சீவக சிந்தாமணி (உரைநடை)/பதுமையார் இலம்பகம்

விக்கிமூலம் இலிருந்து

5. பதுமையார் இலம்பகம்

விமானத்தில் சென்றவன் கீழே இறங்கவே இல்லை. அது போய்க்கொண்டே இருந்தது. “எப்படி நிறுத்துவது” என்று கேட்டான். “வெள்ளிமலைக்குப் போனால்தான் இறங்கலாம்” என்றான்.

சுதஞ்சணன் வாழுமிடமும் வெள்ளிமலைதான் என்பது தெரிந்து கொண்டான். வித்தியாதரர் அனைவரும் வெள்ளிமலை வாசிகள்; தேவர்கள் அனைவரும் பொன்னுலக வாசிகள் என்ற வேறுபாட்டை அறிந்து கொண்டான்.

அங்கே அழகிய பெண்கள் இருந்தனர். அதனால் அது அவன் அரண்மனை என்று தெரிந்து கொண்டான்.

“இத்தனை பேரை எப்படிக் கட்டி மேய்க்கிறாய்?” என்று கேட்டான்.

“கொஞ்சம் கஷ்டம்தான்; இருந்தாலும் தேவைதான்” என்றான்.

“இதனால் என்ன நன்மை?” என்று கேட்டான்.

“ஒன்று தூங்கிக் கொண்டிருந்தால் அதைத் தட்டி எழுப்பத் தேவையில்லை; சிரமம் குறைவு” என்றான்.

அவன் சொல்வது புதுமையாக இருந்தது.

அந்த ராணிகள் எல்லாம் இவனை வந்து சுற்றிக் கொண்டார்கள்.

“இவன் தான் என் நண்பன் சீவகன்”.

“பூலோகத்தில் இருப்பவர் எல்லாம் இவரைப் போலவே அழகாக இருப்பார்களா?”

“மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்” என்றான்.

ஏன் இந்தக் கேள்வி கேட்டோம் என்று ஆயிற்று.

இவனுடைய புகழ் ஏற்கனவே அங்குப் பரவி இருந்தது. யானையை அடக்கிய வீரன் என்பதால் இவன் யானையை அடக்குவது போல உருவம்; பக்கத்தில் குணமாலை போன்ற ஒரு பெண் வடிவம்; அவளை இவர்கள் பார்த்ததில்லை; அதனால் போன்ற என்று சொல்ல வேண்டியது; இணப்பு உருவத்தை அவர்கள் தம் மார்பில் பச்சைகுத்திக் கொண்டார்கள். தத்தையை வென்ற வித்தகன் என்பதால் அவனைக் கொண்டு இசைவிழா நடத்தி வைக்கக் குழுமினர். அண்மையில் அவனுக்கு ‘இசை ஞானி’ என்று வழங்கிய பட்டமும் அங்கு ஒளிபரப்பு ஆகி இருந்தது. எல்லோரும் இப்பொழுது அவன் வகுத்துக் கொடுத்த இசையைப் பாடுகின்றனர் என்று கேள்விப் பட்டனர். அவர்களும் தம் இசைக்கருவிகளை மாற்றிப் பெருக்கிக் கொள்ள நினைத்தனர்.

ஆர்மோனியப் பெட்டி, வீணை. யாழ் என்பவற்றோடு நின்றவர்கள் எது எது சப்தம் செய்யுமோ அந்தக் குப்பை எல்லாம் கொண்டுவந்து வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்து ஒரு ஆளை உட்கார வைத்தார்கள். கேட்டால் காலத்தின் மாற்றம் என்கிறார்கள். காதல் பாட்டைப் பாட வைத்து இளைஞர்கள் கிறங்கினார்கள். பக்திப் பாடல்களைக் கேட்டு முதியவர்கள் உறங்கினார்கள்; சொல்லத் தெரியவில்லை; அதாவது கண்மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தனர்.

அந்த ஊர்ப்பெண்கள் யார்மீதும் அவன் கையை நீட்டவில்லை. அதற்கு நேரமும் இல்லை; காந்தருவதத்தை ஒரு வித்தியாதரப் பெண்; அவள் கணவன் என்பதால் மரியாதை காட்டி அவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.

அவன் தனிமையில் தத்தை பற்றியும் குணமாலை பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் அவன் கண்களில் மிதப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது.

அவன் ஏக்கத்தை அறிந்த சுதஞ்சணன் அவன் தூக்கத்தைக் கலைக்கத் தொடங்கினான்.

“ஒரு ஊரில் ஒரு நாட்டாண்மைக்காரன் இருந்தான். அவன் தன் கடமையை மறந்து ஏதோ சிந்தனையில் கிடந்தான்” என்று தொடங்கினான். ஏதோ கதை சொல்கிறான் என்று சீவகனும் காது கொடுத்துக் கேட்டான்.

