாடிப் படிகளில் அலறியவாறே இறங்கி வந்த கறுப்புப் பூனை, குஞ்சம்மாளின் காலைச் சுற்றிச் சுற்றிப் பரிதாபமாய் அழுதது. குஞ்சம்மாள் குனிந்து பூனையைக் கையில் எடுத்தாள். முகத்தோடு அணைத்துக்கொண்டு அழுதாள். தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டதுபோல் அமைதியடைந்தது.

இந்தப் பூனையின் தவிப்பை அவள் உதாசீனப்படுத்திவிடலாம். இதுபோல் மற்றவர்களின் தவிப்பை உதாசீனப்படுத்த தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், சமாதானப்படுத்தி அவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதிலாவது தான் வெற்றி காணமுடியுமா என்று எண்ணியபோது, அவள் மலைத்துப்போய்க் குழம்பினாள்.

அந்தக் குழப்பத்திலும் மலைப்பிலும் அவள் கையிலிருந்து நழுவிக் குதித்தப் பூனை, மீண்டும் இந்துவைத் தேடி அழைத்தவாறு ஒரு குழந்தைபோல் பின்கட்டை நோக்கி ஓடிற்று. அந்தப் பூனையின் குரல் குஞ்சம்மாள் நெஞ்சத்தைக் குடைத்தது.

பாவம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்துவுக்கு - மாடியறையில் சிறையிடப்பட்டு நாலு வருஷமாய்த் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இந்துவுக்கு - இந்தப் பூனைதான் உற்ற துணையாய் உடன் இருந்தது. அந்த நாலு வருஷத்தின் ஆரம்ப காலத்தில் - தன் குற்றத்தின் பயங்கரத்தையும், அந்தத் தண்டனையின் கொடுமையையும் அறியக்கூட முடியாத அந்த வயதில் - அவள் நாளெல்லாம் பாடிக்கொண்டும் பூனையோடு விளையாடிக் கொண்டும் இருந்தாள் . . பிறகு சில காலத்தில் பாட்டும் ஆட்டமும் குறைந்து, சதா நேரமும் படித்துக்கொண்டே இருந்தாள் . .

சின்னவள் விஜயாவும் லைப்ரரியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து அவளுக்காகக் குவிப்பாள். ஆனால் சமீப காலங்களில் அவள் இவற்றிலெல்லாம் நாட்டமின்றி, தன்னுள்ளேயே அரிக்கப்பட்டவள்போல் குன்றிப் போய், சதா நேரமும் ஆழ்ந்த சிந்தனையும், வானத்தை வெறித்த பார்வையும், குமுறி விடுகின்ற பெருமூச்சுகளுமாய்ச் சாம்பிக் கிடந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாய் அருகில் இருந்து அவள் தனிமையை மாற்றியது இந்தக் கறுப்புப் பூனைதான். அவளும் தனது ஆழ்ந்த சோகங்களின் நடுவே இந்தப் பூனையை எவ்வளவோ அன்போடு பாலூற்றி வளர்த்தாள். இதைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வ்ந்தது! போகும்போது இதைப்பற்றி நினைத்திருப்பாளா? கதறிக் கதறி அழுதாளே . .அந்த அழுகையில் இந்தக் கறுப்புப் பூனைக்கும் பங்கு உண்டா? அவள்தான் சொல்லிவிட்டாளே! 'யாருக்காகவும் தனது வாழ்க்கையைத் தான் பலியிட முடியாது' என்று . . .

'அவள் சொன்னது இருக்கட்டும். அப்படி ஒரு காரியத்தை என்னால் எப்படிச் செய்ய முடிந்தது' என்ற பிரமிப்பில் குஞ்சம்மாளின் விழிகள் வெறித்தன.

செய்த காரியம் சரிதான். ஆனால் சரியான காரியங்களையெல்லாம் செய்துவிட முடிகிறதா? அவ்விதம் தனக்குச் செய்வதற்கான துணிச்சலைத் தந்த அந்த விநாடிகளை அவள் மனத்துள் வாழ்த்தினாள். அதன் விளைவுகளைக் கற்பனை செய்து இப்போது அவள் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில்கூட, அது 'சரி' தான் என்று தோன்றும் அளவுக்கு இந்தக் காரியம் சரியானதாய் இருந்தது. எனினும் அந்த நிலைமை இப்போது இருந்தால் - இந்த நிமிஷம் அந்தத் துணிச்சல் தனக்கு இருக்காது என்றே அவளுக்குத் தோன்றியது. அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம், அந்த நேரத்தில் அவளைப் புதிதாய் வார்த்து, அந்தப் புதுமையான துணிச்சலைத் தந்து அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது . . .

அப்படி ஒரு நேரத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் நான்கு வருஷத்துக்கு முன் பதினேழு வயதில் இந்து அவனுடன் ஓடிப்போய் இருக்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆமாம்; ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன.

அவளுக்கு நேர்ந்த அந்த நிர்ப்பந்தத்தை நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் தன்னால் உணரமுடிந்திருக்கிறது என்று நினைத்தபோது, தன்னைப்போல் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதை உணர்ந்துகொள்ள முடியுமா? என்ற் அச்சம் பிறந்தது அவளுக்கு.

'இந்து எங்கே? இந்து எங்கே?' என்று அலறியவாறே மீண்டும் அந்தக் கறுப்புப் பூனை கண்களில் பந்தம் கொளுத்தித் தேடிக்கொண்டு அவள் எதிரே வந்து நின்றது.

இன்னும் சற்று நேரத்தில் இதே மாதிரி தன்னைச் சூழ்ந்து நெருக்கிக் கேட்கப்போகும் தன் குடும்பத்தினருக்கு அவள் என்ன பதில் சொல்லப்போகிறாளோ?

இந்தக் குடும்பத்தின் அதிகாரமும் பொறுப்பும் மிக்க தலைவி அவளே எனினும், குடும்பம் என்ற கூட்டுக்குள் தனக்குத் தரப்பட்ட, தனக்குரிய, அதிகாரத்தைத் தான் வரம்பு மீறி உபயோகித்து விட்டோம் என்ற பயமே தோன்றி எல்லோர் முன்னிலையிலும் தான் குற்றவாளியாகி நிற்பது போலிருந்தது அவளுக்கு.

ஓடிப்போன-தன்னால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட இந்துவைத் தவிர, தற்சமயம் வௌியில் போயிருக்கும் மற்றவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நிச்சயம் திரும்பி வருவார்கள்.

கோயிலுக்குப் போயிருக்கும் மாமியாரோ, டியூஷனுக்குப் போயிருக்கும் அம்பியோ, காலேஜுக்குப் போய்விட்டு ஊர் சுற்றியபின் ஏதேதோ காரணங்கள் கூறிக்கொண்டுவரும் விஜயாவோ, அல்லது இந்நேரம் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருக்கும் அவள் கணவரோ - யாரையேனும் அவள் முதலில் சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் யாரைச் சந்தித்தாலும் மொத்தமாக எல்லோரயும் அவள் சமாளித்தே தீரவேண்டும்!

குஞ்சம்மாளுக்கு மீண்டும் முகமெல்லாம் வியர்வை கண்டது.

வீடு இருண்டே கிடந்தது. விளக்கைப் பொருத்தவேண்டும் என்ற உணர்வுகூட அவளுக்கு இல்லை.

பாட்டிதான் முதலில் வந்தாள்.

நாளெல்லாம் மழை பெய்து கோயிலின் பிரகாரமெல்லாம் சேறும் சகதியும் குழம்பி நின்றதோடல்லாமல் எந்த நிமிஷமும் மீண்டும் மழைபெய்யகூடும் என்ற அறிகுறியோடு பகலே ஒரு அந்தியாய் இருண்டு கிடந்ததால் வழக்கமாகக் கோயிலில் நடைபெறும் உபன்யாசம் இன்று உட்பிரகாரத்தில்-சாஸ்திரத்துக்குச் சற்று நேரம் - சுருக்கமாகவே நடந்து முடிந்திருந்தது. இல்லாவிட்டால் பாட்டிதான் எப்போதுமே கடைசியாக வருவாள்.

