பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

153


கல்வியின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார்கள். தமிழ்மன்னன் ஒருவன் தன் கோல் நிழலில் மக்களை நோக்கி,

“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாதுஅவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.”


என்று வற்புறுத்துகின்றான். ஒரு பெரியவர், வாழ்நாள் மிகுதியாகிய வழியும், தமக்கு நரையோ திரையோ உண்டாகாமல் இருந்தார். அது கண்ட அறிஞர் சிலர் அவரை நோக்கி, இதற்குக் காரணம் என்னை என வினவினர். அவர்கட்கு அவர், "என் மனைவி, மக்கள் முதல் அனைவரும் என் கருத்திற்கேற்ப ஒழுகும் இயல்புடையவர். வேந்தனும் அல்லவை செய்வதிலன். சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்றார். எனவே, சான்றோர் இனத்தனாய், கல்வியறிவு சிறந்து நிற்பது தனக்கு இன்றியமையாதது என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் இனிதறிந்து ஒழுகிய திறம் நாம் காண்கின்றோம்.

சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்வில், உடல் வளர்ச்சி கருதா உயிர் வளர்ச்சியொன்றே கருதி, கல்வி பயின்று அறிவுபெற ஆர்வம் கொண்டான் என்பவர் அவனது இயல்பை அறியாதவராவர். உடல் உரம்பெறுவதற்கேற்ற ஆள்வினைக்கண் அவனது உள்ளம் அழுந்திப் பயிற்சி பெற்றிருந்தது. வாளேந்திப் போருடற்றிச் செய்வன செய்தல் தன் கடன் என்பதை அவன், தாயால் இளமையிலேயே வற்புறுத்தப் பெறுகின்றான். நீரில் நீந்துதல், யானை குதிரை முதலிய இவர்ந்து செல்லுதல், வாட்பயிற்சி, விற்பயிற்சி முதலியன பயின்றிருந்தான். இதனை நன்குணர்ந்த கம்பனும், இராமன் வாயில் வைத்து, "மதிதரு தனயரும் வலியர்கொல்" என்று வினவுகின்றான். உடல் வளர்ச்சிக்குப் படைப் பயிற்சியும், அறிவு வளர்ச்சிக்குக் கல்வியும் வேண்டுவனவாம் என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் நன்கு அறிந்திருந்தான். உடல் வன்மையால் மனத்திட்பமும் வினைத்திட்பமும் பிறக்கும் என்பது அவனது உள்ளக்கிடை.