பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168சீவக சிந்தாமணி



அங்குச் செல்வதற்கு மற்றும் ஒரு காரணம் இருந்தது. தன் மாமன் கோவிந்தன் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி அவனிடம் ஆட்சி ஒப்புவிக்கப் போவதாகவும் செய்தி வந்தது. மாமன் உறவு தனித் தன்மை வாய்ந்தது தான். அந்த உறவை வளர்க்க ஆசைக்கு ஒரு மகளும் பெற்றிருந்தான். இந்த ஆசை என்பது யாரைக் குறிக்கும்? விளக்கம் இதுவரை யாரும் கூறவில்லை; தான் ஆசைப் படுவதற்கு ஒரு மகள் மாமன் பெற்றிருந்தான் என்று அவன் கணக்குப் போட்டான்.

விதேய நாட்டில் முதல் விழாவாகக் கோவிந்தன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டினான். அவ்விழாவில் பட்டத்து மன்னர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். மட்டற்ற மகிழ்ச்சியில் நாடு திளைத்துக் கொண்டிருந்தது. அவ்விழாவிற்கு நேரில் வர இயலாதவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருந்தார்கள். அவற்றுள் முதற் செய்தியாகக் கட்டியங்காரன் அனுப்பிய ஒலை வாசிக்கப்பட்டது. அதை கோவிந்தன் மிகப் பெருமையாகக் கொண்டான்; சீவகன் ‘அதைப் படிக்கக்கூடாது’ என்று மறுப்புத் தெரிவித்தான்.

“இது என்னுடைய விழா; உன் மறுப்பை ஏற்க முடியாது; பொறுப்பாக நடந்து கொள்” என்றான்.

அவன் தன்னை அவமதித்ததாக நினைத்தான்; அந்த விழாவில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

அந்தக் கடிதம் படிக்கப்பட்டது; இரைச்சலில் முழுச் செய்தி அறிய முடியவில்லை. சில வரிகள் மட்டும் தெளிவாகக் கேட்டனர்.

“சச்சந்தன் சாவுக்கு நான் தான் காரணம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்; அது உண்மையல்ல அரச யானை மதம் கொண்டு கட்டு மீறியது; அதைக் கட்டி அடக்க ஆள் இல்லை; அவசரப்பட்டுச் சச்சந்தன் அதன் போக்கினை மாற்ற அதனோடு முரண் கொண்டான்; அது