உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

59


 ஆசிரியர்களுக்கும் அவர் அடங்க மாட்டார். ஏதாவது ஒரு வம்பை நாள் தோறும் விலைக்கு வாங்கி வரும் குணமுடையவராக இருந்தார் ஆஸ்லர்!

காமன் பள்ளி தலைமை ஆசிரியர் 1860-ஆம் ஆண்டில் பள்ளி வேலை செய்யும் நாளொன்றின்போது, தனது வகுப்பறைக் குள்ளே நுழைந்தார். வகுப்பில் மாணவர்கள் ஒருவரையும் காணவில்லை, பதிலாக, ஏறக்குறைய நூறு வாத்துக்களைக் கொண்ட ஒரு வாத்து மந்தைதான் கண்டபடி கத்திக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக நடை பயின்று கொண்டிருப்பதை அந்த வகுப்பு ஆசிரியர் கண்டார்!

கோவைப் பழம் போல ஆசிரியர் கண்கள் சிவந்தன! கொந்தளிக்கும் கோபத்தால் உடலும் உதடுகளும் பட படத்தன! வகுப்பறையில் வாத்துக் கூட்டமா? எனது மாணவர்கள் வாத்துக்களா? நான் வாத்து மேய்ப்பவனா? என்னை மட்டுமா இந்த நிகழ்ச்சி அவமானப் படுத்தியது? எனது மாணவர்களை, இங்கே பணியாற்றும் ஆசிரியர்களை, ஏன் இந்த காமன் பள்ளியையே அவமானப் படுத்திவிட்ட சம்பவம் அல்லவா இது? என்று பொறிந்து தள்ளினார் அந்த வகுப்பு ஆசிரியர்-கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம்!

இந்த சம்பவத்தை கிராமர் பள்ளியின் பிற ஆசிரியர்களும், மாணவர்களும் வேடிக்கைப் பார்த்து வியப்படைந்து விட்டார்கள். காமன் பள்ளித் தலைமை ஆசிரியரின் உறுமலை - கர்ஜனையை அன்றுதான் இரு பள்ளிகளும் கண்டன; கேட்டன; பிரமித்தன!

கிராமர் பள்ளி ஆசிரியர்கள் வாளா விருப்பார்களா? பதிலுக்குப் பதிலாக, கிராமர் பள்ளி ஆசிரியர், கர்ஜனை செய்த ஆசிரியரைப் பார்த்து, ‘எங்கள் மாணவர்கள்தான் இந்த அடாத செயலைச் செய்தார்கள் என்பதை எந்த ஆதாரத்தைக் கொண்டு கூறுகின்றீர்? என்றார் இடி முழக்கம் கோபத்தோடு!

அதற்குக் காமன் பள்ளி ஆசிரியர், உங்களது பள்ளி மாணவன் ஆஸ்லர்தான் செய்தான்! அவனைத் தவிர வேறு எவருக்கும் இந்த அக்ரமத்தைச் செய்ய தைரியம் இருக்காது.