5. நீதிபதிகளில் பலரகம்!
வேதநாயகர் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்; முன்சிஃபாகவும், பல்வேறு நீதிபதிகளின் கீழ் பணியாற்றியவர். அதனால், சென்றதலை முறையிலே நீதிபதிகள் எப்படி இருந்தார்கள்? எவ்வாறு தீர்ப்பளித்தார்கள்? என்ற விவரங்களை வேதநாயகரே விளக்கியிருக்கிறார்.
"நியாயாதிபதிகளில் சிலர் நீதிமன்றத்துக்குப் போகின்ற நேரம் ஒரே தன்மையில் இருக்காது. ஒரு நாள், மாலையிலும், மறுநாள் நடுப்பகலிலும், வேறோர் நாள் மாலையிலும் செல்வது அவர்கள் வழக்கம்.
கட்சிக்காரர்கள் அதனால் எந்த நேரத்தில் தாங்கள் நீதிமன்றத்திற்குப் போவது என்று புரியாமல், தெரியாமல் அவதிப்பட்டார்கள். நேற்று காலையிலே நீதிபதி வந்ததால், இன்றும் காலையிலே அவர் வருவார் என்று வழக்காளி காத்திருந்தால், அவரோ கட்சிக்காரர் இல்லாத நேரத்திலே தோன்றி, கட்சிக்காரர் ஆஜராகவில்லை என்று வழக்கைத் தள்ளி வந்தார். ஆஜராகுகிறவர்கள் வழக்கையோ விசாரிப்பதில்லை.
நீதிபதிகளில் சிலர், வழக்குகளை விசாரிக்கும் கஷ்டங்கள் காரணமாக, அதற்குப் பல தோடங்களைக் கற்பித்து, சருவசங்காரம் செய்து வந்தார்கள் வேறு சிலர், வழக்கு விசாரணைக்கு ஆதாரமான சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமல், வழக்குரைஞர்கள் வாய்ப் பிறப்பை நம்பித் தீர்ப்புச் செய்வதும்,