பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பாஸ்கரத் தொண்டைமான்


வைஷ்ணவரும், தங்கள் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதையைக் கொடுத்து கெளரவித்து விடுகிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து வைத்ததோடு இன்னும் சில விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுக் கலைஞர்கள். முருகன் தனியே கோவணாண்டியாக இருந்தாலும் சரி, ஞான பண்டிதனாக இருந்தாலும் சரி, இல்லை இரு மனைவியரை இரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் குமரனாக இருந்தாலும் சரி, அவன் திருக்கரத்திலே வேலை வைக்க மறப்பதில்லை. 'ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்து நிற்கும்' சமர்த்தைப் பாடாத கவிஞன் இல்லை. இதைப் போலவே திருமாலின் அவதாரமான ராமனையும் அவன் ஏந்தியுள்ள கோதண்டத்தையும் பிரிப்பதே இல்லை. ‘விற்பெருந்தடந்தோள் வீரன்’ அவன். இப்படி இரண்டு மூர்த்திகள் தமிழ்நாட்டில் வேலேந்திய பெருமான் ஒருவன். வில்லேந்திய வீரன் ஒருவன். கலைஞன் ஒருவன் எண்ணியிருக்கிறான். இப்படி இருவரும் தனித்தனியே நிற்பானேன். இவர்களை இவர்களது பக்தர்களை எல்லாம் இணைக்க முடியாதா. வில்லையும் வேலையும் சேர்த்து இணைப்பதன் மூலமாக என்று இந்த நிலையிலே வேல் ஏந்திய குமரனது கையிலே வில்லையும் கொடுத்து, வில்லேந்திய வேலனை உருவாக்கியிருக்கிறான். தனுஷ் சுப்பிரமணியன் என்று பாராட்டி இருக்கிறான். இப்படி வேலும் வில்லும் ஏந்திய மூர்த்திகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பல உண்டு.

அவற்றில் பிரசித்தி பெற்றவை திருவையாற்றிலே, ஐயாறப்பன் கோவிலிலே இருக்கும் தனுஷ் சுப்பிரமணியன் ஒருவன்; பழைய காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த சாயாவனம் என்னும் சாய்க்காட்டிலே, சாயவனேஸ்வரரும், குயிலினும் நன்மொழி அம்மையும் இருக்கும் கோயிலிலே இருப்பவன் மற்றொருவன்; ஐயாறப்பன் கோயிலிலே கல்லுருவிலே இருப்பவனே சாய்க்காட்டிலே செப்புருவிலே இருக்கிறான். சாய்க்காட்டில் இருக்கும் மூர்த்தி நிரம்ப அழகு பொருந்தியவன். மூன்றடி உயரம், அதற்கேற்ற ஆகிருதி. இத்துடன் வேலையும் வில்லையும் ஏந்தி நிற்கும் தோற்றப் பொலிவுடன் விளங்குகிறான். வில்லையும் வேலையும் சேர்த்துத் தாங்க, இடையினை வளைத்து தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை, கலை உரைக்கும் கற்பனையை எல்லாம் கடந்திருக்கின்றது.