“அவன் தன் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தான். நரி ஒன்று வந்து நாட்டாண்மைக்காரன் நான்தான் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு ஊராரை மருட்டிக் கொண்டு வேளைக்கு ஒரு கிடாய் தின்னக் கேட்டது.”

“தட்டிக் கேட்க நாட்டுத் தலைவன் இல்லை; நரி இட்டதுதான் சட்டம்; மக்கள் அந்த நரியை எதிர்க்க முடியாமல் தவித்தனர்.”

“அவர்கள், சூழ்ச்சி மிக்க சிறு நரியின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்று பேசத் தொடங்கினர்” என்றான்.

உடனே இவன் தூங்கி எழுந்தவனாய், “ஏன் அந்தத் தலைவன் என்ன ஆனான்?” என்று கேட்டான்.

“ஏதோ பழைய நினைவுகளில் கடமையை மறந்து அவன் துரங்கிக் கொண்டிருக்கிறான்” என்றான். உடனே நினைவுகளில் இருந்து எழுந்து தன் கடமை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான்.

“அந்தக் கட்டியங்காரனை அடித்து நொறுக்க வேண்டும்” என்றான் சீவகன்.

“கவலைப்படாதே நானே சென்று அவனை அழித்து நாட்டை உனக்குப் பிடித்துத் தருகிறேன்” என்றான்.

“நண்பனிடம் கடன் வாங்கலாமே தவிர மொத்த மூலதனத்தை அவனிடம் எதிர்பார்க்கக் கூடாது; அது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான்.

“உண்மைதான்; உழைப்பவனுக்குத்தான் தெய்வம் முன் வந்து உதவும், தெய்வத்தையே உழைக்க இதுவரை யாரும் சொன்னதில்லை” என்றான்.

“காலம், இடம், துணை இம்மூன்றையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்பவனே வெற்றி பெறுவான்” எனறான்.

“உண்மைதான்; அதுவரை நாடுகளையும் மனிதர்களையும் காணவேண்டும். இன்னும் ஓராண்டுவரை தலை காட்டக் கூடாது என்று அச்சணந்தி ஆசிரியரும் கூறி இருக்கிறார். நான் பல தேயமும் காண விரும்புகிறேன்.”

“பயணத்துக்குக் கட்டுச்சோறு கட்டித் தருகிறேன்” என்றான்.

அவனுக்கு மூன்று மந்திரங்களை உபதேசித்தான். “வழிப்பயணத்துக்குப் பயன்படும்” என்றான்.

அவன் செல்லும் தேயத்தையும், கடக்கும் வழிகளையும் குறித்து விளக்கமாகக் கூறி வழி அனுப்பினான்.

கிணற்றுத் தவளையாக வாழ்ந்த சீவகன் அடிவானத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக மாறினான். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று பாடிய கவிஞன், “மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்று பாடத் தொடங்கினான். சுதஞ்சணன் வழிகாட்ட அவன் காடும் மலையும் பல கடந்து நாடுகள் பல கண்டான். அந்தப் பயணத்தில் முதல் கல் மேட்டுநிலம் ஒன்றில் வேட்டுவரை அவன் சந்தித்தது ஆகும்.

இங்கே கையில் வேலும் அம்பும் தாங்கிய இவ்வேடுவர்கள் அவற்றை வைத்துவிட்டு மொந்தையில் கள்ளும், இலையில் ஊனும் கொண்டு தின்று மகிழ்ந்து ஆடிப் பாடிக்கொண்டிருந்தனர். அவ்வகையில் அவர்கள் உலகை மறந்து உயரும் கவிஞர்களாக மாறினார்கள்.

அவர்கள் கவிதைகளைப் பாராட்டிய அவன் அதன் உள்ளடக்கத்தை விமரிசனம் செய்தான். குடியும் ஊனும் உடம்புக்கு வலிமை தரும் என்றாலும் அவை மனத்துக்கு மென்மை தரும் என்று விமரிசனம் செய்தான்; இவன் செய்த விமரிசனம் அவர்கள் பழைய போக்கை மாற்றியது. அதனால் அவர்கள் அர்த்தமுள்ள அருக மதம் என்ற நூலாசிரியர்களாக மாறினார்கள்.

“போதை தரும் குடியை விட்டால் போதம் தரும் ஞானம் வரும்” என்று உரைத்தான்.

“எப்படி?”

“ஊன் உண்டால் நரகத்தின் கதவுகள் திறந்து வைத்திருக்கும், அங்கே தான் போக வேண்டும்; குடியால் புத்தி தடுமாறும்” என்றான்.

அந்தக் காலத்தில் குடி குடியைக் கெடுக்கவில்லை; அதனால் அதை அவனால் கூற முடியவில்லை.

