பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பாண்டியன் நெடுஞ்செழியன்

ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக்கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றி விழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வீசினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர். போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத் தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

போர் நிகழ்ந்தது சில நாட்களே யானாலும் அதனால் உண்டான மகிழ்ச்சி யாரவாரம் பல மாதங்கள் இருந்தது. புலவர்கள் கவி பாடி அந்த வெற்றியை மக்கள் மறவாதபடி செய்தார்கள்.

நெடுஞ்செழியனைப் புலவர்கள் பாராட்டும் போதெல்லாம் அவன் தன் படைத் தலைவர்களையும் வீரர்களையும் புகழ்ந்தான். தான் ஒன்றும் செய்யாதவனைப் போல இருந்தான். இந்த உயர்ந்த பண்பை உணர்ந்து அதையும் பாராட்டினார்கள் புலவர்கள்.

“போர் செய்யும் பருவம் இன்னும் வரவில்லை. நேற்று வரைக்கும் கிண்கிணி அணிந்திருந்த கால் அது. இப்போது அதில் கழலை அணிந்துகொண்டான். இப்போதுதான் குடுமி வைத்தார்கள். அதற்குள் வேப்பந்