சீவக சிந்தாமணி (உரைநடை)/காந்தருவதத்தையார் இலம்பகம்

விக்கிமூலம் இலிருந்து

3. காந்தருவ தத்தை இலம்பகம்

கந்துக்கடன் இராசமாபுரத்தில் செல்வச் சிறப்புமிக்க பெரு வணிகனாக இருந்தான். அவனுக்கு நிகராக மற்றோர் வணிகன் சீதத்தன் என்பவன் திரை கடல் ஒடித் திரவியம் தேடுவதில் நாட்டம் கொண்டான். கடல் கடந்து சென்று பல புதிய தீவுகளுக்கு இராசமாபுரத்து விளை பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவனோடு படகோட்டிகளும், தொழில் செய் கம்மியரும், நெருங்கிய உறவினரும் சேர்ந்து செல்வர்.

பதுமை நிகர் அவன் மனைவி பதுமை பேரழகுடையவள். ஆனால் மகப்பேறு இல்லாத குறை அவர்களை வாட்டியது. அந்தத் துன்பத்தையும் மறக்க அவன் அவ்வப்போது வெளி ஊர்கள் செல்வதில் மனநிறைவு கண்டான். ஆட்களையும் உறவினர்களையும் உடன் வர வழக்கம் போல் அழைத்தான். அவர்கள் உள்ளது போதும் எதற்காகக் கடலுக்குச் சென்று உடம்பு கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பேசினர்.

“ஊக்கம் இருந்தால்தான் ஆக்கம் வரும்” என்றும், “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்றும், “போகிற உயிர் கடலில்தான் போகும் என்று இல்லை; இங்கேயே திடீர் என்று சாகின்றவர் பலர் உள்ளனர்” என்றும் பேசி அவர்களை ஊக்குவித்தான். அவர்களுள் ஒரு சிலர் தம் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டுப் புதிய ஊர்களைக் காண்பதற்கு அவனுடன் சென்றனர்.

சங்குகள் திரியும் கடலில் சென்று புதிய ஒரு தீவினை அடைந்தனர். அத்தீவின் தலைவன் இவனை வரவேற்று இவனுக்கும், இவன் ஆட்களுக்கும் விருந்து வைத்து உபசரித்தான்; ஆடலும் பாடலும் அவர்களை மயக்கின. அழகிகள் சிலரை அவனுக்கு அனுப்பி வைத்தனர். புதுப்புது மங்கையர் மதுவகைபோல அவனுக்குக் கிளர்ச்சி உண்டு பண்ணினர். ஊரில் இருந்தால் வனப்புமிக்க இவ் வனிதையர் வாய்ப்பது அருமை என்பதால் அங்குத் தங்கி இன்புற்று நாட்கள் சில கழித்தான். கட்டிய மனைவி போல அவர்கள் கொட்டி வைத்த பூவாக இல்லை; மொட்டு மலரும் அரும்பாக அவனுக்கு மணம் ஊட்டினர்; பிரிய மனம் இல்லாமல் அத்தீவினை விட்டு வெளியேறினான். கொண்டு வந்த பண்டங்களை அங்கே இறக்கிப் போட்டு விட்டுக் கிடைத்தற்கரிய மணிகளையும், பொன்னையும், விலையுயர் முத்துகளையும், யானைத் தந்தங்களையும், அகில் சந்தனம் முதலிய விலைமிக்க பொருள்களையும் மரக்கலத்தில் நிரப்பிக் கொண்டு புறப்பட்டான், தீவின் தலைவன் அவனுக்கு வழி அனுப்பிவைத்தான்.

விரைவில் இவ்விலைமிக்க பொருள்களைக் கொண்டு சென்று தம் ஊரில் குவித்து மற்றைய வணிகர்கள் எல்லாம் பொறாமைப்படும்படி வாழ்க்கை நடத்தலாம் என்று கனவு கண்டான். இவன் வருகைக்காகக் காத்திருக்கும் பதுமையை அடைந்து இந்தப் புதுமைகளைக் காட்டினால் அவள் அடையும் மகிழ்ச்சியை எண்ணிப் பார்த்தான். பழங்கள் போதை தரும், மனைவி அத்தகைய இன்பத்தைத் தரக் காத்துக் கிடந்தாள். அவள் அணைப்பில் பிரிவுக்குப்பின் பெறும் இணையற்ற சுகத்துக்கு ஏங்கிக் கிடந்தான்.

எதிர்பார்க்கவில்லை; வானத்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன; நிலா ஒளி வீசியது; நீலக்கடல் வழக்கம் போல் அலைகளை எழுப்பி ஒலம் இட்டுக் கொண்டிருந்தது; காற்றில் மேகம் புகுந்தது; அலைகள் மேல் எழுந்தன; காற்றும் மழையும் கலந்து கொண்டன. இவன் ஏறிச் சென்ற மரக்கலம் கவிழ்ந்துவிட்டது. அவன் கட்டிய கனவுகள் எல்லாம் கொட்டிவைத்த உப்புக்களங்கள் ஆயின. உயிருக்கே மோசம் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தான். உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியவில்லை. அவர்கள் அத்தனை பேரும் நடுக்கடலில் ஆழ்ந்து நாசம் ஆகிவிட்டார்களா தப்பித்துக் கொண்டார்களா தெரியவில்லை.

சும்மா இருந்தவர்களை எழுப்பிக் கொண்டு வந்து அவர்கள் உயிர் இழக்கத் தான் காரணமாக இருந்ததை எண்ணிக் கவலையும் அச்சமும் கொண்டு மனம் தளர்ந்தான். உடன் வந்தவர் மறைந்து விட்டனர், ஓட்டைப் படகின் கட்டுமரத்துண்டு ஒன்று மட்டும் இவனுக்காகத் தெப்பமாகியது.

கண்ணுக்கு எட்டிய துாரம் கடல் நீர் தான் நீண்டு தெரிந்தது. இவன் ஏறிய கட்டுமரத்தின் ஒரு துண்டு அவனுக்குக் கரை ஏறமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியது. அதனைப் பிடித்துக் கொண்டு திக்கு முக்காடித் திக்குத் தெரியாத ஒரு மணல் மேட்டில் ஒரு பகுதியை அடைந்தான். நீர், மணல் இவை இரண்டைத் தவிர வேறு எதுவும் அவன் கண்களில் காணவில்லை.

கொண்டு வந்த பொருளை எல்லாம் மீண்டும் அலைகள் நிரம்பிய கடலில் வீழ்த்திவிட்ட அழிவு நினைத்து மனம் அழுங்கினான். உள்ளதைக் கொண்டு உவகையோடு வாழலாம் என்று சொல்லிய தன் உத்தமி வீட்டுத் துணைவி பதுமையை நினைத்து வருந்தினான். இலம்பாடு நாணுத்தரும் என்று பேசிய நிலை குறித்துச் சிந்தித்தான். அவள் கழுத்தில் பூண்டிருக்கின்ற தாலி அதையாவது காப்பாற்ற இயலுமா என்று ஏங்கினான். இங்கே உணவும் ஆதரவும் இன்றி உயிரை உதிர்க்க வேண்டி விடுமோ என்று அஞ்சினான்.

சற்றுத் தொலைவில் ஒரு பொழிலைக் கண்டான். ஞாழலும், புன்னையும் பூத்துக் கிடந்தன. நண்டுகள் பக்கத்தில் இருந்த அன்னத்தைக் கண்டு மருண்டு ஒதுங்க வில்லை; அந்த அன்னங்கள் அவற்றைக் கண்டும் காணாமல் தவயோகிகளைப் போல அவற்றைத் தின்னாமல் விட்டு வைத்தன; பூத்த மலர்களை உடைய பொழிலையும், அதை அடுத்து இருந்த அகிம்சா மூர்த்திகளாக விளங்கிய அன்னப் பறவைகளையும் கண்டதும் அவனுக்கு உயிர் தப்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

யாராவது அங்கு வந்து தன்னைச் சந்திப்பார்களா என்று எதிர்பார்த்தான். உடனே வனதேவதை ஒருத்தி வந்து அவனுக்கு அன்னமிட்டு ஆதரிப்பாளா என்ற ஆவல் எழுந்தது; காட்டு மனிதர்கள் வேட்டையாடுவோர் வந்தால் மூட்டையை அவிழ்த்துக் காட்டு என்று சொன்னால் என்ன செய்வது; பொருள் இல்லை என்பதால் அவர்கள் அருள் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. விண்ணில் இருந்து யாராவது தேவதூதன் வந்து தன்னை அழைத்துச் சென்று விருந்து வைத்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன ஆசையும் தோன்றாமல் இல்லை. அவன் எதிர்பார்த்தபடியே வித்தியாதர நாட்டு வாலிபன் ஒருவன் வித்தியாசமான உடையில் தன் முன் வந்து தோன்றினான்.

“ஐயா! எம்மினும் நீர் வித்தியாசமாக இருக்கிறீரே இந்தத் தீவின் தலைவரோ நீர்?” என்று கேட்டான்.

“வித்தியாதரன் யான்; விஞ்சையர் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்” என்றான்.

“நீயும் என்னைப்போல் கலம் கவிழ்த்துவிட்டுக் கலங்கி நிற்கிறாயா?” என்று கேட்டான்.

“கலங் கவிழ்ந்து நிலம் தேடி வந்திருக்கின்ற உன் அவலம் துடைக்க வந்தேன்” என்றான்.

“என் மனைவி விரதங்கள் கொண்டவள்; வெள்ளிக் கிழமை தோறும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வருவாள். அவள் செய்த நல்வினைதான் என்னைக் காத்தது” என்றான்.

“மனைவியை மதிக்கின்ற அந்த மதி நலம் தான் உன்னைக் காத்தது. ஏதோ சில அதீத நன்மைகளை அடையவும் நீ இங்கே வந்து சேர்ந்திருக்கலாம் அல்லவா” என்றான் வந்தவன்.

