பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

555

இதை என்னால் செய்ய முடியுமா என்று திகைக்காதே. நான் செய்யத்தான் போகிறேன். தேவாதி தேவர்களின் கிருபையால் தவம் செய்து பெற்ற பல அஸ்திரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் இன்று பாண்டவர்கள் மேல் தொடுக்கப் போகிறேன். என் சொற்களை நம்பு” என்று வீர உரை பேசினான் அசுவத்தாமன்.

“செய் அசுவத்தாமா செய்! உன்னால் இதைச் செய்ய முடிந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இதோ என் அன்புக்கும், நன்றிக்கும் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்” என்று கூறிக் கீழே உருண்டு கிடந்த தன் முடியிலிருந்து ஒரு மணியை எடுத்து நடுங்கும் கைகளால் அசுவத்தாமனிடம் கொடுத்தான் துரியோதனன். அசுவத்தாமனும் பயபக்தியோடு அதைப் பெற்றுக் கொண்டான். துரியோதனன் அளித்த மணியைப் பெற்றுக் கொண்ட பின் அசுவத்தாமன் முதலியோர் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சமந்தபஞ்சகமலையிலிருந்து புறப்பட்டுத் தங்களுடைய பாசறையை அடைந்தனர். கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய இருவரோடும் கலந்து ஆலோசித்த பின் பாண்டவர்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டான் அசுவத்தாமன். தாக்குதலின் போது அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக மற்ற இருவரும் ஒப்புக் கொண்டனர்.

பாண்டவர்களைத் தாக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல நிமித்தமும் தென்பட்டது. பாசறையின் அருகே இருந்த ஆலமரம் ஒன்றில் ஓர் ஆந்தை காக்கைகளை எதிர்த்துப் பூசல் செய்து கொண்டிருந்தது. பகலில் என்னைத் துன்புறுத்திய காகங்களை இரவிலே பழிவாங்குவேன் என்று முயற்சி செய்வது போல் ஆந்தை கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. ‘பகலில் நம்மை வென்ற பாண்டவர்களை நாம் இந்த இரவில் தான் வெல்ல வேண்டும். இதற்கு இந்த ஆந்தையின் செயல் ஒரு நல்ல நிமித்தம்’ என்று எண்ணிக் களிப்படைந்தான் துரியோதனாதியர் படையைச் சேர்த்த அசுவத்தாமன்.