பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

அறத்தின் குரல்

அவ்வாறு ஓடும்போது துரியோதனனுடைய தம்பியர்கள் தங்கள் மனத்திலே என்ன எண்ணிக் கொண்டார்கள் தெரியுமா? “இந்த வீமனைப் படைத்த கடவுள் பெரிதும் வல்லமை உடையவன். அந்தப் படைப்புக் கடவுளே மீண்டும் வந்து இவனோடு போர் செய்தாலும் இவனை வெல்ல முடியாது” என்று வீமனைப் புகழ்ந்து கொண்டே சென்றனர்.

உண்மையில் அன்றைய தினமாகிய பன்னிரண்டாம் நாளில் வீமன் செய்த போர் புகழின் எல்லைக்கு அப்பாற்பட்டது. மகாதீரர்களாகிய துரோணர், அசுவத்தாமன், கர்ணன் போன்ற வில்லாளர்களையே புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றால் அந்த வீரத்தின் பெருமையை எப்படிப் புகழ்வது? இந்நிலையில் கதிரவன் மறைந்து இருள் படரத் தொடங்கியதனால் பன்னிரண்டாம் நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. போர் செய்த களைப்புடன் இரு பக்கத்துப் படைகளும் படைத்தலைவர்களும் பாசறைகளை அடைந்தனர். பாண்டவர்கள் பாசறைக்குச் சென்றதும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டனர். கெளரவர் களுடைய பாசறையிலோ ஒரே அசூயைக் குரல்களாக முழங்கின. போர்க்களத்தில் வீமனும் தருமனும் காட்டிய வீரத்தைப் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது. ‘முதல் நாள் தருமருக்கு எதிராகத் தாங்கள் செய்த சபதம் வீணாகப் போய் விட்டதே’ என்ற ஆத்திரமும் அவர்களுக்கு இருந்தது.

“துரோணரே! இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்லும் நேற்றிரவு நீங்கள் செய்த சபதம் என்னவாயிற்று? அதை வெற்றிகரமாக முடித்தீரா?” என்று துரியோதனன் துரோணரைப் பார்த்து அதிகாரம் தொனிக்கக் கேட்டான். துரோணர் பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தோடு தலைகுனிந்தார்.

அந்தச் சமயத்தில் கர்ணன் சும்மா இராமல் வெந்த புண்ணில் வேல் நுழைப்பது போல, “துரோணர் பார்ப்பனச் சாதிதானே? சொன்ன சொல்லை நிறைவேற்றித்தான் ஆகவேண்டுமா என்ன? சொல் மாறி நடப்பதுதானே அந்தச்