அவர்கள் இந்த அச்சுறுத்தலை ஏற்க இசையவில்லை. “உயிர்க்கொலை பாவம்; உலக உயிர்கள் நம் உடன் பிறப்புகள்; அவற்றிற்கு ஊறு விளைவிப்பது படைப்பை அவமதிப்பது ஆகும்” என்றான்.

“மாந்தர் மட்டும் சட்டதிட்டங்கள் வகுத்துக்கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும்போது இவற்றிற்கும் அந்த உரிமை இல்லையா?” என்று கேட்டான்.

மனித நேயம் என்பது விரிந்து உயிர்கள் நேயம் என்ற எல்லைக்குச் செல்ல வேண்டும் என்று உணர்த்தினான்.

“புளிப்பு எதுவும் போதை தரும்; அதைக் குடிக்கும் போது அறிவு மங்குகிறது; உணர்வுகள் மேல் ஓங்குகின்றன; அதைத்தான் மகிழ்ச்சி என்கிறாய்” என்று விளக்க ஆரம்பித்தான்.

அந்தக் காலத்தில் விஷம் கலந்து யாரும் மதுவை விற்கவில்லை. அப்படிக் கலந்து இருந்தால் சிலர் செத்து இருக்கலாம். அதை எடுத்துக் காட்டி மதுவின் கொடுமையை விளக்கி இருக்கலாம்; அத்தகைய கொடியவர்கள் சமூக விரோதிகள் மக்களைச் சுரண்டும் பெருச்சாளிகள் அந்தக் காலத்தில் இல்லை. அதனால் அவற்றைக் காட்டி அவனால் அச்சுறுத்த முடியவில்லை. வெறும் அறிவுரைகளே அவர்களைத் திருத்தின.

என்றாலும் அவர்தம் வேட்டுவத் தொழில் விட்டு எந்தப் புதிய தொழிலைச் செய்வது என்று அவன் கூற முற்படவில்லை.

பிறகு அதன் தலைநகராகிய சந்திராபம் என்ற ஊரை அடைந்தான். புறநகரில் அடியெடுத்து வைத்தபோது மக்களின் மகிழ்ச்சி ஒலி அவனை வரவேற்றது. ஊருக்குள்ளே அரங்கு ஒன்றில் ஆரணங்கு ஒருத்தி சும்மா இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தாள். இவள் ஏன் இப்படி ஆடுகிறாள் என்று கவனித்தான். பிறகு விளங்கியது அது ஒரு நாட்டிய விருந்து என்று.

அழையா விருந்தினனாக அங்கே நுழைந்தான். இவன் அழகனாக இருந்ததால் அவனை அழைத்து முன்னே இடம் தந்து உட்கார வைத்தனர்.

அநங்கமாலையின் நினைவு வந்தது. “இவள் யார்?” என்று அரங்கில் ஆடியவளைப் பற்றி அடுத்து இருந்தவனை விசாரித்தான்.

அவன் அந்த அரங்கின் காரியதரிசி போலச் சுருசுருப்பாகச் செயல்பட்டான். எல்லோரும் அவனிடம்தான் வந்து பேசிச் சென்றார்கள்.

“தேசிகப் பாவை” என்றான்.

அது அவள் இயற் பெயரா பொதுவாக நாட்டியப் பெண்ணுக்கு வழங்கும் பெயரா என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

மறுபடியும் கேட்டான்.

“அவள் பெயர்”

“தேசிகப் பாவை” என்றான்.

அவள் ஆடலைவிட அவள் அவனுக்குக் கவர்ச்சி தந்தாள். இதைப் போன்ற பெண்களை அவன் இராசமா புரத்தில் பார்த்திருக்கிறான். இதைப் போன்ற நாட்டியக் காரி அழகி அநங்கமாலை; அவளுக்கு அடுத்தது இவள் என்று மதிப்பிட்டான்.

அவளும் இவனையே அடிக்கடி பார்த்து நோட்டம் விட்டாள். அவள் ஆட்டத்திற்கு இது ஆட்டம் கொடுத்தது. சற்றுத் தாளம் பிசகினாள். அதற்கு அவள் இவனிடம் நாட்டம் செலுத்தியதால் தான் என்பதை அரங்கின் செயலாளன் அறிந்தான்.

“யார் இவன்?” என்ற வினா அவனுக்கு ஏற்பட்டது. அவனோடு பேச வேண்டும் பழகவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது.

மின்னல் ஒளிபோல் அவள் பார்வை சீவகன் மீது பட்டு இவன் நெஞ்சைத் தொட்டது. முடிந்ததும் அவளைச் சந்தித்துப் பேசி முகவரி கேட்கலாம் என்று இருந்தான்.

