பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

செம்மொழிப் புதையல்


கலந்து பாதியளவுக்குமேல் இருப்பதால் "பிள்ளை பாதி பெரியவர் பாதி" என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு, ஆயுள் முழுதும் பயன்பட்டுவரும் சிறப்புபற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டு, "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும், கற்றவர், கல்லாதவர் என்ற இருதிறத்தாருக்கும் கம்பராமாயணம் இலக்கிய இன்பம் தருவதுபற்றி “கல்வியிற் பெரியவர் கம்பர்,” என்ற பழமொழியும், கம்பராமாயணம் தவிர வேறு நூல்களைக் கல்லாதவரும் கவிபாடும் பாவலராக விளங்குவதுபற்றிக் "கம்பர் வீட்டுக் கற்றுத்தறியும் கவிபாடும்," என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன. கற்றுத்தறி = கற்றுவரும் மாணவன். இது பின்பு கட்டுத்தரியென மருவிவிட்டது; ஏடுகளிலும் கட்டுத் தரியென்றே காணப்படுவதாயிற்று. அதனால், "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன்பாட்டைக் கெடுத்தான்," என்ற பழமொழியும் மெய்யுரையாய் நிலவுவதாயிற்று.

இவ்வாறு இலக்கியத்துறை பற்றியும், இசை நாடகம் பற்றியும், "விருத்த வைத்தியம் பாலிய சோதிடம்," என மருத்துவம், சோதிடம் முதலிய துறை பற்றியும் பழமொழிகள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நவிலும் நயம்பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக்கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளருள் ஒருவரான Charles. E. Gover. M.R.A.S. என்பவர் "உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் சிறப்பாகத் தமிழில்மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவைகளை வெளியிட்டுப் பொதுமக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்துகொள்ளவும் செய்வது பழுத்தபுலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக் கும் தகுதியாம்" என்ற கருத்தமைய, -

“There is a great mass of (thoughts) ready to hand in Tamil and Telegu folk-literature, especially in the former. To raise these to public estimation, to exhibit the true products of the Dravidian mind would be a task worthy of the ripest scholar and the most enlightened government (Introduction to folk songs of southern India printed in 1871) என்று கூறியிருப்பது அறிஞர்கருதத்தக்கது.