காம்பவுண்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த பாட்டி, வீடு முழுவதும் இருண்டு கிடப்பதை கண்ணுற்று, "என்னடி பொண்ணே, ஒரே இருளோன்னு கெடக்கே? . . கரண்டு கட்டா? இந்து . . இந்து போன் பண்றத்துக்கு என்ன?" என்று கூப்பாடு போட்டவாறே இருளில் துழாவியவாறு மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவரை ஒரு கையாலும் வலது முழங்காலை ஒரு கையாலும் தாங்கி விசுக் விசுக்கென்று ஏறி மேலே போனாள்.

ஒரு நாளைக்கு நூறு தடவை மாடிப்படி ஏறி இறங்குவதானாலும் பாட்டிக்கு அலுக்காது. அந்தக் குடும்பத்திலேயே சின்ன உருவம் பாட்டிதான். ராமபத்திர ஐயருக்கு இவள் அம்மா என்று நினைக்க யாருக்கும் ஒரு வியப்பும் சிரிப்பும் நிச்சயம் வரும். ராமபத்திரனுக்கு இந்த மாடியை நினைத்தாலே பயம்; ஒரு முறை ஏறி இறங்குவதற்குள் அவருக்கு மேல்மூச்சு வாங்கும். அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. ஆகவே மாடிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. குஞ்சம்மாளுக்கோ மாடியை நினைத்தாலே குடலைப் பிடுங்கிக்கொண்டு வரும். அவ்வளவு ஆத்திரம் இந்துவின்மீது. விஜயாவுக்குப் படிக்க இடைஞ்சலா யிருக்கக்கூடாது என்பதற்காக கீழே பின் கட்டில் தனி அறை. பாட்டியும் அம்பியும் மாடி ஏறி இறங்க அலுக்காதவர்கள். ஏறி இறங்கக் களைப்புத் தெரியாமல் இருக்க பாட்டுப் பாடுவதுபோல் 'இந்து இந்து' என்று பாட்டி அழைப்பாள்.

குழைந்து குழைந்து பேத்தியை இந்தப் பாட்டி அழைப்பதைக் கேட்கும் போதெல்லாம் குஞ்சம்மாளின் முகம் சுருங்கும். அந்தப் பெயரின்மீதே அவளுக்கு அத்தனை வெறுப்பு. நாலு வருஷத்துக்கு முன் எங்கோ ஓடிப்போன இந்துவை ஒன்றரை மாதத்திற்குப்பின் - ஒரு நாள் கண்டு பிடித்துக்கொண்டு வந்து அந்த அறையில் போட்டு அடைத்தாரே ராமபத்திரன், அன்றைக்கு மாடிக்குப் போய் அவள் எதிரே நின்று, உதட்டைக் கடித்து இரண்டு கைகளையும் அவள் எதிரே நீட்டிக்கொண்டு சப்தமில்லாமல் கனத்த குரலில், "செத்துப் போயேண்டி . . இந்த மானங்கெட்ட உயிரை ஏன் வெச்சிண்டிருக்கே? தூ! நீ ஒரு ஜென்மமா?' என்று இந்துவின் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தாளே, அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது இன்றுதான்; இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான்.

பாட்டி மாடிக்குப் போய் அறையையும் வராந்தாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த வீடுகளில் விளக்கு எரிவதைக்கண்டு "ஊரெல்லாம் எரியறதே! நம்மாத்திலே மட்டும் என்னடி கோளாறு?" என்று முனகிக்கொண்டே சுவரைத் தடவி ஸ்விட்ச்சைப் போட்டாள்.

பளீரென்று வீசிய வௌிச்சத்தில் அறை கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாள் பாட்டி. அலமாரியின் கதவுகள் இரண்டும் யோரோ அள்ளிக்கொண்டு போய்விட்டதுபோல் விரியத் திறந்து, துணிகளும் பொருள்களும் இறைந்து கிடந்தன.

"இந்து . . . அடியே இந்து!" என்று கூவியவாறே மாடிப்படிகளில் இறங்கிவந்த பாட்டி, சமையல் அறையில் தெரிந்த சிறு வௌிச்சத்தைக் கண்டு "குஞ்சு . . . குஞ்சம்மா . . எல்லோரும் எங்கேடி போயிட்டேள்? இந்து . . உள்ளேயா இருக்கே? என்று கேட்டவாறே சமையல் அறையை நோக்கி நகர்ந்தபோது அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து . . .

"இந்து இல்லே . . ." என்று துயரத்தின் கனமேறிய குரல் இருளிலிருந்து ஒலிக்கக் கேட்டு, நின்ற நிலையிலேயே தோள் வழியே முகம் திருப்பிப் பார்த்தாள் பாட்டி. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுவரைத் தடவி ஹால் விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டாள்.

"இருட்டிலே உட்கார்ந்துண்டு என்னடி செய்யறே?" என்று கேட்டவாறே குஞ்சம்மாளின் அருகே பாட்டி நெருங்கி வந்தாள். குஞ்சம்மாள் துயரத்தால் உதடுகள் துடிக்க ஒரு விநாடி தலைக்குனிந்து அழுகையை விழுங்கிக்கொண்டு முகம் நிமிர்த்தி மாமியாரைப் பார்த்தாள். சில விநாடிகள் ஒன்றுமே பேசாமல் சிவந்த விழிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். பாட்டியும் ஒன்றுமே விசாரிக்காமல் எதையோ விவர விளக்கங்களற்றுப் பொதுப்படையாகப் புரிந்து கொண்டவள்போல் இடுப்பில் ஒரு கையை ஊன்றி மௌனமாக கலவரத்தோடு குஞ்சம்மாளின் முகத்தைப் பார்த்தாள்.

"எங்கே இந்து?" என்று குரலை அடக்கித் தனது கன்னங்களிரண்டிலும் உள்ளங் கைகளை வைத்து அழுத்திக்கொண்டு கேட்டாள் பாட்டி.

"அவன் வந்தான்;அவனோட அவளும் போயிட்டா" என்று கரகரத்தக் குரலில் கூறினாள் குஞ்சம்மாள்.

"அந்தப் பாவி மகன் எதுக்கு வரணும் இங்கே? இவளை நீ எப்படிப் போகவிட்டே? அவள் அப்பன் கிளப்லே தானே இருப்பான்? போன் பண்ணிருக்கபடாதோ? முன்னே பிடிச்சு ஜெயில்லே போட்ட மாதிரி இந்தத் தடவை தூக்கிலேயே போடுவானே?இப்பிடி அறிவு கெட்டவளா, பயித்தியம் புடிச்ச மாதிரி உட்காந்துண்டு, 'அவ அவனோட போயிட்டா'ங்கரயே? அவ அப்பன் வந்தா உன்னைக் கொன்னுடுவானேடி?" என்று பாட்டி கைகளைப் பிசைந்து, தலையிலடித்துக் கொண்டு அங்கலாய்த்தவாறே பக்கத்தில் கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

குஞ்சம்மாள் எல்லாவற்றுக்கும் துணிந்தவள்மாதிரி, எதற்கும் அஞ்சாதவள் போல் தலைக் குனிந்து மௌனமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். பாட்டியம்மாள் அங்கலாய்த்து ஓய்ந்தபின் தரையைக் கால் விரல்களால் தேய்த்தவாறே குஞ்சம்மாள் தௌிவான குரலில் கேட்டாள்:

"அவனைப் பிடிச்சு ஜெயில்லே போட்டோம் . . .அவன் செய்யாத குத்தமெல்லாம் சொல்லி, அவனுக்குத் திருடன்னு பட்டம் கட்டி, அதுக்கு அவளையே அவனுக்கு எதிரா சாட்சிச் சொல்ல வச்சு, நாலு வருஷம் ஜெயில்லே போட்டோம். என்ன வாழ்ந்தோம்? என் பொண்ணுக்கு என்ன விமோசனம் ஏற்பட்டது? யோசிக்க வேண்டாமா? நகைக்கு ஆசைப்பட்டு மைனர் பொண்ணைக் கடத்திண்டு போனான்னு நாம்ப சொன்னாலும் - ஒரு மாதத்துக்கு மேலே அவா ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திருக்காங்கறதை நாம்ப மறைக்கப் பார்த்தாலும் - ஊரிலே யாரு நம்பறா? என்னத்தான் காசு பணத்தைக் காட்டினாலும், ரொம்ப வேண்டியவாகூட விஜயாவைத்தான் பார்க்க வராளே தவிர, இவளை யாரு சீந்தரா? . . . அப்புறம் இவ என்னதான் ஆறது? உங்க பிள்ளை அவனைத் தூக்கிலேகூடப் போடுவார் . . . அவருக்கு வர்ர கோபத்திலே தானே தன் கையாலே அவனைக் கொன்னாலும் கொன்னுடுவார் . . சரி, அப்புறம் இந்துவோட பிரச்னை அத்தோடு நமக்குத் தீர்ந்துடுமா? அவ நமக்கு ஒரு பிரச்னை இல்லையா? அந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்த நாலு வருஷமா நாம்ப என்ன பண்ணினோம்? என்னப் பண்ணப்போறோம்? என்ன பண்ண முடியும்? யோசிங்கோ மாமி . . ." என்று யோசித்து யோசித்து ஆழமான தொனியில் குஞ்சம்மாள் கூறுவதைக் கவலையோடும் கலங்குகின்ற கண்களோடும் கேட்ட பாட்டிக்கு சில யோசனைகள் பிறக்க ஆரம்பித்தன.