அதற்குள் அரசமகன்; அவன் பெயர் உலோகபாலன்; அடுத்து அமர்ந்திருந்தவன்; இவனைத் தன் விருந்தினனாக அழைத்தான். இவன் அரசமகன் என்பதைச் சீவகன் அறிந்தான்; அவன் இவனை விடுவதாக இல்லை.

இருவரும் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. ஏன் எனில் அந்தக் காலத்தில் தேநீர் அமுலில் இல்லை; ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

“உனக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டான்.

“இராசமாபுரம் சென்றிருந்தேன். அங்கே சீவகனுக்கும் தத்தைக்கும் இசைப்போட்டி நடந்தது. அதற்கு யானும் சென்றிருந்தேன். அப்பொழுது சீவகன் பாடிய பாட்டு எனக்குத் தெரியும்; அது என்னை அப்படியே கவர்ந்து விட்டது” என்றான்.

“சீவகனை நீ பார்த்திருக்கிறாயா?”

“அந்த மேடைமீதுதான் பார்த்திருக்கிறேன்; வீரம் மிக்கவன்; அங்கு அவனை வளைத்த அரசர்களை எல்லாம் புறமுதுகிடச் செய்தவன். வீணை வித்தகன்; அந்தத் தத்தை அவனிடம் ததிங்கிணத்தோம் போட்டாள்; ஒன்றும் நடக்கவில்லை.”

“அதுதான் அவள் அவனிடம் தோற்றுவிட்டாள்.”

“அதற்கப்புறம்?”

“இன்னொருத்தி வந்து மாட்டிக் கொண்டாள். குணமாலை. அவளை யானையின் பிடியிலிருந்து காப்பாற்றினான். அவன் அவள் பிடியில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் கட்டியங்காரன் அவன் மீது காழ்ப்புக் கொண்டான்; அவனைக் கட்டிப்பிடித்து வருக என்று கூறினான்.”

“அவன் தப்பித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்” என்று முடித்தான்.

அவன் பாடிய அந்தப்பாட்டைப் பாடமுடியுமா என்று கேட்டான். “பாடுவேன்; இன்னமும் கூட்டம் வந்து கூடும்; மற்றும் இங்கே யாரும் பெண்கள் இல்லை என்று சொல்; பாடுகிறேன்” என்றான்.

“ஏன் அப்படி?”

“அவர்கள் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்; அப்புறம் அவர்களை அகற்ற முடியாது” என்றான்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனை ஏவலன் ஒருவன் வந்தான்.

“தங்கையை அரவு தீண்டிவிட்டது” என்றான்.

“அவள் மாண்டு விட்டாளா?” என்று கதறிக் கொண்டு ஓடினான்,

பிறகு தெரிந்தது அவள் உயிர் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று.

மந்திரம் மருத்துவம் அவளிடம் தோற்றுவிட்டன.

உலோகபாலனுக்கு ஒரு நினைவு ஓடியது; தன்னுடன் பேசியவன் கந்தருவனாக இருக்கலாம்; அவனுக்கு மந்திரம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்து அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவன் தங்கையைப் பற்றி ஏற்கனவே அவன் கேட்டு இருக்கிறான்; அவள் கொஞ்சம் அழகாகவே இருப்பாள் என்று வழியில் பேசக் கேட்டு இருக்கிறான்.

தான் ஒரு பெரிய மருத்துவன் போல் நடித்தான்; கையைப் பிடித்தான்; மார்பைத் தொட்டான்; கன்னத்தைக் கிள்ளினான்; விழிகள் மூடிக் கொண்டிருந்தன. “கன்னி நாகம் கடித்தது” என்றான்.

கன்னியை நாகம்தான் கடித்தது என்று மற்றவர்கள் உரைத்தார்கள். “இல்லை, இளநாகம் அவளைக் கடித்தது” என்றான்; “நச்சுப்பல் அச்சுப்பதிவு ஆகவில்லை; மேற்பல்தான் தொட்டு இருக்கிறது” என்றான்.

சுதஞ்சணன் கற்றுத் தந்த மந்திரங்களில் ஒன்று நஞ்சு ஏறினால் இறக்கிவிடுவது என்பது; அது இப்பொழுது அவனுக்குக் கை கொடுத்தது.

விழித்தாள்; விழிகள் சூரியனைக் கண்டன; அவள் தாமரை ஆனாள்; காதல் பார்வை என்பதை ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.

“உன் பெயர்?”

“பதுமம்” என்றாள்.

“அரவு என் கையைத் தீண்டிவிட்டது” என்று மருத்துவரிடம் உரைப்பது போல் அவள் குழைந்து மிழற்றினாள்.

