பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

161


“போகாமல் இருப்பதுதான் நல்லது!” -என்று அர்ச்சனனும் அதையே கூறினான்.

“இல்லை! இல்லை! போகாமல் இருக்கக்கூடாது! அப்படிச் செய்வது பெரிய தவறு ! இன்ப துன்பங்களை விலக்கவும் அனுபவிக்கவும் நாம் யார்? விதி நம்முடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதில்லையே! கெளரவர்களோடு சூதாட வேண்டும் என்று இருந்தால் அது நடந்து தான் தீரும். நீங்கள் நால்வரும் எனக்குத் தம்பியர்களானால் என்னுடன் பிறந்தவர்களானால் நான் கூறுகிறபடி கேளுங்கள். பெரிய தந்தை திருதராட்டிரனின் அழைப்பை மேற்கொண்டு அத்தினாபுரிக்குப் போகத்தான் வேண்டும். புறப்படுவதற்குரிய ஏற்பாடுகளைக் செய்க. சத்தியமும் தர்மமும் சாமானியர்களின் வெற்றுச் சூழ்ச்சியால் அழிவதில்லை! அழியாது” -தருமன் இவ்வளவு ஆணித்தரமாகக் கூறிய பின்பு அவனை எதிர்த்துப் பேச இயலாமல் சகோதரர்கள் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

‘பாண்டவர்கள் திருமுகத்தை ஏற்றுக்கொண்டு வருவதற்கு இசைந்துவிட்டார்கள்’ -என்ற செய்தியைக் கூறுவதற்காகத் தூதுவனாக வந்திருந்த விதுரன் முன்பே புறப்பட்டுச் சென்றான். அரண்மனையிலும் தருமனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் நடுவிலும் பாண்டவர்களின் பயணச் செய்தி விரைவில் பரவியது. பயணத்திற்கு தேவை யான ஏற்பாடுகளும் துரிதமாக நடக்க தொடங்கியிருந்தன.

5. விதியின் வழியில்

மறுநாள் காலையிலேயே பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர். பரிவாரங்களும் படைகளும் உடன் வரும் சிற்றரசர்களுமாகப் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ஐந்து ஒளிமிகுந்த தேர்களில் ஏறிச் சென்றனர். தருமன்



அ. கு. – 11