மீண்டும் சில நிமிஷ மௌனத்தில் இருவருமே தலை குனிந்து அமர்ந்திருந்தனர். திடீரென்று இருவருமே ஒரே சமயத்தில் தலை நிமிர்ந்து பார்த்தனர். இப்போது பாட்டியின் கண்களுக்கு தனது மருமகள் அறிவு கெட்டவளாகவோ, பைத்தியம் பிடித்தவளாகவோ தோன்றவில்லை; ஆனால் இவ்வளவு நேரம் குஞ்சம்மாளை மட்டும் தனியாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பயமும் 'எப்படிச் சமாளிக்கப் போகிறோம், இதை' என்ற பிரச்னையும் பாட்டியைப் பிடித்து ஆட்ட ஆரம்பின.

"என்ன நடந்தது? எதுக்கு அப்படிப் பண்ணினே . . இனிமே என்னடி பண்றது? நேக்கு வயத்தையெல்லாம் என்னமோ பண்றதே . . . முன்னேயே அவ ஓடிப்போனப்போ - எல்லாத்துக்கும் நீயும் நானும்தான் காரணம்னு அவன் பேசல்லியா? நீயும் நானும்தான் அவனோட ஆபீஸ் அட்டண்டரை ஆபீஸ் வேலைக்கே விடாம வீட்டுக்குக் கூப்பிட்டுக் கூப்பிட்டு வேலை வாங்கினமாம். ராத்திரி பகல்னு இல்லாம அந்த வேணுவை உக்காத்திவைச்சு சாப்பாடும் பலகாரமும் காபியும் குடுத்துக் குடுத்து இந்த வீட்டிலே ஒருத்தன் மாதிரி ஆக்கினோமாம் . . இப்படி எவ்வளவு பேசினான் . . இப்போ அவன் வந்து கேப்பானடி? ஏண்டி, நோக்கு பயமா இல்லையா?" என்று உடல் நடுங்க, நடுங்குகின்ற கைகளால் மருமகளைத் தொட்டாள் பாட்டி.

குஞ்சம்மாள் தைரியம் அளிப்பவள்போல் தன் கரத்தின் மேல் வைத்த பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் மனத்தில் ஒரு தைரியமே பிறந்தது.

பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூடத் தன்னைவிடப் பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும். பயத்தையும் துயரத்தையும் சமாளிக்கவேண்டுமானால் முதலில் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். குஞ்சம்மாள் நடுங்கிக் கொண்டிருந்தது அதற்குத்தான். தனது பயத்தைப் பகிர்ந்து கொள்ளத் தக்கவர்கள் வராமால், யாரை எண்ணிப் பயந்துகொண்டு இருந்தாளோ அந்தக் கணவரே வந்து விடுவாரோ என்றுதான் அவள் தவிக்க வண்ணமிருந்தாள்.

இப்போது பாட்டியம்மாளும் தன்னைப்போல், 'இந்துவின் அந்த ஓடிப்போன குற்றத்துக்குத் தண்டனை தந்தது தவிர அவள் எதிர்கால வாழ்க்கைக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே எதுவும் செய்யவில்லை . . செய்ய முடிந்ததுமில்லை' என்று பொறுப்பான சிந்தனை வயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள் குஞ்சம்மாள். சில மணி நேரங்களுக்கு முன் திடீரெனச் சமையல் அறையிலிருந்து வௌியே வந்து பார்த்தபோது வேணுவும் இந்துவும் நின்றிருந்த முன் வராந்தாப் பகுதியை அவள் பார்வை இப்போது வெறித்தது.

அவளுக்கும் முதலில் அவனைப் பார்த்தபோது தன் மகளின் வாழ்வைக் கெடுத்த பாவி வந்திருக்கிறானே என்றுதான் வயிற்றைப் பிடுங்கிக் கொண்டு ஆத்திரம் வந்தது ---

அப்போது வௌியே மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது; சாரலைத் தடுப்பதற்காக வராந்தாவின் முன்புறத்தில் தொங்கிய மூங்கில் தட்டியின் மறைவில் கிடந்த பெஞ்சின் மீது அவன் உட்கார்ந்திருந்தான். இந்து அவன் அருகே மிகவும் உரிமையோடு நின்று புடவைத் தலைப்பால் முகத்தை மூடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

அவன் கலங்கிய கண்களும், உணர்ச்சி மிகுதியால் துடிக்கின்ற உதடுகளுமாய்ச் சொன்னான்: "இந்து, நான் ஜெயில்லெ இருந்த ஒவ்வொரு நிமிஷமும் 'எனக்கு வேணும்;அறிவில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த எனக்கு இந்த தண்டனை வேணும், வேணும்'னு அனுபவிச்சேன். ஆனா, என்னைத் 'திருடன்'னு உன் நகைக்கு ஆசைப்பட்டு உன்னைக் கடத்திக்கிட்டு போனவன்னு சொன்னாங்களே . . . போகட்டும்! நீயும்கூட அதுக்கு ஆதரவா சாட்சியம் சொன்னியே - அதை நெனச்சப்போ உன் மேலெ எனக்குக் கோபமே வரலே; பரிதாபமா இருந்திச்சு. இந்தக் கொழந்தையை இழுத்துக்கிட்டு போனதுக்கு இப்படி ஒரு தண்டனையும் வேண்டியதுதான்னு நெனைச்சுக்கிட்டேன் . . . ஆனா நெஜமாச் சொல்லு, இந்து . . நாம ரெண்டு பேரும் ஏதோ முடிவிலே, ஏதொ ஒரு வெறியிலே, ரெண்டுபேரும் சம்மதிச்சுத்தானே ஓடினோம்? இப்போ பயித்தியக்காரத்தனமாகத் தோணினாலும் அப்போ ஏதோ புனிதமான காதல்னு நெனைச்சுத்தானே ஓடினோம்? காதலர்களுக்கு வயிறும் பசியும் உண்டுன்னு ஓடறத்துக்கு முன்னே நமக்குத் தோணல்லே . . .எங்கெங்கேயோ வேலை தேடி அலைஞ்சப்புறம் பட்டினி கிடக்க முடியாம நீயே தானே உன் நகைகளைக் கழட்டிக் கொடுத்து விக்கச் சொன்னே? நானும் முதல்லே மாட்டேன்னு மறுக்கல்லியா? 'நானே உனக்குன்னு வந்தப்புறம் இந்த நகை உனக்கு சொந்தமில்லையா'ன்னு நீ கேக்கலியா? அதெல்லாம் வெறும் நடிப்புன்னு நீ நினைக்கிறயா? இப்போ நீ குழந்தையில்லெ . . நல்லதும் கெட்டதும் தெரியும் - இப்ப சொல்லு, உன் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை ஏமாத்தி நான் அழைச்சிக்கிட்டுப் போனேன்னு நீ நெனக்கிறியா, இந்து? . .. . இந்து . . . அழாதே சொல்லு . . ." என்று அவன் பழைய சம்பவங்களை நினைப்பூட்டிக் கேட்கும்போது இந்து கதறி அழுதாள்.

