இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அத்தியாயம்-1
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் எனும் உண்மை உலகெலாம் ஒளிவீசி ஓங்கி நிற்கும் காலம் இது. ஆண்களைப் போல் பெண்களும் அரும் பெரும் செயல்கள் புரிந்து இணையற்று விளங்கினர்கள் அந்தக் காலத்திலே. இதற்குச் சரித்திரத்தில் எவ்வளவோ சான்றுகள் உண்டு. இலக்கியத்திலே எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள.
ஆனால், இடைக்காலத்தில் பெண்கள் தன்மான உணர்வு இழந்து, உரிமை இழந்து, ஆணினத்தின் அடிமையராய், அடுப்பங்கரைப் பூச்சிகளாய், படுக்கை அறைப் பாவைகளாய், மந்தமதியினராய், கண்ணிர் சிந்தும் சிலைகளாய், பிள்ளை உற்பத்தி இயந்திரங்களாய் ஒடுங்கிக் கிடந்தார்கள். ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள்.
கால தேவனின் கையசைப்பினால் உலகம் எவ்வளவோ மாற்றங்களேப் பெற்றது. காடுகள் தோறும் மக்கள் உரிமை உணர்வு பெற்று உரிய போராட்டங்களிலே ஈடுபட்டார்கள். பெண் உலகமும் விழிப்புற்றது.