26
ஆட்டப் பலகையின் நான்கு பக்கங்களிலும், அடிப்பானை வைத்து அடித்தாடுதற்கென்றே, 18¼ அங்குல நீளமுள்ள தளக்கோடுகள் (Base Lines) சட்டத்திற்கு இணையாக வரையப்பட்டிருக்கின்றன. அவ்வாறுள்ள, தண்டவாளம் போன்று நீண்டு போகும் இரண்டு கோடுகளும் 1¼ சிறு அங்குலம் விட்டமுள்ள இரண்டு வட்டங்களுடன் இணைந்து முடிந்திருக்கும். அந்த வட்டங்களில் 1 அங்குலம் விட்டத்திற்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும். இவைகள் தள வட்டங்கள் (Base Circles) என்று அழைக்கப்படும்.
‘அடிப்பானை’ தளக் கோட்டின் மேல் அல்லது தளவட்டத்தில் வைத்து. அடிக்கத் தொடங்க வேண்டும்.
‘அடிப்பானை’ முன்னோக்கித் தள்ளிக்கொண்டே சென்று, கையையும் சேர்த்துக்கொண்டு போகாமல், விரலால் சுண்டித்தான் அடிக்க வேண்டும்.
அவ்வாறானால், சுண்டுவதற்கு எத்தனை விரல்களையேனும் பயன்படுத்தலாமா என்றால், ஒரு விரலின் நுனியைப் பயன்படுத்தலாம். அந்த நுனிப் பாகமானது நகம் சார்ந்த விரலின் மேற்புறத்தை அதாவது முதல் முடிச்சு வரை (Joint) தான் பயன்படுத்தலாம். ஆனால், சுண்டுவிரல் நுனியான சதைப் புறமுள்ள உட்பகுதியை பயன்படுத்தவே கூடாது. அதற்காக மற்ற விரல்களின் ஆதரவையும் துணையையும் பக்கபலமும் தேவையில்லையென்றால், தனி விரலாலேயே சுண்டி அடித்தும் ஆடலாம்.
துணை என்றதும், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்றால், ஒரே சமயத்தில் ஒரு கையையும், அதில் உள்ள ஒரு விரலையும்தான் உபயோகப்படுத்த வேண்டும்.