அவள் முகத்தைப் பார்த்தான்; மதி அவன் நினைவுக்கு வந்தது; நிறைமதியாக இருந்தாள்; அது கறைமதி, அரவு அதற்குப் பகை, இவள் முகம் பிறைமதியாக இருந்ததால் அரவுக்குப் பகை இல்லை, அதனால்தான் முகத்தைத் தொடவில்லை; கரத்தைத் தீண்டியது” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

முகத்தோடு முகம் வைத்து முன்னுரை கூறினான். கரத்தோடு கரம் தொட்டுத் தொடர்கதை யாக்கினான். அவள் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை; நாடி பார்க்க அவளை அவன் நாடினான்.

“உன் தங்கை பிழைத்தாள்” என்றான்.

“அதனால்தான் உன்னை அழைத்தேன்” என்றான்.

“யானை குணமாலையைக் கூட்டுவித்தது. நாகம் இவளைக் காட்டுவித்தது” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

காதல் என்ற ஆபத்துக்கு ஏதாவது இப்படி விபத்துகள் தேவைப்படுகின்றன என அவன் அறிய முடிந்தது.

“அவள் நட்டு வைத்த முல்லை முளைவிட்டு நகை காட்டியது. அதைக் காண இவள் ஓடோடிச் சென்றாள். வழியில் ஒரு குரவம் பூத்து அழகு தந்தது. வண்டுகளும் தேனீக்களும் அதைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அது அவளைக் கவர்ந்தது. பூவைப் பறிக்க அருகில் சென்றாள்; அப்பொழுதுதான் அரவு வந்து அவளைக் கரவு செய்தது” இந்தச் செய்தி அங்குப் பேசப்பட்டது. இவை உலோகபாலன் கேட்டு அறிந்தான்.

“நல்ல காலம்; இந்தப் புதிய இளைஞனால் அவள் பிழைத்தாள்” என்று அவன் மகிழ்ந்தான்.

கோயில் சிலைகளைக் கண்டிருக்கிறாள்; அங்குத் தூண்களில் ஆண்வடிவம் என்றால் அவள் அவற்றைக் காண்பதை அவள் நாணம் தடுத்தது. அத்தகையவளின் நாணம் அவளிடம் தங்குவதற்கு நாணி அவளை விட்டு அகன்றது. நிறையை விளித்தாள்; என்குறையைத் தீர்க்காத நீ என்னைவிட்டு விலகு என்று அதற்கு விடுதலை அளித்தாள்; அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் படித்த படிப்பை எல்லாம் பறக்க விட்டது.

அவள் நிலை கொள்ளவில்லை; அவன் அந்தப்பக்கம் வந்தால் பார்க்கலாமே என ஆசைப்பட்டாள். அவன் காலடி சப்தம் ஏதாவது கேட்டாலே ‘யாரடி போய்ப்பார்’ என்று தன் தோழியை அனுப்பிவைத்தாள். அவனுக்காகத் தன் தமையன் அழைத்த விருந்துக்கு அடுக்களையில் இருந்து அவளே சமைத்து அனுப்பினாள்.

“சமையல் நன்றாக இருந்தது” என்றான்.

“என் தங்கையின் கைத்திறன்” என்றான்.

“முதலிலேயே சொல்லி இருக்கலாமே” என்றான்

“எதற்காக”

“"பாராட்டி இருக்க மாட்டேன்” என்றான்; அதன் நுட்பம் அரச இளைஞன் அறிந்து கொள்ள இயலவில்லை.

கதவு இடுக்குகள் எவ்வளவு பயன் உடையவை என்பதைக் கண்டு அவற்றைப் பயன் படுத்திக் கொண்டாள். தானே நேரில் சென்று “நான் தான் சமைத்தேன்” என்று கூறலாம் என்று துடித்தாள்; அரச மகள் என்பதால் அஞ்சி அடங்கினாள். அவனைத் தான் எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று துடித்தாள்.

அத்தான் என்று அழைக்க வேண்டும் என்று பித்தான நினைவுகள் அவளைக் கவ்வின. தன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு அவளே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் வேதனைப் பட்டாள்.

‘இதுவோ அன்னாய்! காமத்தியற்கை; புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்’ என்று தன் தோழியிடம் எடுத்து உரைத்தாள்.

அவனும் அவளைப் பற்றிப் பற்பல கற்பனைகளில் ஆழ்ந்தான். “காணி நிலம் வேண்டும். அங்கே ஒரு மாளிகை கட்டி முடிக்க வேண்டும். கீற்றும் இளநீரும் தரும் தென்னைகள் சுற்றியும் வைக்க வேண்டும். கத்தும் குயிலோசை காதில்பட வேண்டும். அங்கே இந்தப் பதுமம் பத்தினியாக வந்து தன் பக்கத்தில் இருக்க வேண்டும்” என்று கற்பனையில் ஆழ்ந்தான்.