“கையில் காசு இல்லாமல் யான் இனி என்ன செய்ய முடியும்; வக்கு இல்லாத என்னை யார் அக்கரையோடு கவனிப்பார்கள். ஆள் வழக்கற்ற இந்த அருஞ்சுரத்தில் நீள் வடிவம் உடைய உன்னைக் கண்டதே யான் செய்த தவம்” என்றான்.

“கவலைப்படாதே, இழந்த பொருள் ஓங்கவும், உழந்த துன்பம் நீங்கவும் யான் உதவுவேன்; என்னோடு வான் வழியே வா; என் தலைவன் முன் உன்னைக் கொண்டு சென்று சேர்ப்பேன்; அவன் உனக்கு எல்லா நன்மையும் செய்வான்; உன் மரக்கலமும் அதில் உள்ள மானுடமும் உன்னை வந்து அடையும்” என்றான்.

மந்திரத்தால் மாங்காய் விழாது என்று சொல்லுபவர்கள் மடையர்கள்; மாங்காய் விழும் என்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்தது. பக்கத்திலே ஒரு ஆட்டுக்கிடாய் நின்று இருந்தது. அதற்கு இறக்கைகளும் இருந்தன. அதைக் கண்டு இவனுக்கு வியப்பு உண்டாகியது.

“இதில்தான் நீர் இறங்கி வந்தீரா?” என்றான்.

“இது வான ஊர்தி; விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் எதை வேண்டுமானாலும் பறக்க வைக்கமுடியும்; எங்கள் வித்தியாதர உலகில் இப்படிப் பல புதிய படைப்புகள் கண்டு பிடித்திருக்கிறோம்” என்றான்.

“எங்கள் இராசமாபுரத்தில் கூட மறைந்த மன்னன் சச்சந்தன் மயிற்பொறி ஒன்றைச் செய்து அதில் நாட்டு அரசியை ஏற்றி அனுப்பினான்; அதில் ஏறித்தான் விசயமாதேவியும் உயிர் தப்பினாள்” என்றான்.

“அது மயிற்பொறி, ஒருவர் தான் போக இயலும்; இது ஆட்டுக்கிடாய்; நாம் இருவரும் ஏறிச் செல்லலாம்” என்றான்.

சீதத்தன் ஆட்டுக்கிடாயின் பின் பக்கம் இருந்தான்; அவனுக்கு முன் பக்கம் அந்த விந்தையன் அமர்ந்தான். நம் நாட்டு இக்காலத்தில் ஸ்கூட்டரில் செல்வதைப் போல ஏறி அமர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் விண்வழியே வட திசை நோக்கிச் சென்றனர். மலைகளும் குன்றுகளும் மேலே இருந்து கீழே பார்க்கும்போது அவை மாடுகளும் ஆடுகளும் போலக் காட்சி அளித்தன. மேகங்கள் இவன் ஏறிச் சென்ற விமானத்தின் கீழ்த் தவழ்ந்து சென்றன, அந்தப் பயணமே அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவ்விமானம் ஒரு மலையையும் அதில் இருந்த சோலையையும் அடைந்தது. அங்கே அவன் பசியைப் போக்கக் கனிகளும் நீர் வேட்கையை நீக்கத் தெளிந்த நீரும் கிடைத்தன. அவற்றை உண்டு உடம்பு குளிர்ந்தான். அங்கே குங்குமம், சுரபுன்னை, சந்தனம் முதலிய மரங்கள் காட்சிக்கு இனிமை தந்தன.

“இம்மலைகளில் கற்களே இல்லையா?” என்றான்.

“எல்லாம் வெள்ளிக் கட்டிகள்; அதனால் இதனை வெள்ளிமலை என்பார்கள்.”

“இந்த நகர்?”

“இதுதான் எம் தலைவன் ஆட்சி செய்யும் வித்தியாதர நகரம்; இது அமராவதியினும் அழகியது” என்று கூறி அவ்வணிகனைக் கலுழவேகன் இருக்குமிடம் அழைத்துச் சென்றான்.

“உன் பெயர் கேட்க மறந்து விட்டேன்.”

“தரன் என்று அழைப்பார்கள் என்னை” என்றான்.

வித்தியாதர அரசனின் அரண்மனைக்குச் சீதத்தன் அழைத்துச் செல்லப்பட்டான்.

கலுழவேகன் தன் பட்டத்து அாசி தரணியோடு வீற்றிருந்தான்.

முறுவல் பூத்த முகம்; அவன் வருகையை வரவேற்று “அமர்க” என்றான்.

“உம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

“வியப்பாக இருக்கிறதே” என்றான் சீதத்தன்.

“நமக்குள் சாதிபேதம் தேவையில்லை; உம் மூதாதையர் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள்; நம் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு தொன்று தொட்டுள்ளது. நாம் அரசன் வணிகன் என்ற பேதம் பாராட்டத் தேவை இல்லை. நாம் உறவினர் ஆகிவிட்டோம்” என்றான்.

தனக்கு மகளோ மகனோ இல்லையே எப்படி உறவு கொள்ள முடியும் என்று சிந்தித்தான்; கொடுக்கல் வாங்கல் இல்லாமல் உறவு எப்படிக் கிடைக்க முடியும் என்று வியந்தான்.

“நமக்குள் கொடுக்கல் வாங்கல்”

“இனித் தொடரப்போகிறது” என்றான்.

“எனக்கு மகன் மகள் யாரும் இல்லையே” என்றான்.

“எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்”

“இரண்டாவது தாரமா”

“உனக்கு இல்லை;அவளை உன் மகளாக நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்.”

“என் மனைவிக்கும் ஒரே ஏக்கம்; ஒரு மகள் இருந்தால் எவ்வளவு மகிழலாம் என்று சொல்லுவாள்; நான் கொண்டு சென்ற பொருளைக் கொண்டு புதுப்புது நகைகள் செய்து வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு மகளைப் பெற வேண்டும் என்று என்னைத் தொல்லைப் படுத்துவாள்.”

“நீ என்ன செய்ய முடியும்.”

“அதனால் என்னிடம் விரும்பி வருவாள்; நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள்; வயிற்றைத் தொட்டுப் பார்ப்பாள், சாப்பிட்ட மாதிரி இருக்கவே இருக்காது; அவள் பசி தீரவே இல்லை.”

“வளர்ந்த மகள் உனக்குத் தருகிறேன்; நீ கொண்டு சென்று தக்கவனுக்குத் தந்து அவனை மருமகனாகக் கொள்க. எனக்கு ஆதரவாக இருக்கும்” என்றான்.

“இவள் விலை போகவில்லையா?”

“தக்க விலை கிடைக்கவில்லை. அவளைக் கட்டிக் கொள்ள மன்னர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவள் ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். இராசமாபுரத்துக்குப் போகவேண்டும். அங்கே தான் தனக்கு மாப்பிள்ளை கிடைப்பான் என்று சொல்கிறாள்.”

“காரணம்”

“அவளுக்குச் சாதகம் கணித்தவர்கள் அப்படிச் சொல்லி விட்டார்கள்; அதை அவளும் நம்புகிறாள்; எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஆழப் பதிந்து விட்டது.”

“அம்மா என்ன சொல்கிறார்கள்?”

“அரசியா? துரத்தில் எப்படி நம் பெண்ணை அனுப்புவது? ஏதாவது ஆனால் எப்படி நாம் போய்ப் பார்க்கமுடியும்? மகளை விட்டு எப்படிப் பிரிந்து இருக்க முடியும்” என்று கூறுகிறாள்.

“அதுசரி, எப்பொழுது ஆனாலும் அவள் இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டியவள் தானே! இராசமாபுரத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே” என்றான் சீதத்தன்.

“இந்த ஊரில் பிள்ளைகள் பார்க்க லட்சணமா இருப்பார்கள்; ஆனால் படிப்பு சூனியம்; அவனவன் தனக்குப் பிரியமானவளோடு காதல் கொண்டு காந்தருவ மணம் செய்து கொள்வான்; கேட்டால் ‘காதல் மணம்’ என்பார்கள். பெரியவர்கள் சம்மதம் தரும் வரையிலும் காத்துக்கொண்டிருக்க முடியாது என்பார்கள். அவசரப் படுவார்கள். அப்புறம் விவாகரத்து செய்துவிடுவார்கள். அது இந்த நாட்டுப் பழக்கம். இதை ‘காந்தருவ மணம்’ என்று சொல்லி மற்றவர்களும் இப்பொழுது பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.” “இந்த ஊரில் இளைஞர்கள் அழகானவர்கள். இத்தகைய அழகு எங்கள் ஊரில் எங்கே கிடைப்பார்கள்?”

“அழகைப் பற்றி அவள் கவலைப்படவில்லை; படித்த மாப்பிள்ளைதான் வேண்டும் என்கிறாள். இப்பொழுது பெண்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. தன்னைவிட அவன் கற்றவனாக இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.”

“எவ்வளவு படித்தவனாக இருக்கவேண்டும்?”

“இசையிலே வல்லவனாக இருக்கவேண்டும். என் மகள் வீணை வித்தகி ஆவாள். அவள் பாடும் குயில்; தன்னிலும் இசையில் வல்லவனாக இருக்க வேண்டும் தன் கழுத்தில் மலையிடுபவன் என்கிறாள்.”

“நான் என்ன செய்யவேண்டும்?”

“இதோ என் மகளை அழைக்கிறேன். அவளோடு நீங்களே பேசிக் கொள்ளலாம்.”

காந்தருவதத்தை கலுழவேகனின் மகள்; அவள் தந்தை அழைக்க அங்கு வந்து நின்றாள். சீதத்தன் விழித்த கண்ணை மூட மறந்து விட்டான்; பிறகு நினைவு வந்தது தான் தேவன் அல்ல என்று; இமை மூடினான்; திறந்தான்; ஒழுங்காக நடந்து கொண்டான்.

அவள் தந்தையையும் தாயையும் பார்த்தான்; தாயை அவள் அப்படியே உரித்து வைத்திருந்தாள்.

