பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மருத்துவ விஞ்ஞானிகள்



இதயநோய், டைபாய்டு தடுப்பு;
மருந்து முறைகளை கண்டு பிடித்தார்

மதப் படிப்பில் விருப்பம் இல்லாமல் வெளியேறிய ஆஸ்லர், 1870-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் இண்டிக்கா என்ற நகர் சென்றார். அப்போது அவருடைய அன்பு நண்பர் பேராசிரியர் பவல் இல்லை. தனிமையிலே இருந்தார்.

எப்படியாவது மருத்துவத் துறைக் கல்வியைக் கற்றாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனது சிந்தனை முழுவதையும் செலவழித்தார். பிறகு எப்படியோ தந்தை விரும்பியவாறு மாண்ட்ரி என்ற நகரருகே உள்ள மக்கில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பெற்றார்.

ஆராய்ச்சி வல்லமை

மருத்துவப் படிப்புக்கு அக்காலத்தில் பலத்த எதிர்ப்பும் இருந்தது; மதிப்பும் இருந்தது. மாணவர்கள் அதிகமாக மருத்துவக் கல்வியிலேதான் சேர்ந்தார்கள். எண்ணிக்கையில் மாணவர்கள் அதிகம்தான். என்றாலும், மாக்மிலன் கல்லூரி செய்து கொடுத்திருந்த வசதிகள்தான் அதற்குக் காரணமாகும். மக்கில் கல்லூரி மாணவர்கள் நடைமுறைகளைக் கற்பதற்காக ஒரு மருத்துவ மனையும் இருந்தது. அத்துடன் ஆய்வுச் சாலை ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் பேராசிரியர் பவல் கற்றுக் கொடுத்திருந்த ஆராய்ச்சித் திறன் இப்போது ஆஸ்லருக்குப் பெரிதும் பயன்பட்டது; உதவியாகவும் அமைந்தது. தன்னோடு படிக்கும் மாணவர்களைவிட ஆராய்ச்சித் துறையில் ஆஸ்லர் வல்லவராக இருந்ததைக் கண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களே வியந்தார்கள்.