பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15


தலைமை வகித்தார். மன்னன் அக்கவிஞரைக் கைது செய்து தூக்கிலிட்டுக் கொன்றான். இந்தப் பயங்கர நிகழ்ச்சியைக் கண்ட ஹிராடெடஸ் - சாமோஸ் என்ற தீவுக்கு ஓடிவிட்டார்.

அந்த தீவிலே அவர் தங்கியிருந்த எட்டாண்டுகளில் அத்தீவின் அயோனிய மொழியைக் கற்றுக் கொண்டார். அந்த மொழியிலேதான் ஹிராடெடஸ் தனது வரலாற்று நூலை எழுதினார். கொடுங்கோலன் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்து, மீண்டும் அவர் தனது பிறந்த ஊரான ஹாலிகார்னனஸ்க்கே திரும்பினார்.

சொந்த ஊர் திரும்பிய அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டவனுக்குப் பதிலாகப் பதவியேற்றவனும் கொடுங்கோலனாக ஆட்சி செய்ததைக் கண்டார். எனவே தனது சொந்த அனுபவங்களுக்காக பல ஊர்களையும், நகரங்களையும், நாடுகளையும் சுற்றி, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள மக்கள் வாழ்க்கை முறைகளைக் கண்டறியப் புறப்பட்டார்.

அந்த நேரத்தில் கிரேக்க நாட்டின் ஒரு பகுதியான ஏதென்ஸ் சிறப்பான புகழைப் பெற்று, உலக நாடுகளில் பெருமை அடைந்த நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதனால், ஹிராடெடஸ் ஏதென்ஸ் நகரையே தனது சொந்த ஊராகக் கருதி அங்கேயே தங்கி வாழ்ந்தார்.

கிரேக்கத்தின் மாபெரும் நாடகப் பேராசிரியர்களுள் ஒருவரான, தத்துவ மேதை சோபாக்கிளிஸ் என்பவர் அவருக்கு நண்பரானார். இவர் கி.மு. 495க்கும் 406 ஆம் ஆண்டிற்குமிடையே வாழ்ந்தவர். சோபாக்கிளிஸ் ஹிராடெடஸ் மீது கவிதை பாடுமளவுக்கு மிக நெருங்கியவரானார். ஹிராடெடஸ், சோபக்ளிஸ் போன்றவர்களது சிந்தனைகளால் ஏதென்ஸ் மேலும் பெரும் புகழைப் பெற்றது.