“உங்களைப் போலவே இருக்கிறாள்” என்று பாராட்டினான்.

தாரணிக்கு உள்ளம் குளிர்ந்தது. அந்தப் பாராட்டுத் தனக்குத்தான் என்பதில் அவள் சற்றுக் கருவமும் கொண்டாள்.

அழகுத் தெய்வம் தன் கண்முன் நிற்பது போல இருந்தது; எங்காவது ஏதாவது குறை இருக்கிறதா என்று பார்த்தான்; சிற்பி செதுக்கிய சிலை போல மூக்கும் விழியுமாக இருந்தாள்; இடை மட்டும் மிகவும் மெலிந்திருந்தது; அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்க் கவிஞர்கள் சொல்லி இருப்பது நினைவுக்கு வந்தது; மூடி வைத்திருக்கும் அழகை எல்லாம் அவனால் ஊடுருவிப் பார்க்க இயலாது; கவர்ச்சி உடையவள் என்பதை அறிந்தான். வீட்டுக்கு அழைத்துச் சென்றால் பதுமை அனுமதிப்பாளா என்ற மெல்லிய அச்சம் அவனைக் கிண்டியது. மகள்தானே! அவள் மறுக்க மாட்டாள் என்று மனம் உறுதி செய்து கொண்டான்.

“என்னம்மா படித்து இருக்கிறாய்?”

“இசை பயின்று இருக்கிறேன்.”

“அதில் இசைபெற வேண்டும் என்று விரும்புகிறாயா?”

“திசை எங்கும் என் புகழ் பரவ வேண்டும்; அந்த ஆசை உள்ளது” என்றாள்.

“இசை கற்றதால் இசைக் கலைஞனையே மணக்க விரும்புகிறாயே அது சலிப்புத் தட்டாதா?”

“மன ஒற்றுமை ஏற்பட அதுதான் வழி; ஒருவரை ஒருவர் மதிக்க முடியும்; இன்ஜினியர் டாக்டரைக் கட்டிக் கொண்டால் முரண்பாடுகள் தான் நிகழும்; இது கலை உலகம்; மற்றவர்கள் எம் நுண்ணிய உணர்வுகளை மதிக்க மாட்டார்கள்; வீணை கொண்டு பாடத் தொடங்கினால் “அடுப்பில் புகை எழுகிறது; நீ எழுந்து கவனி” என்றால் நான் என்ன செய்ய முடியும்? அலுத்து வரும் கணவனுக்கு யாழ் எடுத்து இசை கூட்டினால், “நீ வேறு வந்து அறுக்க வேண்டுமா? அதைத் தூக்கிக் குப்பையிலே போடு” என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்”.

“இந்த வெள்ளிமலை எனக்கு அலுத்துவிட்டது அழகு மட்டும் இருந்தால் போதுமா? ஆரவாரமும் இருக்க வேண்டும்; செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அதைக் கொண்டு தொழில்கள் வளர்ப்பதைக் காண வேண்டும். கறியும் சோறும் படைத்து உண்பதால் மட்டும் பயன் இல்லை; அதைச் சமைக்கும் தொழிலிலும் பங்கு கொள்ள வேண்டும்; இங்கே வருபவர் வீட்டு மாப்பிள்ளையாக ஒட்டிக் கொள்ளவே வருவார்கள் அல்லது அலங்கார பொம்மையாக என்னை வைத்து அழகு பார்ப்பார்கள். வீரம் மிக்க செயல்கள் ஆற்றித்தரும் இளைஞனுக்கு யான் தாரமாக வேண்டும்; அவனுக்குப் புகழ் சேர்க்க நான் உறுதுணையாக நிற்க வேண்டும். கண்ணுக்கு நிறைந்தவனாக இருந்தால் மட்டும் போதாது; மண்ணுக்கு உதவும் மாவீரனாகத் திகழ வேண்டும்; அந்த ஆசைகளுக்கு இந்தக் காந்தருவ உலகில் வாய்ப்பு அமைவதில்லை. அதனால் தான் யானும் என் தந்தை விருப்பப்படி உம்மோடு வர விழைகின்றேன்” என்றாள்.

“கொண்டு வந்த பொருளையும், என்னை அண்டி வந்த இளைஞரையும் இழந்து நிற்கிறேன். இந்த எளிய நிலையில் திரும்பிச் செல்வது என்றால் விரும்பத்தக்கது அன்று” என்றான்.

“அவை நீ விட்டு வைத்த இடத்திலேயே கட்டி வைத்திருக்கிறோம். இவை எல்லாம் எங்கள் கட்டுவித்தை; நீ கலத்தில் வருகிறாய் என்று எங்களுக்குத் தெரியும்; உன்னை மடக்கிப் பிடிக்கவே இந்த இடக்கினை விளைவித்தோம்” என்றான்.

“நாங்கள் மந்திர சக்தியால் இவற்றைச் செய்து முடிக்கிறோம்; விஞ்ஞான உலகம் இதை எதிர்காலத்தில் செய்துகாட்டும்; தூர இருந்தே கப்பல்களைக் கவிழ்க்கும் நுண் கருவிகளை இந்த உலகம் காணத்தான் போகிறது. இன்று நாங்கள் விரைவில் பறக்கும் விமானங்களைப் படைத்து இருக்கிறோம். எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றை எல்லாம் கண்டு பிடிக்கும்; எங்கள் கற்பனையில் காண்பவை எல்லாம் அறிவு உலகம் ஆக்கித் தரும்” என்றான் கலுழவேகன்.

அங்கு ஒரு சில நாட்கள் வித்தியாதர அரசனின் விருந்தினனாகத் தங்கி இருந்தான். காந்தருவதத்தை அவனோடு புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டாள். பெற்றவளால் இப்பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் முத்துப்போல் தொத்திக் கொண்டு விழலாமா வேண்டாமா என்று காத்துக்கிடந்தது. கண்ணுவ முனிவரின் ஆசிரமத்திலிருந்து பிரிந்து செல்லும் சகுந்தலையின் தாய் ஆனாள். அவள் கற்றவள் ஆதலின் கலங்கவில்லை. தாயைத் தழுவிக் கொண்டு விடை பெற்றாள். கலுழவேகன் அவள் தாய்க்கு ஆறுதல் கூறினான்.

“சங்கு ஈனும் முத்து அது கடலிலேயே தங்குவது இல்லை. கரை ஏறி அதைக் கண்டெடுக்கிறவர்க்கே பயன்படுகிறது. அதை அவர்கள் ஆரமாகக் கோத்து மகிழ்கின்றார்கள்; முத்து இருக்க வேண்டிய இடம் கத்தும் கடல் அலையில் இல்லை. அது மங்கையர் மார்பில் தங்கி அவர்கள் அங்க அழகுகளுக்குத் துணை செய்யும் போதே பெருமை பெறுகிறது.”

“யாழிலே யிறக்கும் இசை யாழுக்குப் பயன்படுவது இல்லை; அது நுகர்பவருக்கே பயன்படுகிறது. மலையுளே சந்தனம் பிறக்கிறது. அது அரைத்துப் பூசிக் கொள்பவர்க்கே மணம் ஊட்டுகிறது. எண்ணிப் பார்த்தால் உன் மகளும் உனக்கு அத்தகையவளே.”

“நீயும் ஒரு காலத்தில் கன்னிப் பெண்ணாக இருந்தாய்; அன்னையின் மடியில் அழகாகத் தவழ்ந்து வளர்ந்தாய், அண்ணாந்து ஏந்திய வளர்இளமுலை தளரும் என்பதற்காகத் தாய் வீட்டிலேயே இருக்க முடிந்ததா! இங்கே வந்த பிறகுதானே நீ தாய்மை அடைந்தாய். பெண்ணுக்கு முதற்பிறப்புத் தாய்வீடு; மறுபிறப்புக் கணவன் வீடு; அவள் அங்கே சுதந்திரப் பறவையாக இந்த உலகத்தைக் காணவேண்டும்; காதல் ஒருவனைக் கைப்பிடித்தே காரியம் யாவையும் சாதிக்க வேண்டும்; அவளை மகிழ்வோடு அனுப்பு, அயல் நாட்டுப் படிப்புக்கு நம்நாட்டு இளைஞர்கள் சென்று வருகிறார்கள். மண வாழ்க்கை என்பது கூட ஒரு புதிய பள்ளிதான். ‘குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற நம் நாட்டுப் பாவேந்தன் சொல்லிக் கேள்விப்படவில்லையா? அவள் அங்குத் துணைவேந்தனாக இருந்து ஆட்சி நடத்துவாள்; வழி அனுப்பிவை” என்றான்.

தரன் என்பவன் பூவால் அலங்கரிக்கப்பட்ட விமானம் கொண்டு வந்து நிறுத்தினான்; பலர் அவளுக்குத் துணையாக ஏறினர்.

வீணாபதி என்ற பேடி ஒருத்தி அவள் நெருங்கிய தோழியாக இருந்தவள். யாழிசையில் கூறுபாடுகளை எல்லாம் நன்கு அறிந்தவள். அவளையும் உடன் செல்க என்று அனுப்பி வைத்தான். தத்தை இசை பழகப் பயன் படுத்திய யாழ்க்கருவிகள் பலவற்றையும் உடன் அவள் எடுத்துச் சென்றாள்.

பெற்று வளர்க்க வேண்டிய சிரமம் இன்றி மகள் பேறாக உற்றுத் தன்னை அடைந்த அந்தக் கற்ற ஒருத்தியை அழைத்துக் கொண்டு பழைய தீவைச் சென்று அடைந்தான். அங்கே அவன் ஏறிவந்த மரக்கலம் கரையில் பழைய தீவிலேயே விடப்பட்டு இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியோடு எந்தவிதக் குறையும் இன்றி இவன் வருகைக்காகக் காத்துக் கிடந்தனர்.

