பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கால் பந்தாட்டம்


ஆடுவார்கள். எனவே, இனிவரும் பகுதிகளில், யார் யார், எந்தெந்த இடங்களில் இருந்து எப்படி எப்படி ஆடலாம் என்பதை விவரிப்போம்.

2. இலக்குக் காவலர் (Goal-Keeper)

கால் பந்தாட்டத்தின் நோக்கமே எதிரிக்குரிய இலக்கினுள் பந்தை உதைத்து செலுத்துவதுதான். வெற்றிக்கு வழிகாட்டும் பாதையாக விளங்கும் இலக்கைக் காத்து நிற்கக்கூடிய இடத்தில், ஆட வேண்டும் என்று விரும்புவோர், இச்சிறந்த பணியை, சீரிய கடமையை திறம்படச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாகவே இருக்க வேண்டும்.

தகுதியும் திறமையும்

நிலைமைக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் உடல் வாகு படைத்தவராகவும்; ஊக்கமும், உரம் வாய்ந்த அஞ்சா நெஞ்சுடையவராகவும் முதலில் இருக்க வேண்டும். நினைத்த நேரத்தில் தாண்டவும், குதிக்கவும், முன்னோக்கி ஒடவும், பக்கவாட்டில் பாயவும், எகிறிக் குதிக்கவும் கூடிய ஆற்றல், அதாவது குறைந்த வினாடிப் பொழுதிற்குள், அதிக அளவு சக்தியை வெளிப்படுத்திக் காரியம் ஆற்றுகின்ற தனித்தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

விரைந்து திட்டமிடும் மனம், அந்த மனத்தின் வேகத்திற்கு ஏற்ப செயல்படும் தேகம், அவரது திண்மையான தேகத்தைப் போலவே மனத்திண்மை, அச்சமின்மை, அத்துடன் அளவோடு, ஆத்திரப்படாமல் நிதானமாக பந்தைப் பிடிக்கும் அமைதியும் அவருக்கு வேண்டும்.