பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

205


காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகுவத னினும் கால்பெரிது கெடுக்கும்.
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானைபுக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

என்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேச்சுரிமையின் நயமறிந்து சான்றோர் அவ்வப்போது வேந்தர்க்குத் தகுவனவற்றை அறிவுறுத்தி வந்ததனால் தமிழகம் பல நூறாண்டு வரையில் தலைமை குன்றாதிருந்தது. கோவலன் கொலையுண்டதறிந்து, அறிவுபேதுற்று அலமரலுற்ற கண்ணகியார் மதுரை மூதூரில் பெருந்தெருவே செல்பவர், “அரசன்பால் தவறிருப்பவும் அதனை எடுத்துரைக்கும் பேச்சுரிமை பெற்ற சான்றோர் எடுத்துரையாது போயினரே, இம் மூதூரில் சான்றோர் இல்லையோ? என்பாராய்,

“சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல்,
ஈன்றகுழவி எடுத்து வளர்க்கு றூ.உம்,
சான்றோரு முண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்”

என்று கதறினார்.

இனி, இரண்டாவதாக வழிபாட்டுரிமையைக் காண்போம். கடவுள் வழிபாட்டில் தமிழகம் மக்கட்கு நெடுங் காலத்துக்கு முன்பே பேருரிமை வழங்கியிருந்தது. பல்வகையான தெய்வங்களை வழபடும் இயல்பு தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகிறது. குறிஞ்சி முதலிய நிலத்தவர் முருகன் முதலிய தெய்வங்களை வழிபட்டனர். வைதிகம், பெளத்தம், சைனம் முதலிய சமயங்கள் வந்து படர்ந்திருந்த காலத்தும், தமிழ் நாட்டில் வழிபாட்டுரிமைக்குத் தடை யுண்டான தில்லை. சங்க நூல்களில் பரிபாடல் என்பது