உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சு. சமுத்திரம்

உயர்த்தி, எம்பி எம்பிக் குதித்தார். ரயில்வே தகவல் அறிவிப்பாளர், இந்திப்பேச்சு ஆங்கிலம் மாதிரியும், ஆங்கிலப்பேச்சு இந்தி மாதிரியும் ஒலிக்கும்படி தொலைக்காட்சிப் பெட்டிகளில் வாய்க் கோணலோடு முகம் தோன்ற இரண்டுங் கெட்டானாகக் கத்திக் கொண்டிருந்தார். அவர், மூக்கு வழியாகப் பேசியதைப் பார்த்தால், ஆசாமிக்குத் தமிழக அரசியலில் பரிச்சயம் இருக்கலாம் போல் தோன்றியது. போதாக்குறைக்கு, ரயிலின் பொறுப்பதிகாரி, கடைசிப் பெட்டியில் வாசலோரம் நின்றபடி விசிலடித்தார்.

அந்தக் கொடியும் விசிலும், வேறொரு ரயிலுக்கு என்பதை புரிந்து கொள்ளாத தென்னகப் பயணிகளில் பலர், துடியாய் துடித்தார்கள். சப்பாத்தி வாங்கிய சர்தார் ஒருவர், பச்சை விளக்கையும் சப்பாத்தியையும் மாறி மாறிப் பார்த்தபடியே, அவசர அவசரமாகத் தின்று, அந்த வேகத்தில் மனிதர் இலையில் ஒரு பகுதியைக்கூடத் தின்றுவிட்டார். இன்னொருத்தர் - அநேகமாக அவர் ஜாட் இனப் பஞ்சாபியாக இருக்கலாம். சில்லறை கொடுக்க முடியாமல் சிக்கலாகப் பார்த்த சிகரெட் வியாபாரியை ரயிலை நோக்கி இழுத்துக் கொண்டே ஓடினார். கூடை கூடையாகக் குவிந்திருந்த ஆரஞ்சுப் பழக் குவியல்களில் கும்பல் கும்பலாய் நின்ற பயணிகள், ரயில் பெட்டிக்குள் கூட்டம் கூட்டமாய் விழுந்தடித்து ஓடினார்கள். ஒரு பெட்டியில் அவசர அவசரமாய்ப் பெட்டி படுக்கையோடு துழையப் போன ஒருத்தரை, உள்ளே இருந்த மார்வாடிக் குடும்பம் வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. இன்னொரு பெட்டியில் ஏறுவோரை இறங்குவோரும், இறங்கு வோரை ஏறுவோரும் தங்களை அறியாமலே தடுத்துக் கொண்டு இருந்தார்கள். பதிவு செய்யப்படாத மூன்று ரயில் பெட்டிகளில், ஆண் பெண் வேறுபாடின்றி ஒரு போரே நடந்து கொண்டிருந்தது.

ரயில் புறப்படப் போவதாக அனுமானித்தும், கால் டம்ளர் தேநீரைக்கூட மிச்சம் வைக்க விரும்பாத ஒரு தெலுங்குக்கார 'மனவாடு அந்த சூடான திரவத்தை வாய்க்குள் விடுவதற்குப் பதிலாக மூக்கிற்குள் விட்டு முகம் சுழித்துத் தும்மினார். சில பெட்டிகளில் உள்ளே இருந்த பெண்கள் "ஏமண்டி. ஏ.மய்யா. எந்தா.. என்னங்க.." என்று வெளியே சுகவாசிகள் போல் நின்ற சொந்தவாசிகளைக் குரல்களால் சுரண்டிக் கொண்டு இருந்தார்கள்.

மொத்தத்தில் அந்த பிளாட்பாரமே பூகம்பம் ஏற்பட்டு குய்யோ முறையோ என்று கூவுவது போலிருந்தது. மனிதக்குரல் என்று தனித்துக் கண்டுபிடிக்க முடியாத கூட்டக்குரல். தவளைகளின் இரவுவேளைக் குரலையும், தேனிக்களின் பகல் வேளைக் குரலையும் ஒன்று சேர்த்ததுபோல் கடைசி நிமிட வியாபாரச் சத்தம் இறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/15&oldid=588162" இலிருந்து மீள்விக்கப்பட்டது