"வேணு, என்னை மன்னிச்சுடு . . நான் என் கோழைத்தனத்தாலே உன்னை அபாண்டமாய் பழி சுமத்தித் தண்டனைக்கு ஆளாக்கிட்டேன். அப்ப அவ்வளவு பெரிய பாவமா அது தோணலே . . அந்தப் பாவத்தை நான் இப்பொ அனுபவிக்கிறேன் . . சாகற வரைக்கும் அனுபவிப்பேன் . . ." என்று அவள் அழுதாள்.

"ஸ் . . அழாதே இந்து! எனக்கு நீ ஒரு தீங்கும் செய்யல்லே. நீ மனசார என்னை அப்படி நினைக்கலேன்னா எனக்கு அது போதும் . . ம்ஹூம் . . அழக்கூடாது . . ." என்று அவள் தோளைக் குலுக்கி அவன் சமாதானப்ப்டுத்தினான்.

குஞ்சம்மாள் ஒரு விநாடியில் கோபமடங்கி, நெஞ்சம் குழைய அவர்களிடையே குறுக்கிட மனமின்றி ஹாலிலேயே ஒதுங்கி நின்றாள்.

'யார் பெற்ற பிள்ளையோ இவன்? இவ்வளவு நல்ல பிள்ளையான இந்த வேணு, நான் பெற்ற பெண்ணின்மீது வைத்த ஆசையால் என் கணவரின் முன்கோபத்ததுக்கும் பிடிவாதத்துக்கும் பலியாகி, நாலு வருஷம் அநியாயமாய் ஜெயிலில் இருந்துவிட்டு 'நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யலே' என்று தனக்கு எதிராகச் சாட்சி சொன்னவளிடம் வந்து சொல்கிறானே' என்று நினைக்கும்போது குஞ்சம்மாளின் கண்கள் குளமாயின.

அதே சமயத்தில் அவன் அவளிடன் சொல்லிக் கொண்டிருந்தான்:

"சட்டத்தின் தண்டனையிலிருந்து நான் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமா விடுதலையாகிகிட்டே இருந்தேன் . . .அதே நெரத்தில் உன் குடும்பத்திலே நீ ஒவ்வொரு நாளும் மேலே மேலே கடுமையா தண்டிக்கப்பட்டுக்கிட்டிருப்பேன்னு நான் நினைக்காத நாளே இல்லே, இந்து! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்த ஒரு காரியம் - தப்புதான், என்னைத் தண்டிச்சு விட்டுடுத்து . . ஆனா உனக்கு விடுதலையே கிடையாதா, இந்து? உன் நிலமை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும் . . நான் என்ன செய்யலாம் சொல்லு . . சொல்லு இந்து" - அவன் தவியாய்த் தவித்த போது, இவ்வளவு நேரம் அழுதுகொண்டே இருந்த இந்த அழுகை அடங்கிய விம்மலோடு திணறித் திணறிப் பேசினாள்.

"நாம செய்தது-அப்ப செய்தது-தப்பாகவே இருக்கலாம் . . அந்தக் காரியம் தப்பாப் போனதுக்குக் காரணமே நாம் அதை அப்ப செய்ததுதான். நான் அப்போ என் வாழ்க்கையை நானே தீர்மானிக்கிற வயதிலே இல்லே. அப்போ நான் செய்த காரியத்தினாலே என் வாழ்க்கையே கெட்டுப் போயிருந்தது . . . அதே காரியத்தை நான் இப்ப செய்யல்லேன்னா என் வாழ்க்கை கெட்டே போகும் . . என் வாழ்க்கையை நீயே கெடுத்ததாக இருந்தாலும், இனிமே எனக்கொரு வாழ்க்கை இருக்குன்னா அதை உன்னைத்தவிர வேற யாரும் எனக்குத் தரமுடியாது. ஆனா நான் உனக்குச் செய்த தப்புக்கு நீ திரும்பி என்னைத் தேடி வருவேன்னு நான் நினைக்கவே இல்லே, வேணு . . ." என்று பேச முடியாமல் தொண்டை அடைக்கக் கண் கலங்கினாள் இந்து.

உள்ளே ஹாலில் நின்றிருந்த குஞ்சம்மாள் சுவரில் முகம் புதைத்துக்கொண்டு ரகசியமாய், தோள்கள் குலுங்க அழுதாள்.

"நீ என்ன சொல்றே இந்து? நான் நெனைச்சது போலவேதான் நீயும் நெனைக்கிறியா?" என்று மகிழ்ச்சியும் பதட்டமும் கொண்டு கேட்டான் வேணு.

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து, அழுது சிவந்த முகத்துடன் நிம்மதியோடு பெருமூச்செறிந்தவாறு புன்னகை பூத்தாள்.

அவளது மூடிய இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தது.

"வேணு . . நான் உன்னோட வந்துடறேன், என்னை அழைச்சிண்டு போ. போறும், இந்த நரகம் போறும்! அம்மா என்னை 'செத்துப் போயேண்டி, செத்துப் போயேண்டி' ன்னு அடிக்கடி சொல்றா, எத்தனையோ தடவை நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னுகூட நெனைச்சிருக்கேன். ஏனோ முடியலை என்னாலே . . முடியவே இல்லே வேணு" என்று ஏதோ ஒரு நாள் நிகழ்ந்த சம்பவத்தை ஒரு விநாடி நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினாள் இந்து. வேணுவும் புறங்கையால் கண்களைக் கசக்கிக்கொண்டு அடித் தொண்டையில் கமறிச் செருமினான்.

"நல்ல வேளை வேணு . . நான் அவசரப்பட்டு செத்துப் போகல்லே. நீ வருவேன்னு நான் கனவுகூட கண்டதில்லே. ஆனா இப்பொ தோண்றது; எனக்குத் தெரியாமலே அப்படி ஒரு நம்பிக்கையிலேதான் நான் உயிர் வாழ்ந்தேன்னு . . இல்லேன்னா இவ்வளவு நாள் நான் இந்த உடம்பிலே உயிரை வச்சுண்டு இருந்த்ததுக்குக் காரணமே இல்லே. சரி, நான் உன்னோட வரேன். நாம போயிடுவோம். ஆனா முன்னே மாதிரி யாருக்கும் தெரியாம ரகசியமாப் போகவேண்டாம். பகிரங்கமாகவே போகலாம். எனக்கு அந்த வயசு வந்தாச்சு! அந்த வயசுக்காகத்தான் இந்த வீட்டு மாடிலே நான் காத்துக்கிடந்தேன் போலிருக்கு. ஆனா இந்தத் தடவை எல்லார் கிட்டேயும் சொல்லிட்டே நாம் போகப் போறோம் . . ." என்று அவள் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட வேணு, அவளது துணிச்சலைக் கண்டு வியந்தவன்போல் விழிகளை மலரத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தான்.

அந்த முகம்-நான்கு வருஷங்களுக்கு முன் தான் கண்ட உலகம் தெரியாத பேதை முகமல்ல; வாழ்க்கையின் பலத்த அடியை வாங்கிக் கன்றிப்போய், ஏமாற்றம், துயரம், அவமானம் என்ற வடுக்களை ஏற்று, முடிவற்ற தனிமை என்ற இருளில் கிடந்து, இப்போதுதான் காலத்தால் புதிதாக வார்க்கப்பட்டிருப்பதுபோல் அந்த முகத்தில் அஞ்சாமையும் உறுதியும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. பேதையின் சாயல்கூட இல்லாமல் வாழ்க்கையை நெடிது நோக்கும் தீட்சண்யம் அவள் விழிகளில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

"இவள் ஒரு புதிய வார்ப்பு! இவளை ஏமாற்றிக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகக் கூறினால், உலகம் நம்பாது. ஆகவே இவளோடு கைகோத்துக் கொள்வதன்மூலம் உலகத்தை அச்சமற்றுத் தலை நிமிர்ந்து பார்க்கலாம்' என்ற நம்பிக்கையில் அவன் கம்பீரமாய் எழுந்து நின்றான்.