நீலத் திரைக் கடலில் தன் மோனக் கனவுகளில் அவள் நீந்தி விளையாடுவதைக் கண்டான். கோல அழகுடைய அந்தக் கோயில் புறாவைப் பிடித்துக் கவிதைகள் சொல்லலாமே என்று ஆசைப்பட்டான். “உயிர் கொடுத்தேன் என்பதற்காக அவள் உடலை நான் எப்படிக் கேட்க முடியும்? எந்த மாமன் மகனோ உறவு பேசி அவளை இழுத்துக் கொண்டு போனால் என்ன செய்வது?” முன்பின் தெரியாத உனக்கு எப்படி எங்கள் மகளைத் தர முடியும்? முகவரி இல்லாத மானாவாரி நீ; உனக்கு எப்படி எங்கள் மகளை வாரித் தர முடியும்? எப்படித் தாரை வார்த்துத் தரமுடியும் என்று முகம் திரித்துப் பேசினால் என்ன செய்வது?”

“அவள் மட்டும் விரும்பினால் போதுமா? அது போதும். அது முதற்படி, அதன்பின் எல்லாம் நடக்கும் அவள் சொற்படி, அதுதான் செய்யத்தக்க உருப்படி, நிச்சயம் உண்டாகும் சாகுபடி, அதற்குப் பிறகு நடப்பது விதிப்படி” என்று எண்ணியவனாய் அந்த ஊரில் ஒதுக்குப்புறத்தில் இருந்த ‘காதலர் சோலை’ என்ற பூஞ்சோலைக்குத் தனியனாகச் சென்றான்.

அவனுக்கு ஒரு நப்பாசை; அவளுக்கும் தன்னைப் போல் ஒரு தப்பாசை வந்து இந்தப்பக்கம் திருப்பு முனையாக ஆக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்காதா என்று அங்கலாயததான்.

மின்னல் கொடி ஒன்று கன்னல் மொழியாளின் வடிவத்தில் அவன் எதிர்பார்த்தபடியே வந்து நின்றது. அவளோடு வால் நட்சத்திரங்கள் போன்று அவள் தோழியர் உடன் வந்திருந்தனர்.

“பதுமையே! நாங்கள் அந்தப் பக்கம் சென்று ஏதாவது புதுமை இருக்கிறதா என்று பார்த்து வருகிறோம்; நீ இங்கே சற்று இளைப்பாறுக, அதுதான் காதல் ஆறு; உன் தலைவனை நீ அடைந்து சேரு” என்று சொல்லிவிட்டு அவளை விட்டு ஒதுங்கி ஒரம் கட்டினர்.

“தமிழ்க் காதல்” என்ற நூலைப் படித்துச் சீவகன் இயற்கைப் புணர்ச்சி என்ற தலைப்பில் சுழன்று கொண்டிருந்தான். அடுப்பாரும் இன்றித் தடுப்பாரும் இன்றி ஒத்த அழகும், பண்பும் நலமும் உடைய தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் கூடும் முதல் சந்திப்பு இது என்று படித்துக் கொண்டிருந்தான். அவள் அவன் முன் வந்து நின்றாள்; சடங்குகள் எல்லாம் தொடங்கின; அவள் மேனியைத் தொட்டான்; கூந்தலை வருடினான்; அவளுக்குக் கிளுகிளுப்பு உண்டாக்கினான்; அந்தச் சடங்கை மெய் தொட்டுப் பயிறல் என்ற வாக்கியத்தால் படித்து அறிந்தான்.

‘யான்பெற்ற இன்பம் யார் பெற்றார்?’ என்று அவள் நலம் பாராட்டினான்; இடையில் தொடங்கி நடுவுக்கு வந்து முடிவுரை தந்த அவன் வருணனைகள் அவளைத் தலை குனிய வைத்தன. முத்து என்றான் அவள் பேசும்போது; முகை என்றான் அவள் நகைக்கும் போது; வில் என்றான் அவள் புருவ வளைவைப் பார்த்தபோது; வேல் என்றான் அவள் விழிகள் அவனை வருத்தியபோது, கரும்பு என்றான் அவளை முழுதும் விரும்பியபோது, கோங்கம் என்றான் அவள் இணைக் கொங்கைகளைக் கண்டபோது; இப்படி அடுக்கிக் கொண்டே போனான். அவளுக்கே அதில் ஒரு சலிப்பு ஏற்பட்டது. அவன் அடுக்கிக் கொண்டிருக்கும் போது “உன்கவிதை முடிப்பதற்குள் என் தோழியர் வந்து கவிந்து கொள்வார்கள்” என்றாள்; இனி அறுப்பது இல்லை என்று இருவரும் முடிவுக்கு வந்தவர்கள் போல் ஒருவரை ஒருவர் முழுவதும் அறிந்து கொண்டனர்.