விமானத்தில் இருந்து இறங்கும் புதிய மனிதர்களைக் கண்டு அவர்கள் வியந்தனர். கையில் வீணையோடு இறங்கிய வித்தகியைக் கண்டு அவர்கள் மெத்தவும் திகைத்தனர். விண்ணில் இருந்து இறங்கியதால் பண்ணில் இசைபாடும் கலைமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினர்; அவள் வயதில் குறைந்தவளாக இருந்ததால் பிரமனின் மனைவி அல்லள் என்பதைக் கண்டு கொண்டனர். நான்முகன் உடன் வராததால் இவள் மானுட மகள்தான் என்பதை அறிந்தனர்; காந்தருவ நாட்டுக் காந்தாரப் பண்பாடும் இசைக்குயிலோ என்று வியந்தனர்; அவள் தத்தை மொழி பேசுவதால் இவள் காந்தருவ தத்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தனர். வித்தியாதர நாட்டில் காந்தருவ தத்தை என்ற பேரழகி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் வீணை வித்தகி என்றும் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அத்தகைய பேரழகியைக் காண முடியுமா என்று ஏங்கி இருந்தனர்.

வாணிபம் செய்ய வந்த இடத்தில் வான் நிலவு போன்ற வடிவ அழகியைக் கண்டு அவர்கள் வியப்பு உற்றனர். சீதத்தன் வாய் திறந்து பேசுவான் என்று எதிர்பார்த்தனர். இவனும் அவர்கள் எப்படிப் பிழைத்தார்கள் என்று அறிய ஆவல் உடையவனாக இருந்தான்.

“கடலில் கலம் முழுகவில்லையா?” என்று கேட்டான்.

“காற்றடித்தது உண்மை, மழை பொழிந்தது உண்மை; ஆடியது உண்மை; பிறகு என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியவில்லை; அது கரை வந்து சேர்ந்தது; கலக்கமில்லாமல் இருக்கிறோம்; உம் நிலைக்குத்தான் வருந்தி இருந்தோம்” என்றனர்.

“அதை ஏன் கேட்கிறாய்? கானல் அடுத்த சோலை ஒன்றில் கட்டுமரம் என்னைக் கரை சேர்த்தது; அங்கே கலுழவேகனின் கையாள் தரன் என்பவன் என்னை அழைத்துச் சென்றான்; வித்தியாதரர் நகரைக் கண்டேன். இந்த வீணையரசியை நம்மோடு அனுப்பி வைக்கிறார்கள்” எனறான்.

அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள், இராசமாபுரத்தில் ஒரு இசைவிழா நடக்கும் என்றும், அதில் அவள் பாட வருகிறாள் என்றும் நம்பிக்கையோடு இருந்தார்கள். நாடக நட்சத்திரங்களை நயந்து காண்பதுபோல் அவளிடம் அணுகிப் பழக விழைந்தனர்; அவள் அவர்களிடம் அதிகம் பேசாமல் நாண் உடை நங்கையாகச் சாண் நின்றே பழகினாள்.

மரக்கலம் ஏறி நிலக்களம் அனைவரும் அடைந்தனர்; அழகிய இள நங்கையோடு சீதத்தன் வந்து இறங்கியதும் புது நாடகம் வந்தது போல் மக்கள் அதைப் பற்றியே பேசத் தொடங்கினர். “சீதத்தன் அழகியைத் தட்டிக் கொண்டு வந்து விட்டான்; இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்தச் சிறுமை” என்று அவன் பெருமையைக் குறைத்துப் பேசினர். பதுமையின் காதினைக் கடித்தனர் சிலர்; அதனைக் கேட்டு அவள் துடிதுடித்துப் போனாள். அவர் அப்படிப்பட்டவர் அல்லர்” என்று சொல்லி அவர்களை அகற்றி வைத்தாள்; வந்தவுடன் வெடிகுண்டு வெடித்தது.

“பொட்டிட்டுத் தட்டுக்காட்டி உங்களை வரவேற்கட்டும்மா?” என்றாள்.

கையில் தட்டில் ஆலத்தியும் கர்ப்பூரமும் ஏந்தி வந்து நின்றாள்.

“அம்மா தாயே! வலது கால் வைத்து வாடி அம்மா” என்று வரவேற்பு அளித்தாள்.

தத்தைக்கு இந்த வித்தை எல்லாம் விளங்கவில்லை; புதிதாக வந்தால் இராசமாபுரத்தில் இப்படி வரவேற்பார்கள் என்று நினைத்தாள்.

“வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்பது போல் வரவேற்கிறாயே” என்று கேட்டான் சீதத்தன்.

“மணமக்களை வரவேற்கிறேன்; எனக்குத் துணை இல்லை என்று புதிதாக அழைத்து வந்திருக்கிறீர்கள். அதனால் வரவேற்கிறேன்; வயதில் குறைந்தவள்; வாலிப மங்கை, அவள் இனி எனக்குத் தங்கை” என்றாள்.

“தன் கையைக் கொண்டு தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டால் யாரும் தடுக்க முடியாது.”

“இவள் காந்தருவ நாட்டு மங்கை என் கை வெறுங்கை, நீ ஏறி இருப்பது முருங்கை, இவள் நம்மகள்”.

“மகளா? புது உறவாக இருக்கிறது”.

“பெண்ணொருத்தி பிறக்க வேண்டுமென்று நீ எண்ணி வந்தாயே! இனிமேல் பிறந்து இனிமேல் வளர்ந்து இனிமேல் எப்படி என்ன செய்ய முடியும்? கடையில் இவள் கிடைத்தாள்” என்றாள்.

“என்ன விளையாடுகிறீர் கடையில் வாங்கும் சரக்கா இவள், இவள் மிடுக்காக இருக்கிறாள்; எனக்குக் கடுக்காய் கொடுக்கிறீர்” என்று வெடுக்கெனப் பேசினாள்.

“கலுழவேகனின் மகள்; இவள் பெயர் காந்தருவ தத்தை அவளுக்கு மணமகன் ஒருவனைத் தேடி அவனை மாப்பிள்ளையாக்க வேண்டும், அதற்காகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”

“இவளுக்கு இடையே இல்லையே”

“நடை இருக்கிறது; அதனால் அவளுக்கு இடை இருக்கத்தான் வேண்டும்; படைப்பு அப்படி”


“எனக்கு மட்டும் ஏன் இந்தப் புடைப்பு: உரல் போன்ற இடுப்பு; இது உங்களுக்குப் பிடிப்பு” என்று கேட்டாள்.

“நீதான் என் இருப்பு; அதற்கு இல்லை மறுப்பு; அதை விடு. அவளை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான்.

“கண்டவர் பேசிய பேச்சு என்னை உண்மையைக் காணாதபடி செய்துவிட்டது; அவளை ஏற்பதில் எனக்கு இகழச்சி இல்லை; அதில் ஏற்படும் பெரும் புகழ்ச்சி, ஊரவர் மருள, அரசனும் இதற்கு அருள, அழகிய மணி மண்டபம் அமைத்துத் தண்ணிர்ப் பந்தல் வைப்போம்.”

“தண்ணிர்ப்பந்தல் எதற்கு?”

“தவறுதலாகச் சொல்லிவிட்டேன்; மனப்பந்தல் வைப்போம்; சுயம் வரத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம்”.

“அப்படியானால் இவள் யாரை விரும்புகிறாளோ அவளை அவள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று தானே பொருள்.”

“ஆமாம்; அப்படித்தான்.”

“அவள் கொடுத்து வைத்தவள்; அந்த மாதிரி என் தந்தை ஏற்பாடு செய்திருந்தால் உங்களைத் தேர்ந்து எடுத்திருக்க மாட்டேன்” என்றாள்.

“ஆமாம் அரசர்கள் வந்து வரிசையாக நின்று உன் மாலைக்குக் கழுத்தை நீட்டி இருப்பார்கள்.”

“வேடிக்கையாகச் சொல்கிறேன்; அப்பொழுதும் உங்களைத்தான் தேர்ந்து எடுத்திருப்பேன்” என்றாள்.

இருவரும் சிரித்தனர்.

“இவளை நம் வீட்டில் தங்க வைக்கலாம்.”

“வேண்டாம்; வயதுப் பெண்; வாய்க்கு வந்தபடி கதை கட்டுவார்கள். கன்னி மாடத்தில் விட்டு வையுங்கள் அவளும் சுதந்திரமாக இருக்கமுடியும்” என்றாள்.

“நீ சொல்வதும் உண்மைதான்; அவள் சுகமாகப் பாடிக் கொண்டிருப்பாள். நம் நித்திரை கெடும்; ஆட்கள் வேறு அதிகம்; இந்தக் கூட்டத்தை இங்கு வைத்துச் சமாளிக்கவும் முடியாது” என்றான்.

தத்தை கன்னிமாடத்தில் தங்க வைக்கப்பட்டாள். சீதத்தன் படுக்கச் சென்று ஒய்வு கொண்டான்.

பிரிந்தவர் கூடினர்; என்றாலும் பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது; மற்றைய கருமங்களைத் தம் ஆட்கள் கவனிக்கச் சென்றனர்; சீதத்தன் கட்டியங்காரனைப் பார்த்துவரச் சென்றான்; பெரியவர்களைப் பார்க்கும்போது வெறுங்கையோடு போக முடியாது; எதுவும் இல்லை என்றால் பச்சை எலுமிச்சம் பழமாவது கொண்டு போக வேண்டும் என்பதை அறிந்தவன்.

தீவில் இருந்து கொண்டு வந்த விலை மிக்க கற்களைக் கொண்ட அணிகலன்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவனுக்குக் காணிக்கையாக்கினான்.

“கடல் கடந்து வணிகம் செய்யச் சென்றேன்”.

“ஈட்டியது ?”

“மிகுதிதான்; அதைவிடக் காட்டத்தக்கது ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்.”

“எடுத்துக்காட்ட இயலுமா?”