அப்போதுதான் ஹால் வாசற்படியில் சுவரோரமாய் ஒண்டி நிற்கும் குஞ்சம்மாளை அவன் கண்டான். அவளைக் கண்டதும் அவனுள் ஒரு தாயைக் கண்ட பாசமே சுரத்தது. எத்தனை தடவை அவன் பசியறிந்து அன்போடு அவனுக்கு அவள் உணவு பரிமாறி இருக்கிறாள்! அவன் அவளைக் கரம் கூப்பி நமஸ்கரித்தான்.

அவளுக்கு நெஞ்சைப் பீறிக்கொண்டு அழுகை வந்தது. இருப்பினும் அழுகையோடு அவன்மீது பெருகிச் சுரந்த அன்பையும் அடக்கிக்கொண்டு, "நீ ஏண்டா வந்தே? என் குடியைக் கெடுக்கவா? போ . . .போ . . " என்று விரட்டினாள் குஞ்சம்மாள்.

இந்து திரும்பித் தன் தாயைப் பார்த்தாள்.

"அம்மா!" என்று அழைத்தாள் இந்து. அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. "நானும் போறேம்மா" என்று அழுதாள்.

"போவேடி போவே . . . என்ன நெஞ்சழுத்தம்?" என்று மகளின் கரத்தைப்பற்றி உள்ளே இழுத்து மாடிப்படியருகே தள்ளினாள். "மாடிக்குப் போ! அங்கேயே வைச்சுப் பூட்டச் சொல்றேன் . . வேணு! நீ போறியா, இல்ல போலீசைக் கூப்பிடவா?" என்று திரும்பி நின்று வேணுவை மிரட்டினாள் குஞ்சம்மாள்.

மாடிப்படியில் நின்று சாவதானமாய்த் தாயைப் பார்த்தாள் இந்து: "அம்மா, சட்டம் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லே, என் விருப்பத்துக்கு மாறா என்னெப் பூட்டி வைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லே; நீ போலீசைக் கூப்பிடு. நான் அதை புரிய வைக்கிறேன்" என்று இந்து கூறியபோது குஞ்சம்மாள் மலைத்து நின்றாள்.

"அடிப் பாவி! அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? உன்னைப் பெத்த பாவத்துக்கு வேணும்டி வேணும். தாய் தகப்பனைவிட உனக்கு இவன் ஒசத்தியா ஆயிட்டான் . . இல்லே?" என்று புலம்பி அழுதாள் குஞ்சம்மாள்.

"ஆஹா! மகள் மேலே கொண்ட பாசத்திலேதான் இங்கே என்னை ஆயுள் கைதியா வைச்சிருக்கார் அந்தத் தகப்பனார்! நீயும் அதனாலேதானே, ஒவ்வொரு நாளும் மாடியிலே என் பொணம் விழுந்து கெடக்காதான்னு எதிர்பார்த்துண்டே இருக்கே? போதும் உங்க பாசம்! உங்க வீம்புக்கு நான் பலியாக மாட்டேன். அப்பா வரட்டும், நான் போகத்தான் போறேன் " என்று இந்து ஆவேசம் வந்ததுபோல் கத்தி ஆர்ப்பரித்தாள்.

வேணு வாசற்படியில் இறங்கி மழைச்சாரலில் நனைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தான்.

குஞ்சம்மாள் மாடிப்படியில் நின்றிருக்கும் இந்துவையும் வாசற்படியில் நின்றிருக்கும் வேணுவையும் நடுவில் நின்று மாறி மாறிப் பார்த்தாள்.

மகளின் ஆவேசம் அவளுக்குப் புரிந்தது. அவள் கூறுவதும் உண்மைதானே? இவள் செத்துப் போகட்டும் என்று எத்தனை முறை தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கொடுமையை நினைத்தபோது, நெஞ்செல்லாம் வலித்தது அந்தத் தாய்க்கு.

'இவளைச் சாகப் பிரார்த்திக்கும் தாய், உயிரோடு வதைக்கும் தந்தை, யாருமே மதிக்காமல் வீட்டுக்குள்ளேயே தீண்டத் தகாதவளாகப் பவிசிழந்து நிற்க வைத்துவிட்ட குடும்பத்தின் ஓரவஞ்சனை - இவற்றுக்கிடையே அவளுக்கு ஒரு வாழ்க்கையைத் தரக் கூடியவன் இந்த வேணு மட்டுமே அல்லவா?' என்று ஒரு நிமிஷ நிர்ப்பந்ததில் அந்தத் தாயுள்ளம் ஆழமாய் அறிந்துணர்ந்தது.

தான் அவனை விரட்டுவதும், அவளை மிரட்டுவதும் உள்ளார்ந்த சம்மத்தோடு அல்ல; மேலெழுந்த வாரியாய்ப் பசையற்று வரண்டு மிதக்கும் வீம்பின் காரணமாகவே தானும் இவ்விதம் இவர்களுக்குக் குறுக்கே நின்று தடுப்பதாகவும் அவளுக்குப் புரிந்தது.

அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம் மகத்தான சக்தி வாய்ந்ததுதான்!

'போறதானா போய்த் தொலை! இப்பவே ஓடு . . பகிரங்கமா ஓடப்போறாளாம் . . நீ ஓடினா போறும்; அது பகிரங்கமாயிடும் . . போ! யாரும் தடுக்கல்லே . . தடுக்கறவா யாரும் வர்ரத்துக்குள்ளே போயிடு" என்று அழுதுகொண்டே கூறினாள் குஞ்சம்மாள். வேணுவும் இந்துவும் ஒரு நிமிஷம் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது, முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே குஞ்சம்மாள் சொன்னாள்: "எனக்குப் புரியறது நீ போறது நியாயம்தான்டீ . . இங்கே ஒரு நாடகம் நடத்தாமே நீ இப்பவே போயிடு! அவருக்கு உடம்பு இருக்கிற இருப்பிலே அவர் தாங்க மாட்டார் . . . அவர் குணம் தெரிஞ்சும் அவரோட மோதிக்கவேண்டாம்னுதான் சொல்றேண்டி, இந்து . . நீ இப்பவே போயிடு . . ." என்று இரண்டு கைகளையும் நீட்டி மகளிடம் அவள் கெஞ்சியபோது . . .

"அம்மா . . அம்மா" என்று நெஞ்சு வெடிப்பதுபோல் அரற்றியவாறே தாயின் அருகே வந்து அவளது கைகளுக்கிடையே வீழ்ந்தாள் இந்து!

--- ஓ! அப்படி ஒர் ஆதரவைத் தந்து, அப்படி ஒரு பாசத்தை அனுபவித்து நாலு வருஷம் ஆகிறதே! அழுது ஓய்ந்த பிறகு இருவருமே ஒர் அவசரம் கொண்டனர்.

இந்து மாடிக்கு ஓடினாள்.

குஞ்சம்மாள் ஒன்றும் புரியாத பிரமிப்பில் சுவரில் தலை சாய்ந்துக் கண்களை மூடியவாறு மூலையில் கிடந்த ஸ்டூலின் மீது அமர்ந்தாள்.

சிறிது நேரத்துக்குப்பின் கையில் ஒரு ஸூட்கேசுடன் அவள் எதிரே வந்து நின்று, பாசம் பெருகித் தழுதழுத்த குரலில் "அம்மா!" என்று அழைத்து விடைபெற நிற்கும் மகளைக் கண் திறந்து பார்த்தாள் ..

"இந்து" என்று பதறி யெழுகையில் தனது பாதங்களில் கண்ணீர் சிந்தி நமஸ்கரித்த மகளை மார்புறத் தழுவி ஆசீர்வதித்தாள்.

"இந்து . . என் கண்ணே .. தலை விதிப்படிதான் நடக்கும்! கடவுள் உன் பக்கம் இருப்பார். நீ எங்கே இருந்தாலும் ஒரு வரி கடுதாசி எழுதிப் போடு. உனக்காக நான் கடவுளை வேண்டிண்டே இருப்பேன் . . வேற என்னடி செய்வேன்? என்னை மன்னிச்சுடு இந்து! உன்னைப் பெத்து இப்படியெல்லாம் அலைக்கழிக்கிறேனே . . அதுக்காக என்னை மன்னிச்சுடுடி அம்மா . ." என்று மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

"அம்மா, நான்தான் நீ என்னை வெறுக்கறேன்னு இவ்வளவு காலம் தப்பா நெனச்சிருந்தேன்" என்று இந்துவும் தாயின் மன்னிப்பைக் கோருவதுபோல் கண்ணீர் சிந்தினாள்.

