உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டி வைக்கும் தரகர்

233

பிறகு தமது பிராண சிநேகிதர் ஆகிவிட்டதை நினைத்து வஸந்தராவ் வியப்படைந்தவராய், "இவர்கள் இருவரும் ரகஸியமாக ஏதோ காரியம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கென்ன சம்பந்தம் இருக்கிறது என்பது தெரியவில்லை. மல்லிகா இறந்த பிறகு இந்த உலகில் இருப்பதனால் எனக்கு இனி என்ன சுகம் உண்டாகப் போகிறது? நான் சாக மாட்டாமல், பூமிக்குப் பாரமாக அலைந்து தடுமாறுகிறேன்" என்று பலவாறு நினைத்து வருந்திய வண்ணம், எழுந்து கூடத்தில் உலாவத் தொடங்கினவர் தற்செயலாய் ஜன்னலின் வழியாக வெளியில் பார்த்தார். ஏராளமான ஜனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தனர். அதைக் கண்ட அவர், "ஆகா! ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தம் அலைந்து கொண்டிருக்கிறார்களே. நான் ஒருவன் மாத்திரம் உலகத்தில் ஒரு வேலையும் அற்ற வீணனாக இருந்து இப்படி விசனப்படவா பிறந்திருக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தமயந்தியும் மோகனராவும் வந்து சேர்ந்தனர்.

வஸ : (புன்சிரிப்போடு ) வர வேண்டும்; வர வேண்டும்; என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்த காரணத்தை இன்னமும் தெரிவிக்காமல் என்னை வருத்துகிறீர்களே! இது உங்களுக்குத் தருமமா? இந்த ஊரில் இருப்பது எனக்குப் பெருத்த தண்டனையாகத் தோன்றுகிறதே!

தம : முன்னமேயே தங்களுக்கு இருக்கும் விசனம் போதா தென்று நாங்கள் இன்னமும் ஒரு துன்பம் தரும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறோம்.

ஸகா : (விசனமும் புன்சிரிப்பும் காட்டி) அதுவும் நல்லது தான். எட்டிக்காயைத் தின்றவனுக்கு வேப்பங்காய் ஒரு பொருட்டா? விசனக்கடலில் மூழ்கியிருப்பவனை, இனி எந்த விசனந்தான் என்ன செய்யப் போகிறது? சொல்லுங்கள்; பாதகமில்லை.

தம : அப்படியல்ல! அதன் கொடுமை இவ்வளவு என்பது இப்போது தெரியாது; சொன்னவுடன் தெரியும். அதை நான் சொல்லவும் கூடவில்லை; சொல்லாமல் இருக்கவும் கூடவில்லை ; தரும் சங்கடமாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/251&oldid=1234055" இலிருந்து மீள்விக்கப்பட்டது