“இல்லை; நம் நாட்டவர்க்ககு காட்ட ஒர் அழகியைக் கொண்டு வந்து இருக்கிறேன்.” “கணிகையாயின் எனக்கு அவளைக் காணிக்கை ஆக்கிவிடு” என்றான்.

“கலுழவேகனின் காரிகை அவள்; அவள் ஒரே மகள்: வித்தியாதர அரசனின் மகள்; அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்; வீணை நாயகி அவள்; அவளை வெல்பவனே அவளுக்கு வாழ்க்கை நாயகனாக முடியும்; இசைப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்; அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்.”

“அனுமதி என்ன வெகுமதி கூடத் தருகிறேன். இசை விழா ஒன்று நம் ஊர்மிசை நடந்தால் அது நமக்குத் தானே புகழ், பல தேசத்து மன்னர்கள் அவர்கள் இங்கு வந்து இசைப் போட்டியில் பங்கு பெறுவர்; பாடினால் அவர் அவர்களுக்குப் பரிசு, தோற்றால் அவர்கள் வெறும் தரிசு; தக்கபடி ஏற்பாடுகள் செய்க, அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி; நானும் பங்கு பெறுவேன்; எனக்கு அவள் கிடைப்பாள்; என்ன செய்வது? நான் முந்திப் பிறந்து விட்டேன்; வயது ஒத்து வராது; மேலும் இசைபாடக் கற்றிலேன், வசைபாடிப் பழகிய யான் எப்படி இசைபாட முடியும்; மற்றும் அவள் எனக்கு இசையாள்; கலுழவேகன் மாபெரும் மன்னன்; படை வலிமிக்கவன்; அவனை நட்பில் கொண்டால் அதைவிடப் பெட்பு வேறு இருக்கமுடியாது; தக்க சமயத்தில் அவன் நமக்குப் பயன்படுவான்; இந்த ஊரில் பெண்ணைக் கொடுத்து விட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவான்; அதனால் நமக்குப் பெருமைதானே! அறிவிப்புத் தாளில் என் தலைமை என்பதைத் தவறாமல் பொறித்து வை; இந்த ஊரில் முத்தமிழ் மன்றங்கள் இருக்கின்றன. அதில் நற்றமிழ் பேசப்படுகிறது. அதற்குக் கூட்டமே வருவது இல்லை. இசையவர் பாடல் பாடி மகிழ்விக்கவும், ஆடல் நங்கையர் ஆடிக் காட்டவும் அழகிய மாமணி மண்டபம் இல்லை, அந்தக் குறையும் தீர்ந்துவிடும். காந்தருவதத்தை பாடுகிறாள் என்றால் கூட்டம் இடம் கொள்ளாது. அரசர்கள் ஒரு புறம்: வணிகர்கள் ஒருபுறம், வீரர்கள் ஒரு புறம்; மங்கையர் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம், பின்னணிப் பாடகர் முன்புறம்; இப்படித் தக்க ஏற்பாடுகள் செய்துவிடு. எனக்கு நடு இடம் ஒதுக்கிவிடு; கட்டாயம் வந்துவிடுகிறேன்”

“அவளுக்குக் கண்ட இடத்தில் வெட்டுஅட்டைகள் வைத்து விளம்பரம் செய்யுங்கள்; நான் கையெடுத்துக் கும்பிடுவது போல் எனக்கும் இந்த அட்டைப் படங்களை அமையுங்கள்; வரவேற்பதுபோல இருக்கும்” என்றான்.

“மறுபடியும் வந்து உங்களை அழைக்கிறோம்” என்றான் சீதத்தன்.

“பொறுப்புகள் என்றால் தட்டிக்கழித்து விடுவேன்; இசை விருப்புகள் என்றால் தவறாமல் வந்துவிடுவேன். நம் இசை மண்டபத்தில் முதுமைகளை வைத்து ஆடவைக்காதீர்கள். பதுமைகளை வைக்கவேண்டிய இடம் அது. இசை, பாட்டு, நடனம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. உருப்படியாக நல்ல உருப்படிகளை அழைத்து விழாக்களை அமைக்கவும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

“தத்தை எப்படிப் பாடினாலும் அத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பெருங்குடி மக்கள் எல்லாம் முன் வரிசையில் வந்து அமரட்டும்; தலைப்பாகை உள்ளவர்களுக்கு முதலிடம் தரவும்; தலை காய்ந்தவர்களை எல்லாம் பின்னால் தள்ளி விடுங்கள்”.

“சிவந்த இதழை உடைய சீமாட்டிகளுக்கு முன்னிடம் தந்துவிடு; அவர்கள் தோளில் அழகுப் பை தொங்கவிட்டுக் கொண்டு வருவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள். செட்டி விட்டுப் பெண்கள் செட்டாக நககைகள் போட்டுக் கொண்டு வருவார்கள்; அவர்களை மிகவும் கெளரவமான இடத்தில் அமரவையுங்கள், சரிகை வேட்டி தலைப்பாகைகள் பணம்படைத்தமைக்கு அடையாளங்கள்; அவர்களை எனக்குப் பின்னால் அமரச் செய்யுங்கள்; அரச குமாரர்கள் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்; அவர்களுக்கு என்று ஒரு தனியிடம் விட்டு வையுங்கள்; இசை வல்லவர்கள் நாட்டியக்காரர்கள் அவர்கள் எங்கு உட்கார வைத்தாலும் கவலைப்பட மாட்டார்கள்; நிச்சயம் அந்த மேடையில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் புகையிலை வெற்றிலை வாங்கி வையுங்கள்; மென்று கொண்டே குதப்புவார்கள்; வெளியிலே அங்காடி வைக்க இடம் ஒதுக்கி வையுங்கள்; வெளி ஊர்க்காரர்கள் தங்குவதற்கு விடுதிகளைக் கட்டி வையுங்கள்; சோலை உலாவுதற்கு வசதிகள் செய்து வையுங்கள்; இராசமாபுரத்துப் பேரழகு கண்டு அவர்கள் பேசிக் கொண்டே செல்ல வேண்டும்.”

இவ்வாறு அடுக்கிக் கொண்டே சென்றான். எப்படியும் இந்த விழா நடத்துவதற்கு இடம் கொடுத்ததே பெரிது எனச் சீதத்தன் பெருமகிழ்வு கொண்டான். கொண்டு வந்த பொருளில் பெரும்பங்கை மண்டபம் கட்டுவதற்கும், வசதிகள் செய்து தருவதற்கும் வாரி இறைத்தான். யானைகளில் செய்தி அறிவிப்போரை ஏற்றிப் பறை அறிவித்துச் செய்தி செப்பினான். அரசன் கட்ட யங்காரன் பல நாட்டு அரசர்களுக்கும் ஆளை அனுப்பி ஒலை போக்கினான்.

பெண்டிரும் ஆண்மை விரும்பிப் பேதுறும் பேரழகியை யாழிசையில் வென்று மணக்க விரும்புபவர் வருக! இவ்விழாவிற்கு வருகை தருக! என்று செய்தி செப்பினர். போட்டியில் பங்கு கொள்ள வந்தவர் சிலரே எனினும் பாடியதைக் கண்டு மகிழ வந்தவரே மிகுதியாயினர். தேனை மொய்க்கும் வண்டு என மாந்தர் வந்து மொய்த்தனர்.

மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தில் மின்னின் இடையும் அன்ன நடையும் உடைய தத்தை வந்து சேர்ந்தாள்; அவளுக்கு நெருங்கிய தோழி வீணாபதி முதற்கண் அவைக்கு வந்து திரையை விலக்கி முன் வந்து நின்றாள்.

நாடகங்களில் கட்டியங்காரன் ஒருவன் வந்து நடக்க இருப்பவற்றை நகைச் சுவைபடப் பேசுவான். அதுபோல இந்த நகையாளி அங்கு வந்து நின்றாள். அழகி என்றாலே வாய் திறக்கும் வாலிபர்கள் முதல் காட்சியே முழுக்காட்சியாகக் கண்டு மகிழ்ந்தனர். அவள் வேண்டுமென்றே அவை யோரை மயக்கும் வகையில் புன்முறுவல் காட்டி நின்றாள். அவள் சிரிப்பே காமவலையின் விரிப்பாக இருந்தது.

ஒருவன் சொல்கிறான் “இவள் தோளைப் பார்த்தீர்களா ! இவை மூங்கில்கள்” என்றான்.

மற்றொருவன் சொன்னான் “அவள் துணைப் புருவங்கள் வில்லே” என்றான்.

இன்னொருவன் பேசினான் “வாயே கடலில் விளையும் பவளம்” என்றான்; இன்னொருவன் கூறினான். “மேனி மாந்தளிர்” என்றான்.

மற்றொருவன் புதிய கண்டுபிடிப்பாகச் சொன்னான். “எல்லாம் இருக்கிறது. ஆனால் தனம் இல்லாத வறுமையைப் பாருங்கள். குத்தி முனைத்திருக்க வேண்டிய இடம். அங்குச் சுத்தமாக இருக்கிறது. இதைப்பத்தி என்ன சொல்லுகிறீர்கள்” என்றான்.

“தழை சுமப்பது பிழை என்று விட்டுவிட்டாளா என்ன” என்று ஒருவன் கிண்டல் செய்தான்.

கவிஞன் ஒருவன் முன்னால் இருந்தான் “இது அச்சுப் பிழை” என்றான்.

“விளங்கவில்லை” என்றான் அவன் நண்பன்.

“பிரமன் படைப்பில் நேர்ந்த அச்சுப் பிழை” என்றான்.

“அவசரப்பட்டுப் பிறந்து விட்டாள்” என்றான் மற்றொரு நண்பன்.

“காகிதப்பூ பார்க்கலாம்; முகர முடியாது” என்றான் அந்தக் கவிஞனின் நண்பன். அவர்கள் அவளைக் கண்டு சிரிக்க இவ்வாறு பேசினார்கள்; அவர்கள் வயிறு வெடிக்க அவள் மேடை மீது இருந்து பதில் சொன்னாள்.