அப்போது- அவன் - வேணு படியேறி உள்ளே வந்தான்.

"இந்து, அதெல்லாம் எதற்கு?" என்று அவள் கொண்டுவந்த பெட்டியைக் காட்டிக் கேட்டான். "வேண்டாம் . . உனக்கு வேணுங்கறதை வாங்கித் தர்ர அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் . . கட்டிய துணியோட வந்தாப் போதும். உன்மேல் இருக்கிற நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டுத்தான் நீ என்னோட வரணும்" என்று அவன் சொன்னதைக் கேட்டு திருப்தியுடன் அவள் காதில் இருந்த கம்மலைக் கழற்ற ஆரம்பித்தாள். பிறகு ஒவ்வொன்றாய் மூக்குத்தி, வளையல்கள், சங்கிலி, எல்லாவற்றையும் கழற்றி கை நிறைய வைத்துத் தாயின் முன் நீட்டினாள்.

மொட்டை மரம்போல் நிற்கும் மகளின் கோலத்தைப் பார்க்க முடியாமல் முகம் திருப்பிக்கொண்ட குஞ்சம்மாளால் அவற்றை கை நீட்டி வாங்க முடியவில்லை.

இந்து, மௌனமாய், அவற்றைச் சுவரோரமாய்ச் சாத்தி வைத்த பெட்டியின்மீது வைத்துவிட்டு, "அம்மா" என்று மீண்டும் அழைத்தாள்.

குஞ்சம்மாள் திரும்பி இந்துவின் வெறுங் கழுத்தைப் பார்த்தாள்: "இந்து, மறந்துடாதே! ஏதாவது ஒரு தெய்வ சன்னிதானத்திலே போயி . . இந்த மாதிரி ஒண்ணு கட்டிக்கோடி. பெண்களுக்கு இதுதான் பெரிய நகை!" என்று தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யக் கயிற்றை வௌியே எடுத்துக் காட்டினாள்.

"சரிம்மா" என்று மீண்டும் தாயின் காலில் அவள் நமஸ்கரித்தபோது - இதுவரை விலகி நின்றிருந்த வேணுவும் நெருங்கி வந்து குஞ்சம்மாளின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

"போயிட்டு வாங்கோ. நல்லபடியா வாழணும் . . பகவான் கைவிட மாட்டார்" என்று இருவரையும் மௌனமாய் ஆசீர்வத்தாள் குஞ்சம்மாள்.

வௌியில் மழை நின்றிருந்தது. பொழுதும் சாய்ந்திருந்தது. அவர்களிருவரும் புதிய வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டு விட்டனர். வீட்டின் படியிறங்கும்வரை இந்துவின் கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னின. தெருவை மிதித்ததும், காலிலிருந்த கட்டுகள் அறுந்ததுபோல் - முன்னே நடந்துகொண்டிருந்த அவனை நெருங்க - அவள் நடையில் ஒரு வேகம் பிறந்தது. வீதி முனையில் திரும்பும்போது அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் தெரிந்த தாயின் உருவத்தைக் கண்ணீர் மறைத்தது. குஞ்சம்மாளின் பார்வைக்கும் அவள் மறைந்தாள்.

வீட்டிற்குள் வந்த குஞ்சம்மாள் சுவரோரமாய் கிடந்த பெட்டியையும் அதன்மீது வைத்திருந்த நகைகளையும் பார்த்து பெருமூச்செறிந்தாள். அந்த நகைகளை எடுத்து பக்கத்தில் இருந்த ஸ்டாண்டின்மீது வைத்துவிட்டு, "இப்படி ஒரு காரியத்தை தன்னால் எப்படிச் செய்ய முடிந்தது?" என்று பிரமிப்பில் வெறித்த விழிகளுடன் இருளில் கிடந்த அந்த ஸ்டூலின்மீது உட்கார்ந்தாள்.

நல்லவேளையாக எல்லோருக்கும் முன்பாக பாட்டி வீடு திரும்பியதில் ஒரு வித ஆறுதல் கொண்ட குஞ்சம்மாள் சற்று முன் நடந்த நிகழ்ச்சியை ஒன்று விடாமல் விவரிக்கும்போது பாட்டி அடிக்கடி முந்தானையில் மூக்கைச் சிந்திக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

பாட்டியம்மாள் ரொம்பப் பழைய உலோகம்தான். எனினும் இந்த கலி காலத்தின் அசுரத்தனமான அடிகளில் அவளது தாய்மை உள்ளம் நெகிழ்ந்து குழைந்தது!அவளும் ஆயிரம் யோசனைகளுக்குப் பின் யதார்த்த வாழ்க்கையின் நிர்ப்பந்தத்துக்கு வளைந்து கொடுத்து மருமாளுடன் ஒத்துப்பேசினாள். இருப்பினும் பயமாகவும் வருத்தமாயும் இருந்ததால் அழுதாள். இப்படியெல்லாம் நேர்ந்துவிட்ட காலத்தைச் சபித்தாள். குடும்பத்தின் கௌரவத்தைக் குலைத்துவிட்ட அவளை விரட்டிவிட்டது சரிதான் என்று ஒருவகைக் கோபத்துடன்கூட இந்த முடிவை அவள் ஏற்றாள். இருப்பினும் முன் கோபமும் முரட்டுச் சுபாவமும் உடைய மகனை எண்ணும்போது பீதியடைந்தாள்.

நடந்தவற்றைப் பாட்டியிடம் விவரித்துக் கொண்டிருக்கையில் தெருவில் ஒரு ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. அதை ஒரு நிமிஷம் உற்றுக்கேட்ட குஞ்சம்மாள் பாட்டியிடம் சொன்னாள்: "விஜயா வரா, காலேஜுக்குப் போன பொண் வீட்டுக்கு வர நேரத்தைப் பாருங்கோ . . ." என்று சலித்துக் கொண்டாள்.

மணி எட்டடித்தது.

திரும்பிப் பார்த்த பாட்டி, யாரையும் காணாமல் "விஜயாவா, எங்கே?" என்றாள்.

"இப்பத்தானே அந்தச் சந்து முனையிலே வந்து ஸ்கூட்டர்லே இறங்கிவிட்டிருக்கான் அவன். வருவா, பாருங்கோளேன் " என்றாள் குஞ்சம்மாள்.

"எவன்?" என்று விழித்தாள் பாட்டி.

"எவனோ? . . அவளைன்னா கேக்கணும். எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சிண்டிருக்கா அவ. இவ என்னென்ன நாடகம் நடத்தப் போறாளோ? இவ அவளை மாதிரி ஓடிப்போகல்லேன்னா அதுக்குக் காரணம் இந்துதான். அவ பட்டதை எல்லாம் பார்த்திருக்காளோன்னோ? இந்த மாதிரி அப்பாவுக்கு இந்தக் குடுமப்த்திலே வந்து பொறந்திருக்கே பொண்கள்; எல்லாம் என் தலைவிதிடா ஈஸ்வரா" என்று குஞ்சம்மாள் புலம்பிக்கொண்டிருக்கையில் விஜயா வந்தாள்.

வந்தவள் ரொம்ப அவசரமாகத் தன் அறைக்குப் போவதைப் பாட்டியும் தாயும் வெறித்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தனர்.

சற்று நேரத்துக்கெல்லாம் டியூஷனுக்குப் போயிருந்த அம்பியும் வந்து சேர்ந்தான்.

அறைக்குள்ளிருந்து உடை மாற்றிய பின் வந்த விஜயா, பாட்டியும் தாயும் பேசிக்கொண்டதிலிருந்து நடந்தவற்றை ஊகித்துக்கொண்டு மனப் பதைப்பை அடக்கமாட்டாமல் "அப்பா வந்தா என்னம்மா சொல்லபோறே? இப்படி உன்னை மாட்டி வெச்சுட்டுப் போயிட்டாளே அவ?" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பதறினாள்.

"ரொம்பதான் அப்பாவுக்குப் பயந்தவள் இல்லியா, நீ?" என்று அவளை விழித்துப் பார்த்தாள் அம்மா.

