காட்சி-7.
இடம்:- குலோத்துங்கன் அரண்மனை. காலம்-பகல்
(அரண்மனை தேவலோகமாகத் திகழுகிறது. அரச குடும்பத்தினர்களும் புலவர்களும் பொதுமக்களும் நிறைந்திருக்கின்றனர். நகரா, துந்துபி முதலிய மங்கல வாத்தியங்கள் முழங்க யாவரும் வாழ்த்துரைக்க குலோத்துங்கச் சோழனுக்கும் குணவதிக்கும் திருமணம் நடைபெறுகிறது.)
(திரை)
காட்சி - 8.
இடம் :- பாண்டியன் அந்தப்புரம், காலம்:- பகல்.
(ஏவலாளர்கள் பெட்டிகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் முதலியவற்றைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அமைச்சர் முதலியோர் ஏவலாளர்களைத் துரிதப்படுத்துகின்றனர். அரசரும் புலவரும் அங்குவர மற்றவர்கள் வணங்குகிறார்கள்.)
பாண்டியன்:- என்ன அமைச்சரே! பிரயாணத்திற்கு வேண்டிய காரியங்கள் எல்லாம் சித்தமாகி விட்டதல்லவா?
மதிவாணர்:- ஆம்; அநேகமாகச் சித்தமாகிவிட்டது.
பாண்டியன்:- சரி; சீக்கிரம் ஆகட்டும். யாரங்கே? ஒரு ஏவலாள் வந்து வணங்குகிறான்.)