மறுபடியும் அதே இடத்தில் பலமுறை வந்து சந்தித்தார்கள்; இதற்கு இடந்தலைப்பாடு என்று தமிழ்க் காதல் என்ற அந்நூல் பெயர் தந்தது. தோழியர் துணை கொண்டு அவர்கள் அடைந்த கூட்டத்தை அது தோழியர் கூட்டம் என்று பெயர் கொடுத்தது. தமிழ்க் காதல் படிக்கப்படிக்க அவனுக்குச் சுவை தந்தது. அந்நூல் அவனுக்குப் பொழுது போக்க அந்தச் சோலையில் மிகுதியும் பயன்பட்டது.

அவனைத் தேடிக்கொண்டு யாரோ “மச்சானைப் பார்த்தீர்களா” என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தார்கள். இந்த மலைவாழைத் தோப்பில் தன்னைத் தேடுவார் யார் என்று கவனித்தான். உண்மையிலேயே மச்சான் ஆகக் கூடிய உலோகபாலன் அங்கு வந்து சேர்ந்தான். அச்சம் சிறிது அலைக்கழித்தது. தமிழ்க்காதல் என்ற நூல் சிறிது மறைத்து வைத்தான்.

“என்ன நூல்?” என்று கேட்டான். “தமிழ்க் காதல்”; என்றான்.

“தமிழ்க்காதல் என்றால் எனக்குக் காட்டக்கூடாதா? ஏன் எனக்கு அதை மறைக்கிறாய்?”

“எதுவரை படித்திருக்கிறாய்?” என்று தொடர்ந்தான்.

“இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கியிற் கூட்டம் இதுவரை முடித்து விட்டேன்.”

“இனி என்ன இருக்கிறது?” என்றான்.

“அறத்தொடு நிற்றல்; அதாவது தலைவி தனக்கும் தலைவனுக்கும் உள்ள கூட்டத்தைத் தன் தோழிக்கு எடுத்து உரைப்பாள்; அவள் செவிலிக்குச் செப்புவாள்; அவள் தாய்க்கு உணர்த்துவாள்; தாய் அவள் தமையனுக்கும் தந்தைக்கும் அறிவிப்பாள்” என்றான் சீவகன்.

“அந்தப்பகுதிகளை யான் படித்து விட்டேன்; என் தங்கை எங்களுக்கு அறிவித்துவிட்டாள்; எம் தந்தையும் உடன்பட்டு விட்டார். இனிக் கற்பியல்தான்” என்றான். தமிழ்க்காதல் அதி அற்புதம் என்று விமரிசித்துக்கொண்டு இருவரும் வீடுவரை பேசிக்கொண்டே சென்றனர்.

மணம் சிறப்பாக நடந்தது. அவன்பக்கம் சுற்றம் இல்லையே என்று பெண் வீட்டாருக்கு வருத்தம் தான்; இருந்தாலும் அதை அவர்கள் பெரிது படுத்தவில்லை.

இரவுகளில் ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதைகளில் ஒரு சிலவற்றைப் படித்து இன்பமாகப் பொழுது போக்கினர். அவளும் விழித்துக் கொண்டு அவனோடு அக்கதைகளை ரசித்தாள். பகலில் பொழுது போவது சிரமமாக இருந்தது. புதுப்புதுச் சமையல், அவியல், துவையல் இந்தக் கலவைகள் நாவுக்குச் சுவை பயந்தன; மாலைகளில் நாடகம் நயந்தும், பாடல்களைக் கேட்டும் இனிமையாகப் பொழுது போக்கினர். எதுவும் இல்லையென்றால் அவர்கள் தம் இனிய நினைவுகள் ஒன்று இரண்டு பேசி மகிழ்ந்தனர். “உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

“சொன்னால்தானே தெரியும்”

“நான் சின்ன வயதில் முல்லைச் செடி ஒன்று நட்டு வைத்தேன்”

“அது முறுவல் காட்டி இருக்கும்”

“அது எப்படி உமக்குத் தெரியும்?”

“அதைப் பார்க்கத்தானே நீ சென்றாய்”

“அப்பொழுதுதான் அந்த நாகம் கடித்தது; துடிதுடித்து விட்டேன்; முடிந்தது என் வாழ்க்கை என்று மயங்கி விழுந்து விட்டேன்.”

“நானும் அப்படித்தான் மயங்கி விழுந்து விட்டேன்; மறுபடியும் கதையைத் தொடர்ந்து சொல்.”

“அந்த முல்லை வயதுக்கு வந்தது”

“உனக்கு என்ன பைத்தியமா?”