“என்னைப் படைத்த போது எமன் வந்து கேட்டுக் கொண்டான். “முற்றிய வடிவில் வெளியே அனுப்பாதே கற்றவர்கள் கூடக் கருத்து அழிந்து உயிர் இழப்பர்; எனக்கு வேலையே இல்லாமல் போய்விடும்” என்று முறையிட்டான்”

“அதனால் பிரமன் கொம்பு மழுங்கிய யானையாக என்னை அனுப்பிவிட்டான். என்னால் யாருக்கும் எந்த வம்பும் இல்லை” என்றாள்.

இதைக் கேட்டு அவையே சிரிப்பில் ஆழ்ந்தது. “காந்தருவத்தையோடு வந்த தோழி வீணாபதி பேடிப் பெண்” என்று பேசி அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

அவளைத் தொடர்ந்து தவள மேனியை உடைய தத்தை மேடைக்கு வந்தாள்; இமை கொட்டாது அவளையே பார்த்து அவள் அழகில் ஆழ்ந்தனர்; “அவள் பாடவே வேண்டாம்; பாடினால் மேடையை விட்டு உள்ளே போய் விடுவாள்” என்று அஞ்சினர். ஒவ்வொரு வினாடியும் அவளைப் பார்ப்பதில் கழித்தனர்; பாவையே அன்ன அவளைக் கண்டு அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப அவளை நயந்தனர்; மகளிர் அவள் உடுத்தியிருந்த சேலை, அணிந்திருந்த கலன்கள், கூந்தல் முடிப்பு, இதழ்ச் சிவப்பு இப்படித் தனித்தனியே கூறுபடுத்திப் பேசினர். காளையர் அவள் தந்த வளர்ச்சியில் வந்த கிளர்ச்சியைப் பேசினர். குழந்தைகள் அவர்கள் பழகிய பொம்மையைப் போல அந்த அம்மை இருப்பதாகப் பேசிச் சிரித்தனர்; கலைஞர்கள் அவள் வாயசைவை எதிர் பார்த்தனர்; ரசிகர்கள் பாட்டொலி கேட்கச் செவிகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டனர்.

இசை இலக்கணம் சிறிதும் தவறாது குரலில் எந்தவிதக் கோளாறும் இன்றிக் கோயில் மணியில் ஒலிக்கும் நாதம் போல் கணிர் என்று பாட்டிசை கிளம்பியது; புருவம் நிமிரவில்லை; விழிகள் பிறழவில்லை; மிடறு வீங்கவில்லை; பற்கள் வெளியே காட்டவில்லை; அங்க அசைவுகள் இன்றிப் பாடல்கள் தங்கு தடையின்றி வெளிவந்தன; அவள் மீட்டிய வீணையின் நாதத்துக்கும் வாயில் இருந்து வெளிவந்த கீதத்துக்கும் அவர்களால் வேறுபாடு காண முடியவில்லை. “வாய் திறந்து இவள் பாடினாளோ நரம்பொடு வீணைதான் நாவில் நவின்றதோ” என்று வியந்து பாராட்டினர்.

ஆயிழையாகிய தத்தை பாடியபோது இசையை விரும்பும் பறவைகள் ஆகிய கின்னரம் எங்கிருந்தோ ஓடிவந்து அந்த அரங்கில் புகுந்தன; மற்றவர்கள் பாடிய போது பறையொலி கேட்ட அசுணம்போல் அவை பதை பதைத்து வெளியேறின. அரசர்கள் தோற்றனர்; அவர்களை அடுத்து அந்தணர்கள் தோற்றனர்; அதற்குப்பின் வணிகர்கள் தோற்றனர். சாதி அடிப்படையில் பாடகர்கள் வரிசைப் படுத்தப்பட்டனர். சூறைக்காற்றுக்கு ஆற்றாது தலைசாய்ந்து கரிந்த தாமரைகள் போன்று அவர்கள் சாம்பினர்; இந்த இசை விழா ஆறு நாட்கள் நடந்தன. வீறுகொண்டு அவளை வெல்லத் தக்க இளைஞர்ஏறு யாரும் முன்வரவில்லை.

சீதத்தன் செய்வது அறியாது திகைத்தான்; பதுமையும் மனம் கலங்கினாள். “அவளைக் கொத்திக்கொண்டு போக எந்தத் தத்திப் பையலும் வரவில்லை” என்று அவள் கவலைப் பட்டாள். விழாவிற்குத் தலைமை தாங்கிய கட்டியங்காரனும் நிலைமை அறிந்து வருந்தினான். “இவளைக் கட்டிக்கொண்டு போக எந்தத் தறுதலையும் கிடைக்க மாட்டான்” என்று உறுதியாக முடிவு செய்துவிட்டான். “மற்றும் ஒருநாள் பார்ப்பது. இல்லை என்றால் மூட்டை கட்டி அவளை அவள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது” என்ற முடிவுக்கு வந்தான். “விலை போகாத பண்டத்தை ஏலமா போட முடியும். போட்டிகள் வைக்காமல் யாராவது ஒருவன் அவளுக்கு மாலையிடலாம் என்று சொல்லலாம்” என்று எண்ணிப்பார்த்தான். அப்படிச் சொன்னால் “இந்த முட்டாள் பயல்கள் எல்லாம் அங்கேயே வெட்டிக் கொண்டு மடிவார்கள்” என்று அதைக் கைவிட்டான்.

“சீதத்தன் ஒரு மடையன், வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்துவிட்டான்; அந்தக்கொடி படர்தற்கு ஏற்ற கொம்பன் யார் வரப்போகிறான்” என்று பேசிக் கொண்டார்கள். “கணித்துச் சொல்லியவன் துணிந்து சொல்லியது தவறாது” என்ற நம்பிக்கை தத்தைக்கு இருந்தது. வந்திருந்த சொத்தைகளைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அரச குடும்பத்திலே இருந்தே பரிசுப் பொருளுக்கு உரியவன் வரவேண்டும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. பாஞ்சாலியின் கதை அவள் அறிந்ததே, மாபெரும் மன்னர்கள் கூடியிருந்த மண்டபத்தில் திரிபன்றியை எய்து வீழ்த்தக் கூடிய ஒரு வீரன் மன்னர் கூட்டத்தில் இருந்து வரவில்லை. அந்தணர் வேடத்தில் ஒரு அருச்சுனன் வராமல் போகமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

நாட்டு மக்கள் கட்டியங்காரனை வெறுத்தனர்: ஆட்சி ஒழுங்காக இருந்தால்தான் கலைகள் வளரும் மக்கள் அமைதியான வாழ்வு பெற்றிருந்தால்தான் அவர்கள் இசையை நாடுவர்; கொடுங்கோல் மன்னன் குடியிருப்பில் கடுங்கண் உடைய புலி கூட வாழ விரும்பாது. முற்றுப் பெறாத கதையாகி விடுமோ என்று வாசகர்கள் அஞ்சினார்கள். இது நாட்டுக்கே அவமானம் என்று கருதினர்.

இந்தச் செய்தி சீவகனுக்கு எட்டியது; காந்தருவ தத்தையை மணக்க வேண்டும் என்ற வேட்கை தோன்ற வில்லை. அந்நிய நாட்டில் இருந்துவந்த ஒருத்தி தன்னிகர் அற்றவள் என்று தருக்கி நடந்து செல்வதை அவன் மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டான்.

அதனால் தான் போட்டியில் பங்கு கொள்வது என்று முடிவு செய்தான். என்றாலும் அவன் தந்தை அவையில் முந்திக்கொண்டு உட்கார்ந்திருப்பதை அறிந்து மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்க அறிவும், திறமையும் மிக்க செயலும் உடைய புத்திசேனனை அவர் அனுமதி கேட்டு அறிந்துவர அனுப்பினான்.

கந்துக்கடனுக்குத் தன் மகனைப் பற்றி ஒரளவு தெரியும். கணிகையர் நடத்தும்ஆடல் அரங்குகளுக்கு அவன் சென்று வருவது அவன் அறிந்தது. முருங்கை முற்றினால் அது கடைக்கு வந்துதான் தீரும்; வயது முற்றியவன் அவன் காமக் களியாட்டங்களுக்குத் தன்னை ஈடுபடுத்தக் கூடும். அது தவிர்க்கப்பெற வேண்டுமானால் தத்தையைப் போல் அறிவுமிக்க அழகியை மணப்பது தக்கது என்று முடிவு செய்தான். அதனால் அவன் மறுப்புச் சொல்ல முன் வரவில்லை. என்றாலும் இந்தமாதிரி சூழ்நிலைகளில் அவன் தற்காப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்தான்.

“அரசமகன் அழகி ஒருத்தியை மணக்கிறான் என்றால் மற்றைய சாதிக்காரர்கள் அடங்கிக் கிடப்பார்கள்: ஏனைய மன்னர்கள் வாய்மூடிக்கொண்டு அது தக்கது என்று கூறி வாழ்த்திவிட்டு வழி பார்த்துக்கொண்டு போவார்கள். வணிக மகன் ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் அவர்கள் வாயைப் பிளப்பார்கள். கீழ்ச்சாதிக்காரன் மேல் சாதிப் பெண்ணை மணப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதுமட்டுமல்ல; கட்டியங்காரன் விட்டுக் கொடுக்க மாட்டான்” என்று யோசித்தான்.

நாகமாலை என்ற கணிகை ஒலை எழுதி அவனுக்கு இச்செய்தி தெரிவித்தாள்.

“சீவகன் அநங்கமாலையைத் தொட்டு அவளோடு தொடர்பு கொண்டான். வண்ணப்பொடிகளை வகையாக எப்படிப் பூசுவது என்பதை அறிந்தவன். அவள் நாட்டிய அரங்கு ஏறும் முன் அவளுக்கு வண்ணம்பூசி அவள் எண்ணத்தைத் துாண்டி இருக்கிறான்; ஒப்பனை செய்வதில் அவன் கற்பனை அதீதமானது. அவனை எப்படியாவது அடைவது என்று ஆசையை அவள் வளர்த்துக் கொண்டாள்”.

