பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

திறத்தினால், மாணவர்கள் இலக்கணத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொள்வதுண்டு! தொல்காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது, குறிப்பிட்ட உரையாசிரியரின் உரையை மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாமல், வேறு உரையாசிரியர்களின் கருத்தையும் ஒப்பிட்டுச் சொல்வார். சில நேரங்களில் தனித்தனித் தலைப்புக்களில் ஆய்வுரைகள் எழுதிவரச் செய்து அம்மாணவர்களை வகுப்பில் படிக்கச் செய்து, திருத்தமும் சொல்வார். இம் முறையால், மாணவர்கள், தாம் பயின்ற நூல்களில் ஐயம் திரிபின்றித் தெளிவு பெறுவர்!

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்பத் தம்பால் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் போலவே கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே உரைவேந்தரின் நோக்கம்.

மாணவர்கள்பால் உரைவேந்தர் காட்டிய பேரன்பு எல்லை கடந்தது. அவர்களை, 'ஐயா, ஐயா' என்று அன்போடு அகமிக மகிழ அழைத்திடுவார். தம்மிடம் பயிலும் மாணவர்கள், சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர்! தாம் அரிதில் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் செல்வத்தை மாணவர்கட்கு வாரி வழங்குவதில் 'கல்விக் கொடையாளரா'கத் திகழ்ந்தார். பெரிய கூட்டங்களில்கூடத் தம் மாணவர்கள் அவையஞ்சாது பேசும் திறன் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று எண்ணி, அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார். தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களையும் அறிமுகப் படுத்தி வைப்பார்!

உரைவேந்தர், தியாகராசர் கல்லூரியில் பணிபுரிந்தபோது அவர்தம் தமிழ்ப்புலமையையும், சைவ சித்தாந்தத் தேர்ச்சியையும் நேரில் அறிந்த கருமுத்துச் செட்டியார், தம் அருமைத் துணைவியார் திருமதி. 'கலையன்னை' இராதா தியாகராசனாருக்கு ஆசானாகவும் இருக்கச் செய்தார். சமயம் நேரும்போதெல்லாம் செட்டியாரின் மாளிகைக்குச் சென்று, பரந்துபட்ட தமிழ் இலக்கியச் செல்வத்தையும், ஆழ்கடலென விளங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அம்மையார் உளங் கொள்ளுமாறு இனிது எடுத்துரைத்தார்! இதனால், கற்றுவல்ல புலவர்களிடையேயும், செம்மாந்த தமிழ் நடையில் பேசும் பேராற்றலைப் பெற்றார் கலையன்னையார் ச.சாம்பசிவனார், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக இருந்தபோதுதான் கலையன்னையாரின் முதல் தமிழ்ச் சொற்பொழிவு அரங்கேறியது. 'சிலம்பொலி' என்ற தலைப்பில், எவ்விதக் குறிப்புமின்றிக் கடல்மடைதிறந்த வெள்ளம் போல் ஒருமணி