24-வது அதிகாரம்
பக்காத் திருடன்
சாசனம் முதலிய பத்திரங்களைப் பற்றிய விவரங்களை அதிகமாக மோகனராவ் அறிந்தவர் அன்றாதலின், அவரது மனதில் ஒருவகையான அச்சமும் வியப்பும் குடி கொண்டன. பவானியம்மாள்புரம் ஜெமீந்தாரின் மரணாந்தசாஸனம் அதிலிருக்க வேண்டிய காரணமென்ன என்று அவர் சந்தேகித்து பெரிதும் மயங்கினார். அதை மேலும் படித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை அவரைத் தூண்டியது. அவர் எதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அது ஏழெட்டுப் பக்கங்கள் உடையதாயும், நிரம்பவும் நெருக்கமாக எழுதப் பெற்றதாயும் இருந்தது; அவர் அதன் முதற்பாகத்தை வாசிக்க முயன்றார். அதில் வருஷம், மாசம், தேதி, தகப்பன் பெயர், ஜாதி, மதம், தொழில் முதலியவைகளும், நான்கு எல்லைகளும், மேற்படி மேற்படி என்ற சொற்களும் அடிக்கடி வந்ததைக் காண, அவருக்கு அதை வாசிப்பது நிரம்பவும் கடினமாக இருந்தது. அதில் யாதொரு அர்த்தமும் இன்பமும் அவருக்கு ஏற்படவில்லை . அவர் அவ்விதம் தத்தளித்திருந்த சமயத்தில் அவர் இருந்த அறையின் கதவை ஒரு வேலைக்காரன் தட்டினான். தாம் ஏதோ பெருத்த குற்றம் செய்ததை பிறர் கண்டு கொண்டதைப் போல திடுக்கிட்டு அச்சமடைந்த மோகனராவ் படம் சாஸனம் முதலியவற்றை விரைவாக எடுத்து பீரோவின் மேல் வைத்து விட்டு, கதவைத் திறக்க, வேலைக்காரன் அவரை வணங்கி, "எஜமானே! ஸுலைமான் ஸாயப்பு வந்திருக்கிறான்" என்றான்.
மோகனராவ் புதிதாக ஒரு ஸாரட்டும் குதிரையும் வாங்க உத்தேசித்திருந்தார். வியாபாரி ஸுலைமான் அவற்றை அவரது பார்வைக்காக கொண்டு வந்திருந்தான். அந்தச் சங்கதியைக் கேட்டவுடன் மோகனராவ் பெரிதும் உற்சாகமடைந்தவராய்க் குதித்துக் கொண்டு எழுந்து வெளியிற் சென்றார். அதன் பிறகு