“இதனை அறிந்த கட்டியங்காரன் அநங்க மாலையைக் கண்டித்துப் பார்த்தான். தன் இச்சைகளுக்கு அவள் இணங்க மறுத்தபோது பச்சையாக அவளை இழுத்து வந்து கொச்சைப்படுத்தினான். அவள் நிச்சயம் தான் ஒரு நாளைக்குச் சீவகனை அடைவது உறுதி என்று வாய்விட்டுக் கதறினாள். அதனால் அவன் அவளைக் குதறினான். அவன் உள்ளத்தில் சீவகன்பால் தீராப்பகை கொண்டிருக்கிறான் என்பதை நாகமாலை அறியும் ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. கட்டியங்காரன் நாகமாலையின் படுக்கை அறைக்கு வந்தபோது அவன் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் வெளிப்படுத்தினான். “சீவகனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்” என்று அவளிடம் சூள் உரைத்து இருக்கிறான். அதனால் இங்கே வரும்போது சீவகன் தக்க பாதுகாப்போடு வரவேண்டும்” என்று ஒலையில் எழுதி அனுப்பினாள். அவள் தோழி ஒருத்தி அதைக் கொண்டுவந்து கந்துக்கடனிடம் தந்தாள்.

செய்தி கேட்ட சீவகன் “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது; அந்த ஒநாய் நம்மை ஒன்றும் செய்யாது; அஞ்சவேண்டியதில்லை” என்று அறிவித்து அனுப்பினான்.

சீவகன் அவைக்கு வந்ததும் அரங்கமே களைகட்டியது; கட்டியங்காரன் பார்த்தான்; வியர்த்தான்; “இந்த முரட்டுக்காளை இங்கே ஏன் வந்தது? அவளை இவன் தட்டிக் கொண்டு போகக்கூடும்” என்று அஞ்சினான்; அவையைக் கலைத்துவிடலாம் என்றும் சிந்தித்தான்; இருந்தாலும் அவனுக்கு ஒரு நம்பிக்கை இவனால் அவளை இசையில் வெல்லமுடியாது என்று. “அரசர்கள் எல்லாம் கடையைக் கட்டிவிட்டுப் போய் விட்டார்கள்: வணிகமகன்; இவனுக்குக் கூட்டல் கழித்தல் தெரியுமே அன்றி வகுத்தல் பெருக்கல் எப்படித் தெரியும்? இசையை இவன் எப்படி எங்கே சுற்றிருக்க முடியும்? அப்படி இசையில் வல்லவனாக இருந்திருந்தால் அநங்கமாலையின் நாட்டியத்தின்போது தன் பாட்டியல் கலையைக் காட்டி இருக்கலாமே” என்று அவன் அசதியாக அமர்ந்திருந்தான்.

காமனை ஒத்த கட்டிளங் காளையாகிய சீவகனைக் கண்ட காரிகையர் காந்தருவதத்தையைக் கடிந்து கொண்டனர்.

“கொடுத்து வைக்காதவள்; கெடுத்துக் கொண்டாள்; இசைப்போட்டியில் அவன் வெல்லாவிட்டால் அவள் அவனை இழப்பது உறுதி, அவள் தனக்குத் தானே வேலி போட்டுக் கொண்டாள்” என்று பேசியவர் பலர்.

“வெற்றி தோல்வி அவளிடத்தில் தானே இருக்கிறது; அவள் விட்டுக் கொடுத்தாலும் விட்டுக் கொடுப்பாள்; இசையில் தோற்றால் அவள் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள்” என்று ஒரு சிலர் தம் கருத்தை வெளிப்படுத்தினர்.

மேடையில் இருந்த இசைவாணி காந்தருவ தத்தை இவ் இளைஞனைப் பார்த்து அவன் அழகில் மயங்கினாள். இசையில் தான் வென்று விட்டால் என்ன செய்வது என்று அஞ்சினாள். வேண்டுமென்றே தோற்று அவனை அடையும் கீழ்மைக்கு அவள் செல்லத் துணிய வில்லை. அது அவள் பெருமைக்கு இழுக்கு இசையில் தன் புகழை நிலை நாட்டுவதில் இருந்து அவள் பின்வாங்க விரும்பவில்லை. அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்ள விழையவில்லை. விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்வதாகும்” என்று முடிவு செய்தாள். விதியின் விரல்கள் எப்படி எழுதுகிறதோ அதன்படி நடப்பது என்று உறுதி கொண்டாள்.

அவளுக்கு வீணாபதியின் மேல் அடக்க முடியாத கோபம். வீணாபதி என்ற பெயருக்கு ஏற்ப அவள் காலத்தை வீண்படுத்துகிறாள் என்று நினைத்தாள். “இனி பொறுப்பதில்லை” என்று எரிந்து விழுந்தாள்.

“யாழ் எடுத்துக் கொடு” என்றாள்.

பாழ்பட்ட அவள் அவசரத்தை அறியவில்லை; விதி முறைப்படி அவன் இசைப் புலமையை அறியத் தேர்வுகள் வைத்தாள்; அவன் இசைஞானி என்பதை வசையற உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உயர் சிந்தனையும் அவளுக்கு இருந்திருக்கலாம். அவன் முறைப்படி யாழ் மீட்டினால் மட்டும் போதாது; அதன் அமைப்புகளையும் அவன் காட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தினாள். பல் வகை யாழ்க் கருவிகளை ஒன்றன்பின் ஒன்று எடுத்து முன் வைத்தாள்.

“இந்த யாழ் அறிவற்றவர்களைப்போல மெல்லிதாக இருக்கிறது” என்று கூறினான்.

மற்றொன்று வைத்தாள். “இது அழுகல், அழுமூஞ்சிகளைப் போன்றது. இது” என்றான். மற்றொன்று வைத்தாள்.

“இது வடுப்பட்டது; சான்றோர்கள் தம் சால்பு குன்றியது போன்றது” என்றான். மற்றொன்று காட்டினாள். “கரிந்தது; இடிபட்டு முறிபட்டது” என்றான்.

இப்படி வைத்ததற்கு எல்லாம் ஏதாவது குறை காட்டிக் கழித்தான்.

புடவைக் கடையில் பெண்கள் ஒதுக்குவது போல் ஒவ்வொன்றாக ஒதுக்கி வைத்தான்.

ஒரு யாழ் தத்தையைத் தொடுவதுபோல் இருந்தது அவனுக்கு, “நங்கையின் நலத்தது” என்றான். இதைக் கேட்டதும் தத்தையின் உள்ளம் குளிர்ந்தது. யாழுக்குத் தன்னை உவமித்து மதிக்கிறான் என்று கொண்டாள்.

நங்கை என்று தன்னைச் சொன்னானா பொதுவாக ஒரு மங்கையக் குறித்தானா என்று தடுமாறினாள்; என்றாலும் அவன் ரசனையை மதித்தாள்.

மகளிரை மதிக்கும் மாண்பு அவனிடம் உள்ளது என்று அறிந்தாள்.

மூக்கு மட்டும் சற்று எடுப்பாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதுபோல் அவ் யாழின் நரம்பில் மயிர் ஒன்று சிக்கிக் கிடப்பதை எடுத்துக் காட்டினான். அருகில் இருந்த தன் தம்பி நபுலனிடமிருந்து புதிய நரம்பைவாங்கி அதில் மாட்டினான். அவன் இசை ஞானம் அறிந்தவன் என்பதை இச் செயல் எடுத்துக் காட்டியது.

யாழ் எடுத்து இசை கூட்டினான். காதற் பாட்டுப் பாடுவது என்று தொடங்கினான். அதுவே அவள் நெஞ்சைத் தொடும் என்பதை அறிந்தான். பெரியவர்கள் தெய்வீகப் பாடல்களை விரும்பலாம்; இளைஞர்கள் காதற் பாட்டைத் தான் விரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தவன், பிரிவால் வாடும் காதலியின் நெஞ்சைச் சித்திரித்து அவள் நெஞ்சம் நெகிழப் பாடினான்.

கூட்டத்திலிருந்து கைதட்டல் கிளம்பியது. இவன் இசையில் இளவரசன் என்று புகழ்ந்தனர். இளையராஜா வாழ்க என்று வாழ்த்தினர்.

அடுத்து அவள் பாடும் முறை வந்தது. அவளும் அவனுக்கு நிகராக இளவேனிற்பருவம் குறித்துப் பாடினாள். அவன் பாடல் கார் காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்திரித்தது. அது பிரிவைக் காட்டியது இவள் பாடல் இளவேனிற் பருவத்தில் கூடி மகிழும் இனிய காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒசையை விட்டுப் பொருளில் ஆழ்ந்தாள்.

அவள் மனம் சிதைந்தது; ஒரு முகமாக அவளால் மனத்தை நிறுத்த முடியவில்லை; காதல் உணர்வு மிக்கு அவளை அலைக் கழித்தது; நாணம் அவளைக் கை விட்டது; நிறை கரை புரண்டது; யாழை நெகிழ்ந்து கீழே விட்டாள், அவன் தோளில் சாய்ந்து தன் வசம் இழந்தாள். ஊடலில் தோற்பவர் கூடலில் வெற்றி பெறுவது போல இசையில் தோற்றவள் காதலில் வெற்றி பெற்றாள்.

பட்டுப் போன்ற அவள் மேனி தன் தோள்களில் பட்டதும் அவனுக்கு ஒரு புது வகைக் கிளர்ச்சி ஏற்பட்டது. போரில் தினவு கண்ட அவன் தோள்கள் காதலில் விறு விறுப்பைக் கண்டது. அவளைக் கட்டி அணைக்க அவன் தோள்களுக்கு ஆணையிட்டான்.

