பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

15



கோடாத வேதனுக்கு யான்செய்த
குற்றம் என்? குன்றெறிந்த
தாடாளனே! தென் தணிகைக்
குமரா; நின் தண்டையந் தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே

என்று வெளியிட்டிருக்கிறார். நாம் அந்த ஏக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியதில்லை அல்லவா. நாம்தான் இந்த ஆறுபடை வீடுடையானை அவன் இருக்கும் ஆறு தலங்களிலுமே சென்று கண்டு வணங்கித் திரும்பியிருக்கிறோமே.

ஆறுபடை வீடு என்றெல்லாம் பேசுகின்ற போது தமிழ் நாட்டில் இறைவழிபாடு எப்படி உருவாகியிருக்கிறது என்பதுமே தெரிகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் குறிஞ்சியிலும், முல்லை, மருதம், நெய்தல், நிலங்களிலும் குடிபுகுந்து வாழ்வு நடத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களது வாழ்வு துவங்கிய இடம் மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சியுமாகவே இருந்திக்கிறது. பின்னரே அவர்கள் காடாகிய முல்லையில் இறங்கி, வயலாகிய மருதத்தில் தவழ்ந்து நெய்தலாகிய கடற்கரை வரையிலும் சென்றிருக்க வேண்டும். ஆதலால் தான் இறைவழிபாடு முதல் முதல் மலைநாடாகிய குறிஞ்சியில் தோன்றியதில் வியப்பில்லை. நீண்டுயர்ந்த மலையிலே பிறந்த இறை வழிபாடு அகன்று பரந்த கடற்கரைக்கே நடந்திருக்கிறது. அதற்கடுத்தபடியாகத்தான் காடாகிய முல்லையிலும், வயலாகிய மருதத்திலும், பரவியிருக்கிறது. இந்நாடுகளிடையே எழுந்த பலபல குன்றுகளிலும் சிலசில சோலைகளிலும் புகுந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்த நக்கீரர், இறை வழிபாட்டை மலையாம் திருப்பரங்குன்றத்திலே துவங்கி, கடற்கரையாம் திருச்செந்தூரிலே நடத்தி, காடாகிய ஆவினன் குடியிலும் வயல் வெளியாகிய ஏரகத்திலும், சோலையாகிய பழமுதிர் சோலையிலும் பரவவிட்டிருக்கிறார். இப்படி ஆதியில் எழுந்த இறை வழிபாடே, தமிழ் நாட்டில் முருகன் வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம் நாமும்.