104
இந்திய சமுதாய... /நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்
மற்றும் அடியார், பெரியவர் புடைசூழ திருவரங்கத்துப் பெருமானின் சன்னிதிக்கு வந்து, கருவறைக்குள் ஐக்கியமானாள் என்று வரலாறு கூறுகிறது.
இது கதைபோல் நன்றாக இருக்கிறது.
ஆனால் வரலாறு, இப்படியே இருந்திருக்குமோ என்பது ஐயத்திற்குரியது.
கன்னடத்து ஞானச்செல்வி அக்கமாதேவியின் கவி வாசகங்களில் அவளுடைய வாழ்க்கை அநுபவங்கள் மிகத் தெளிவாய்ப் பிரதிபலிக்கின்றன. என்றாலும், அந்தப் பெருமாட்டியின் வரலாற்றில், உண்மை - காலப்போக்கில் இடம் பெற்றுவிட்ட அதீதங்கள் என்பவை ஆராயப் பெற்று வரலாறு, அறிவுக்கும் காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பெற்றிருக்கிறது எனலாம். சமயம்-பக்தி என்று வரும்போது, அற்புதங்களும், மாற்றங்களும் வரலாற்று உண்மைகளை மறைத்துவிடுகின்றன என்பதை கன்னட மொழி ஆய்வாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கமாதேவி பற்றிய வரலாற்றில் பல ஆய்வாளர் பல கருத்துக்களைத் தெளிவாக்குகின்றனர். கௌசிக மன்னன் அவளை மணம் புரிந்து கொண்டானா, இல்லையா என்பதிலிருந்து, அவருடைய பெற்றோர் பெயர் வரையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
இலக்கிய வரலாற்று அறிஞருக்கு, இவளை நாயகியாக வைத்து, நவீனம் படைப்பதும்கூடச் சாத்தியமாகி இருக்கிறது.
ஆனால் தமிழில், மிக அண்மைக்காலச் சான்றோர் கவிஞர் வரலாற்றிலும் கூட, அற்புதங்களே முதன்மை பெற்று, உண்மைகளைக் கண்டறியாத வண்ணம் ‘தெய்வீக’ முத்திரைகளில் முடக்கப்பட்டிருக்கின்றன.
ஆண்டாளின் வரலாற்றைச் சுற்றியுள்ள தெய்வீக அற்புதப் போர்வையைச் சற்றே நீக்கி வரலாற்றுக்கண் கொண்டு பார்க்கலாம்.