ஆரவாரம் வானை எட்டியது; பெண்கள் தாமே அவனை அடைந்தது போன்று பெருமகிழ்ச்சி காட்டினர். நம்பியை அடைய அவள் தவம் செய்தவள் என்று பாராட்டினர். மன்மதனையும் ரதியையும் அவர்கள் நேரில் கண்டது போன்று மகிழ்ந்தனர். சிறு கீறலும் படாத கனியை அவன் பெற்றான் என்று மூரல் கொண்ட மகளிர் பேசினர். அவன் தோள்கள் இதுவரை எந்தக் கன்னியையும் தோய்ந்ததில்லை என்றனர், கோவிந்தையை அவள் தந்தை மணக்க வற்புறுத்தினார். அவன் மறுத்துவிட்டதும் நல்லதாகப் போயிற்று. ஆக்கப் பொறுத்தவன் ஆளப் பொறுத்தான்; ஆய மகள் அவள் பால்மணம் மாறாதவள் என்பதால் அவன் விரும்பவில்லை; அவளைப் பற்றி அவள் தந்தை எப்படி அறிமுகம் செய்தார் தெரியுமா?”

“வெண்ணெய் போல் தொட இனிமையானவள், பால் போல் இனிய சொல்லினள்; பசும் நெய் போல் மேனியை உடையவள் என்று அறிமுகம் செய்தார்.

“இப்பொழுது இவளைப் பிடித்தது எதிர்பாராத ஒன்று; இவள் தந்தை செல்வச் சிறப்பும் ஆட்சி உயர்வும் பெற்ற மாமன்னன்; அவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் கொடுப்பான்; மந்திர சக்தி வாய்ந்தவன்; படைபலம் மிக்கவன்; எதையும் அவன் துணையால் சாதிக்க முடியும்; மாமனார் வீடு பெரிய இடம்; எந்தக் குறையும் இல்லை; பெண்ணும் கற்றவள்; இசையில் வல்லவள்; அறிவு நிரம்பியவள், பொறுமை மிக்கவள்; கருவம் என்பது சிறிதளவும் இல்லாதவள்; அவன் இனி எத்தனை பேரை மணந்தாலும் இவளுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது; அந்த மாதிரிப்பெண் இந்தப் பக்கம் கிடைக்காது” என்று பாராட்டிப் பேசினார்கள்.

“அவள் ஒழுங்காகக் குடும்பம் நடத்த வேண்டுமே.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“கந்தருவப் பெண்கள் இவனைவிடப் பேரழகர்கள் கிடைத்தால் அவர்கள் பின்னால் போய்விடுவார்களே”

“இவனைவிட மேலானவர் யாரும் கிடைக்க மாட்டார்கள், மன்மதனே வந்தாலும் இவனிடம் அழகில் மண்டி இட வேண்டியது தான். முருகனைப் போன்ற அழகும் வீரமும் படைத்தவன்; அவனை விட்டு எந்தப் பெண்ணும் பிரியமாட்டாள்” என்று இந்த மணத்தைப் பற்றிப் பல கோணங்களிலும் விமர்சித்தனர்.

நிலவின் ஒளி கட்டியங்காரனைச் சுட்டு எரித்தது; அதனால் அவனிடம் புகை கிளம்பியது.

“எங்கே வந்தாலும் இந்த இளைஞன் போட்டிக்கு வந்து விடுகிறான்; எந்த அழகியும் இவனை விட்டு வைக்க மாட்டாள் போல் இருக்கிறது. அநங்கமாலையை என்னிடமிருந்து நீக்கியவன் இவளோடு இவன் வாழக் கூடாது” என்று அழுங்கினான்; மனம் புழுங்கினான்.

அங்கு வந்திருந்த அரச குமாரர்களைத் துண்டி விடுவது என்று திட்டமிட்டான்; அவர்களும் அவள் கிடைக்க வில்லையே என்று வெந்து கொண்டிருந்தனர். “மனோன்மணிய நாடகத்தில் சீவக வழுதி படை வீரர்களை நோக்கி நாட்டுப் பற்றை ஊட்டிச் சொற் பெருக்கை நிகழ்த்தியது போல இவன் அவர்களை விளித்து அவர்கள் மானத்தைத் துரண்டி விட்டான். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் வழக்குத் தொடுப்பது போல் இவன் புதிய வழக்கைக் கிளப்பினான்.

“அடிப்படையில் இந்தப் போட்டி நியாயமற்றது; பாட்டுப்பாடுகின்றவனுக்குத் தான் ஒரு பெண் உரிமை என்றால் பாகவதர்கள் எல்லாம் அரச குமாரிகளை அடை வதற்கு ஆர்வம் காட்டுவர்; மன்னவன் மகள் மாற்றாள் ஒருவனுக்குப் போவதை உங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது; இது மன்னர் மரபுக்கே ஒரு அறை கூவல் ஆகிறது.”

“வரலாறு காணாத நிகழ்ச்சி இது. இராமன் சீதையை மணந்தான் என்றால் அவன் வில்லை வளைத்த பின் அவளை வளைத்தான்; அருச்சுனன் இலக்கை வீழ்த்தி விட்டே தன் இலக்கை அடைந்தான்; நளன் காதலித்தவளுக்குத் தன் கழுத்தை வளைந்து கொடுத்தான். சுயம்வரம் என்றால் வீரம் அல்லது காதல் அடிப்படையில் இருக்க வேண்டும்; பாட்டுப்பாடினான்; அதற்காக அவளை அவன் மாலை இடுவது மரபுக்கு ஒவ்வாது.”

“முதலில் அவனை வென்று தொலைத்து விடுங்கள். பின் நீங்கள் என்ன செய்வது என்று யோசித்து முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது ஆள் அவனை முதலில் தூக்கி எறியுங்கள்; அதற்குப்பின் இங்கேயே ஒரு களம் அமைத்துத் தருகிறேன்; நீங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வலிமை மிக்கவன் அவளை அடையலாம். வலிமையே வெல்லும் என்பது வாழ்க்கை நியதி, சிறிய மீனைப் பெரியமீன் விழுங்குகிறது; மானைப் புலிவேட்டை யாடுகிறது; தொழிலாளியை முதலாளி ஏய்க்கிறான். எளியோரை வலியார் வாட்டுவதுதான் உலக முறை நியதி முதலில் செயலில் இறங்குங்கள்.”

“இவனை எப்படி எதிர்ப்பது என்று யோசனை செய்கிறீர்களா, இவன் தனியாள்; நண்பர் உறவினர் யாரும் இல்லை; அவர்கள் எல்லாம் வாணிபத் தொழிலினர். சண்டை என்றால் அவர்கள் அங்கே மண்டை உடையும் என்று அஞ்சுவார்கள். அவர்கள் சிகப்பு மையைக் கண்டால் கூட சிப்பாய் என்று அஞ்சும் பீப்பாய்கள். இவனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; யாழ் எடுத்து மீட்டும் கை அவனது, வில் எடுத்து விறல் காட்டத் தெரியாதவன். விழித்து எழுங்கள்; அழித்து ஒழியுங்கள்” என்று வீரவசனம் பேசினான்.

அவர்களுக்கே நயப்பாசை தோன்றியது; இந்த அற்பப் பையலை ஒழித்து விட்டால் அவள் நமக்குக் கிடைப்பாள் என்ற சொற்ப ஆசை அவர்களைத் துாண்டியது. அவரவர்கள் கத்தியும் சுத்தியும் எடுத்துக்கொண்டு சீவகனை வளைத்தனர். மறைந்திருந்த அவன் தம்பியரும் தோழர்களும் படைகளோடு வந்து அவனுக்கு அரணாக நின்றனர்; முரண்பட்டவர்கள் அத்தனை பேரும் அரண் தேடி நான்கு திசையும் ஓடினர்.

இசை மண்டபமே மணமண்டபம் ஆகியது. மன்னர் கூட்டம் ஒட்டம் பிடித்தது. நகரமாந்தர் இருந்து மண விழாவினை நடத்தித் தந்தனர்.

காந்தருவ தத்தையை மணந்த அவன் அவள் காந்த சக்தியால் இழுக்கப்பட்டவன் ஆனான். அவள் அதீதமான அறிவுடையவள் என்பதை அறிந்தான்; அவள் புற அழகில் மயங்குவதைவிட அவள் அறிவு ஆற்றலில் தன்னைப் பறி கொடுத்தான். யாழும் வாய்ப்பாட்டும் இணைந்து இனிமை ஊட்டுவது போல அவ்விருவரும் இணைந்து இன்பம் பெற்றனர். அவள் யாழ் ஆனாள், அதை மீட்டும் வில்லாக அவன் செயல்பட்டான். செய்தி அறிந்த கலுழவேகன் சீர்கள் அனுப்பி அவன் தன் வாழ்த்தினைத் தெரிவித்தான்.

எங்கோ வடபுலத்து இட்ட கயிறு கடலில் அடித்துக் கொண்டு தென்புலத்துக்கு வந்து ஒரு நுகத்தடியின் துளையில் தானாக வந்து அகப்பட்டுக் கொள்வதைப் போல வட புலத்திலிருந்து வந்த நங்கை சீவகனை மணாளனாகப் பெற்றாள். அவனும் அந்தக் காதல் கலப்பை வியந்து பாராட்டினான்.

“உன்னுடைய தாயும் தந்தையும் யான் முன் அறிந்ததில்லை; நீயும் இதற்கு முன் யார் என்று தெரியாது; வானத்திலிருந்து பொழியும் நீர் வையகத்தில் விழும் போது செம்மண்ணோடு அது கலக்கிறது அதற்குப் பிறகு அதைப் பிரித்துக் காண முடியாது. அது போல நம் நெஞ்சம் தாமே கலந்து விட்டன” என்று பாராட்டினான். “காதல் என்பது தொடக்கத்தில் உடல் உறவால் ஏற்படுகிறது; எனினும் அது உள்ள உணர்வால் ஒன்றுபடுகிறது” என்று கூறி இல்லற இனிமையை நுகர்ந்தனர்.