"நான் என்ன பண்ணினேன்?" என்று முகம் சுளித்துக்கொண்டே பாட்டியின் முதுகுக்குப்பின் ஒண்டினாள் விஜயா.

"நீ ஒண்ணும் பண்ணல்லே; ஒண்ணும் பண்ணாம இருடியம்மா" என்றாள் பாட்டி.

ஒரு நிமிஷ மௌனத்துக்குப்பின் கண்கள் கலங்க விஜயா கேட்டாள்: "அம்மா, இந்து வரவே மாட்டாளா அம்மா? அவளை இனிமே பார்க்கவே முடியாதா? ஐயோ, இந்து! உன்னை நான் எவ்வளவோ கஷ்டப்படுத்தி விட்டேன். சுடு சுடுன்னு எரிஞ்சு விழுந்திருக்கேன் " என்று இந்நேரம் இந்தக் குடும்பத்தை நிரந்திரமாய்ப் பிரிந்து எங்கோ, எவனோடோ போய்க் கொண்டிருக்கும் தமக்கையை எண்ணிக் கண் கலங்கினாள் விஜயா.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அம்பிக்கு விஷயங்கள் புரிந்தன எனினும் அதன் கனத்தை உணரும் அளவுக்கு அவன் முதிர்ச்சியடையவில்லை. "இந்து நிஜமாகவே வீட்டில் இல்லையா?" என்று அறிய விரும்புகிறவன்போல் மாடிப்படி ஏறி ஓடி அவள் அறைக்குச் சென்று விளக்கைப் போட்டுவிட்டு இடுப்பில் கையூன்றி நின்று நாலு மூலையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.

அதுவரை ஒரு மூலையில் படுத்திருந்த கறுப்புப் பூனை 'இந்து இல்லே . . இந்து இல்லே ' என்று அவனிடம் முறையிடுவதுபோல் கத்திக்கொண்டே அவன் கால்களைச் சுற்றி வந்தது.

அன்றிரவு இந்துவின் செல்லப் பூனைக்கு அம்பிதான் பால் ஊற்றினான். மாடி வராந்தாவில் அதற்கென்று இருந்த கோப்பையில் அவன் பாலூற்றிக் கொண்டிருந்தபோது காம்பவுண்டு கேட்டருகே அப்பாவின் கார் வந்து நின்றது.

குஞ்சம்மாள ஓடிச்சென்று கேட்டைத் திறந்துவிட்டாள்.

கீழே நிச்சயம் பயங்கரமான ரகளை நடக்கும் என்று ஊகித்த அம்பி, 'மாடிப்படிப் பக்கம்கூடப் போவதில்லை' என்ற தீர்மானத்துடன் பால் கோப்பையைத் தூக்கிக்கொண்டு இந்துவின் அறைக்குள் போனான். பாதிப்பாலைப் பருகிய பூனை மீதிப் பாலுக்கு அலறியவாறே அவனைப் பின் தொடர்ந்தது.

அப்பா வந்துவிட்டார் என்றறிந்த விஜயா, நெஞ்சு 'திக்திக்'கென்று அடித்துக்கொள்ள, தன் அறைக் கதவை இரண்டு அங்குல இடைவௌி விட்டுத் திறந்து வைத்துக் கொண்டு அதன் வழியே ஒரு கண்ணால் ஹாலைப் பார்த்தவாறு ஒளிந்து நின்றாள்.

பாட்டி மட்டும் மருமகளுக்குப் பாதுகாப்பாகக் கூடவே நின்றிருந்தாள்.

காரை ஷெட்டில் விட்டபின் உள்ளே வந்த ராமபத்திரன், கோட்டைக்கூடக் களையாமல் தனது கனத்த சரீரத்தை ஹால் சோபாவில் சாய்த்து 'டை'யைத் தளர்த்தி விட்டுக்கொண்டு "ஃபேனைப் போடேண்டி" என்று கட்டைக் குரலில் பணித்தார். குளிர்ந்த காற்று வீசிய ஆனந்தத்தில் "ஆ . . ஊ ' என்று அனுபவித்து முழங்கினார்:

"இதோ பார் குஞ்சு! எனக்கு சப்பாத்தி வேண்டாம். கிளப்பிலே ஒரு டின்னர். மொதல்லே வேண்டாம்னுதான் நெனைச்சேன். 'ஒரு நாளுதானே, பரவாயில்லே'ன்னு ரொம்ப கம்பல் பண்ணினான் விசு. சாப்பிட்டுட்டேன்" என்று நாலு வீடுகளுக்குக் கேட்பதுபோல் ஒரே உற்சாகத்தில் இரைந்து பேசினார் ராமபத்திரன். அவருக்கு எப்போதுமே மேல் ஸ்தாயில்தான் சஞ்சாரம். குரலை அடக்கிப் பேசவே முடியாது. குரலை அடக்கினால் வார்த்தைகளே வராது. தொண்டையைத் திறந்து கத்திச் சப்தம் எழுப்பினால்தான் பேச வரும் அவருக்கு. மேலும் சாதாரண விஷயங்களுக்குக்கூட ஒன்று அதீத உற்சாகம், அல்லது அதீத கோபம் என்ற இருவேறு எல்லைகளில் அல்லாமல் இடையில் சமனப்பட முடியாத உணர்ச்சி வயப்பட்டவராதலின், அமைதியின் அவசியமே தெர்யாது பழகிவிட்டவர் அவர்.

மனுஷன் வீட்டுக்குள்ளிருந்தால், வீடு களேபரம்தான். காதின் இருமங்கிலும் கறுத்தடர்ந்த ரோமம்; பூனைக்கண்கள்; அவரது ஆகிருதியும், குரலும் யாரையுமே அச்சுறுத்தி விடும். அவரைக் கண்டு பயந்தாலும் எதிர் நின்று பேசத் தகுந்த தைரியம் கொண்ட ஒர் ஆத்மா உண்டு என்றால் அது அவரது தாயார்தான். அருகே நின்றால் அவரது முழங்கை உயரம்கூட இல்லாத பாட்டிதான். "ஏண்டா இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்றே?" என்று கேட்கையில் "உனக்குத் தெரியாதம்மா" என்று பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து கத்துவார் அவர். கோபமும் சரி, சந்தோஷமும் சரி, வந்ததுபோல் அடங்கியும் போகும் அவருக்கு.

"சரி, மருந்தைக் கொண்டுவா" என்று உத்தரவிட்டார் கோட்டைக் கழற்றியபடியே. விருந்து சாப்பிட்டதிலிருந்தே அவருக்கு 'டாக்டரின் உத்தரவை மீறிச் சாதம் சாப்பிட்டு விட்டோமே' என்ற பயம். குஞ்சம்மாள் தம்ளரில் பாலையும் உள்ளங் கைகளில் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு அவரிடம் நீட்டினாள். பிறகு அவர் கால்களில் இருந்த பூட்சுகளைக் களைவதற்காகக் காலடியில் உட்கார்ந்தாள். ராமபத்திரன் அண்ணாந்து மாத்திரைகளை வாயிலிட்டு ஒரு மிடறு பாலைக் குடித்தபோது அவரது பூனைக்கண்கள் சுவரோரமாய் இருந்த ஸூட்கேசை வெறித்தன. வாயிலிருந்ததை விழுங்கியதும் 'இதென்ன பெட்டி? ஏன் இங்கே கிடக்கு?" என்று அதட்டினார்.

குஞ்சம்மாளுக்குக் கண்கள் ஒரு விநாடி இருண்டன. சமாளித்துக் கொண்டு பரிதாபமாய் அவர் முகத்தை நோக்கியவாறு ஒர் அடி பின்வாங்கி, ஈனசுரத்தில் கூறினாள்: "இந்து போயிட்டா. அவன் வந்தான். அவனோட . ." என்று அவள் சொல்லி முடிக்குமுன் அவர் கையில் இருந்த பால் தம்ளர் குஞ்சம்மாளின் வலது புறக்காதோரமாய் 'விர்'ரென்று பாய்ந்து சுவரில் மோதி எகிரி உருண்டது.

விசுவரூபம் கொண்டதுபோல் எழுந்து நின்றார் ராமபத்திரன். அவரது பூனைக்கண்கள் புலிக்கண்களாயின.

