உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையாற் பாராட்டப்பெற்ற கவிஞர் பாரதியார் தம் வாழ்நாளில் ஒரு பகுதியைப் புதுச்சேரியிற் கழித்தார். அந்நாளில் அவர் தமிழ் உலகிற்கு ஆக்கியுதவிய அருங்கவிதைகள் பல, அவற்றுள்ளே ஒன்று தான் ’குயிற் பாட்டு’ என்னும் இனிய கவியோவியம். இச்சிறு நூல் எழுநூற்று நாற்பத்தைந்து (745) அடிகளைக் கொண்ட துள்ளலோசையுடைய தெள்ளிய தமிழ்ப்பாட்டான் இயன்றது. குயில் பாடும் இசைப்பாட்டாக இடையில் அமைந்து பத்துக் கண்ணிகளைத்தவிர, மற்றைப் பகுதிகள் அனைத்தும் கலிவெண்பாவுக்குரிய இலக்கண அமைதி பெற்று இலகுவதொன்றாகும்.

அறிஞர்கள் இலக்கியத்தை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவையாவன: [1]1. தனிமனிதனின் சொந்த அனுபவத்தைப் பற்றியது. 2. மக்களின் பொதுவான அனுபவும் பற்றியது. 3. சமுதாயத்தைப் பற்றியது. 4. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றியது. 5. மனிதனுடைய சொந்த முயற்சியில் - கற்பனையில் முகிழ்த்த புதுமை பற்றியது. இவ்வைந்து வகையுள் இறுதியிற் கூறப்பெற்ற இலக்கிய

வகையைச் சார்ந்தது பாரதியாரின் குயிற் பாட்டு. அக்கவிஞரின் சொந்தக் கற்பனையில் தோன்றிய முதல் நூலாகச் செந்தமிழ்ப் படைப்பாகத் திகழும் திறம் வாய்ந்தது குயில் பாட்டு. உயர்ந்தகருத்தை எளிய முறையில், இனிய நடையில் தெளிவுற விளக்கும் தீந்தமிழ்ப் பனுவலாகத் திகழ்வது குயிற் பாட்டு. பாரதியாரின் கற்பனைச் சிகரமாகவும் கவிதைக்


  1. 'Personal experience of an individual as an individual. 2. Experience of a man as a man. 3. Relations of the individual with his fellows. 4. External world of nature and our relations.5.Man's own effort to create and cxpress'- W. H. Hudson.