"நீங்கள்லாம் அப்போ எங்கே ஒழிஞ்சுப் போயிருந்தேள்?" என்று அவர் அலறிய குரல் அந்தத் தெருவிலுள்ள மனிதர்களையெல்லலாம் கேட்பதுபோல் ஓங்காரம் பெற்றது. அவரது கேள்விக்கு அருகிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை; அவரும் எதிர்ப்பார்க்கவில்லை.

அவர் தனது பூட்ஸ் காலைத் தரையில் ஓங்கி மிதித்தார்: "அவ போயிட்டாளாம்! இவ சொல்றா .. உங்களை மாதிரி இளிச்ச வாயா இருந்தா அவளை என்னடி, உன்னையும்கூட எவனாவது வந்து இழுத்துண்டு போயிருப்பான் . . ம்ஹூம் . . பாரு, அவ எங்கே போயிடுவா? விடியறத்துக் குள்ளே அவளைக் கொண்டுவரேன் பாருடி" என்று பெருத்த குரலில் சப்தம் செய்தார் ராமபத்திரன்.

"இப்ப நீ எங்கேடா போறே?" என்று பின்னால் வந்தாள் பாட்டி.

"நான் எங்கேயும் போகல்லே; போலீசுக்குப் போன் பண்ணப்போறேன்" என்று போன் இருந்த மேசையை நெருங்கி ரீஸீவரைக் கையிலெடுத்தார். அவர் டயலைச் சுழற்று முன் வெகு நேர சிரமத்துக்குப் பின் குஞ்சம்மாள் பேசினாள்: "போலீஸ் என்ன பண்ணும்? முன்னே மாதிரி அவள் என்ன மைனர் பொண்ணா? மைனர்ப் பொண்ணைக் கடத்திண்டு போயிட்டான்னு சொல்ல?"

ராமபத்திரன் திரும்பிக் குஞ்சம்மாளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சொன்னார்: "அவ மேலே ஆயிர ரூபாய் நகை இருக்குடி;அதுக்காக கடத்திண்டு போயிட்டான்னுதானே அப்பவும் ரிப்போர்ட் பண்ணினேன் . . " என்று கூறிவிட்டு அவர் டயலை சுழற்றி முடிக்கவில்லை . .

"இந்தாங்கோ, உங்க ஆயிர ரூபாய் நகை! அத்தனையும், ஒரு திருகாணிகூட இல்லாம உரிச்சு வெச்சுட்டுத்தான் போயிருக்கா . . ." என்று கை நிறையக் கொணர்ந்த நகைகளை மேசைமீது அவர் முன் வைத்து விட்டு தைரியமாக நின்றாள் குஞ்சம்மாள்.

அந்த நகைகளை புறங்கையால் வீசித் தள்ளினார் ராமபத்திரன்.

"பயித்தியக்காரி! . . . எனக்குச் சட்டம் சொல்லித்தரயா? திருடன் திருடிண்டு போனானா இல்லையாங்கரது, கோர்ட்லே! அவனைத் திருடன்னு நான் சொன்னா இவா பிடிப்பா . . ." என்று அவர் மூர்க்கமாகச் சொன்னதும் அதே மூர்க்கத்துடன் குஞ்சம்மாள் கூறினாள்:

"நீங்க அவனைத் திருடன்னு சொன்னா, நானே 'இல்லே'ன்னு போய் சாட்சி சொல்வேன்."

ராமபத்திரனுக்குக் கோபத்தால் தலை பற்றி எரிந்தது.

வலது கையில் டெலிபோன் ரிஸீவரோடு, இடது கையால் - ஒரு பிடியில் - அவளை நொறுக்கத் தயாரானதுபோல் கையை ஓங்கி அவர் எழுந்தபோது, பாட்டி அம்மாள் குறுக்கே ஓடி வந்து நின்றாள்.

"ஏண்டா இப்படிப் பேய் மாதிரி நிக்கறே? கொஞ்சம் பொறுமையா யோசிடா . . " என்று கெஞ்சினாள் பாட்டி.

அவர் பார்வை தன்னை எதிர்த்துத் தாயின் முதுகுக்குப் பின்னால் நிற்கிற குஞ்சம்மாளின் மேல் நிலைகுத்தியிருந்த்து.

"நகரு அம்மா. எனக்கு எதிரா சாட்சி சொல்லபோறாளாமே இவ . . ." என்று உருமியவாறு குஞ்சம்மாளை எட்டி பிடித்தார்.

ராமபத்ரனின் கையைப் பிடித்து இழுத்தவாறு பாட்டி கத்தினாள்: "ஆமாண்டா, நானும்கூடச் சொல்லப் போறேன். மொதல்லே என்னைக் கொல்லு. நான் தான் இந்துவை அனுப்பினேன் . . . என்னைக் கொல்லுடா . . ." என்று சன்னதம் கொண்டவள் போல் மார்பில் தட்டிக்கொண்டு எதிரில் வந்த தாயின் குரலைக் கேட்டதும் ராமபத்திரன் குஞ்சம்மாள் மீதிருந்த பிடியைத் தளர்த்தி விட்டுத் திகைத்து நின்றார்.

அவர் கண்கள் வெறித்துச் சுழன்றன . .

சகிக்கவே முடியாத ஒரு துரோகம், தன் உயிரையே கறுவருக்கும் ஓர் அவமானம் தனக்கு நிகழத் தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களே - பெற்ற தாயும், கட்டிய மனைவியும், பிறந்த பிள்ளைகளும் - சூழ்ச்சி செய்து தனக்கு நிரந்தரப் பகைவர்களாய் மாறி விட்டனர் என்ற உணர்ச்சியில் அவரது பெரிய குரல் தொண்டைக் குழியிலேயே சிக்கிக்கொண்டு அமுங்கித் தவித்தது . .

விபரீதமான தொனியில் கிறீச்சிட்டு அலறியவாறே கையிலிருந்த டெலிபோனைத் தூக்கி தரையில் அறைந்தார். அடுத்த விநாடி அந்த ஆஜானுபாகுவான மனிதர் வெட்டி முறித்த மரம் போல் நிலைகுலைவதைக் கண்டு அலறியவாறே குஞ்சம்மாள் ஓடிப்போய்த் தாங்கினாள்.

"ராமு, ராமு" என்று பாட்டியம்மாள் பாசம் மேலிடக் கதறினாள்.

'ஒண்ணுமில்லே . . மயக்கம்தான்" என்று பாட்டிக்குத் தைரியமளித்த குஞ்சம்மாள். 'டாக்டருக்குப் போன்கூடப் பண்ண முடியாதே' என்று உடைந்து கிடக்கும் டெலிபோனைப் பார்த்துக் கை பிசைந்துகொண்டே "அம்பி . . ஓடிப்போயி டாக்டரைக் கூட்டிண்டு வாடா . . " என்று மாடியை நோக்கி அலறினாள்.

அம்பி மாடியிலிருந்து ஓடிவந்தான். ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் சோபாவில் நீட்டிக் கிடங்கும் அப்பாவைப் பார்த்தான். அடுத்த விநாடி தெருவில் இறங்கி டாக்டர் வீட்டை நோக்கி இருளில் ஓடினான். "நானும் வரேண்டா, அம்பி?" என்று அவன் பின்னால் அவனுக்குத் துணையாய் விஜயாவும் ஓடினாள.

பாட்டி, தான் தினசரி வழிபடும் தெய்வங்களையெல்லாம் வேண்டியவாறு கண்ணீர் வடித்தாள்.

குஞ்சம்மாள் தனது ஒரே தெய்வத்தின் உருவகமான மாங்கல்ய சரட்டை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு டாக்டரின் வருகைக்காக காத்திருந்தாள்.

மாடிப் படிக்கட்டில், மேல் மாடியில் வந்து நின்ற அந்த கறுப்புப் பூனை தனது வெள்ளிய விழிகளால் ஹாலில் நடப்பதைக் குனிந்துப் பார்த்தது.

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா? அல்லது, இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?

டாக்டர் வந்தபின் தெரியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=புதிய_வார்ப்புகள்&oldid=20359" இலிருந்து மீள்விக்கப்பட்டது