“பூப்பு அடைந்தது; அதைத்தான் அப்படிச் சொன்னேன்”

“அதை ஒரு மகிழ்ச்சி மிக்க விழாவாகக் கொண்டாடினேன்; ஒரு பெண் வயதுக்கு வந்தால் எப்படி எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படிக் கொண்டாடினோம்”

“அதில் உனக்கு என்ன மகிழ்ச்சி”

“அந்தப் பெண்ணின் தாய் நான் தானே; நட்டுவைத்த முல்லை பட்டுப் போகாமல் பூ ஈன்றது என்றால் எனக்குப் பெருமகிழ்ச்சி தானே.”

“அதை ஏன் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”

“அதைச் சென்று நான் பார்க்கவே இல்லை; அதற்குள் குரவம் பூ ஆசை என்னை இழுத்தது; அரவும் என்னைத் தொட்டுவிட்டது” என்றாள்.

“பழைய கதைதானே”

இருவரும் “பிக்நிக்” சென்றனர்.

முல்லைக் கொடி இவள் நட்டு வைத்த பொற்கொம்பினைத் தழுவிக் கொண்டு இருந்தது.

“இதற்குள் மணமும் ஆகிவிட்டது போல இருக்கிறதே; கொழு கொம்பினைத் தழுவிக் கொண்டு இருக்கிறது” என்றான்.

“அதுவும் நம்மைப்போலத்தான்” என்றாள்.

சற்றுத் தொலைவில் பாம்புகடித்த அந்தச் சரித்திர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடைந்தனர்.

அவள் சொன்னாள்;

“அன்றும் இப்படித்தான்; இந்தக் குரவத்தைச் சுற்றி வண்டும் தேனும் உறவு கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன.” என்றாள். “அதுவும் நம்மைப்போலத்தான்; வேட்கை தீரவில்லை” என்றான்.

ஊர் புதிது; உற்ற துணைவி புதிது; உணவு புதிது; அவை ஒவ்வொன்றும் புதிது புதிதாக இருந்தன பாரதியின் கவிதைகளைப் போல.

இடைவேளை, ஒரு நாள் வெளியே இளநீர் பருகிவிட்டு வந்தான்.

“ஏன் எங்குச் சென்றிருந்தீர்?’ என்று கேட்டாள்.

“ஒருவருக்கு நான் கடன் பாக்கி; அதை முடித்து வந்தேன்” என்றான்.

“நன்றிக்கடன்; முதன்முதலில் எனக்கு எதிர்ப்பட்டவள் ஒருத்தி; அவளைப் பார்க்கத்தான் வந்தேன்; நீ கிடைத்தாய்”

“நல்ல சகுனம்; சுமங்கலியா?”

“அவளைச் சுமங்கலியாக்க முயன்றேன்; சுகம்மட்டும் தந்தேன்.”

“யுகம் வரை பேசலாம்; விளக்கிச் சொல்லுங்கள்”

“தேசிகப்பாவை அவளோடு பேசிவிட்டுச் சொல்லி விட்டு வந்தேன்.”

“என்னிடம் ஏதோ மறைக்கிறீர்கள்”.

எல்லாப் பெண்களும் பேசுவதுபோல அவளும் பேசினாள்.

“உரைக்கின்றேன்; ஒரு நாள் கூத்து; அவ்வளவுதான்”

“இது?”

“எங்கள் ஊரில் இது சகஜம், சீவகன் தெரியுமா? அவனும் அப்படித்தான்; அநங்கமாலையோடு கொஞ்சம் தொடர்பு உண்டு; பாவம் அவள் அவனுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கிறாள்; அவன் ஊரை விட்டுப்போய் விட்டான்; இந்தக் கதை எல்லாம் உன் அண்ணனுக்குச் சொல்லி இருக்கின்றேன்; சீவகனே இப்படிச் சில்லரை விஷயங்களில் ஈடுபடுகிறான் என்றால் நான் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். சீவகனுக்கு ஒரு அநங்கமாலை; எனக்கு உங்கள் ஊர்த் தேசிகப் பாவை” என்றான்.

“நேசிப்பதில் தவறு இல்லை. அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை” என்று அவள் அதைத் தொடரவில்லை.

ஊடலுக்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தினாள்; அதனால் அவன் கூடலுக்கு அது தடையாக நிற்கவில்லை.

என்னதான் ஒரு திரைப்படம் பிரமாதம் என்றாலும் அதை எப்படித் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அவனால் அங்கு நீடித்து இருக்க முடியவில்லை. அவன் பயணம் அங்கிருந்து தொடர்ந்தது. அவன் வழக்கம்போல் மிகவும் கொடியவனாகவே நடந்து கொண்டான்; அவளிடத்தில் ‘போய் வருகிறேன்’ என்று ஒரு சொல்கூடச் சொல்லவில்லை.

விடியற் பொழுது; அது தோள் தோய்ந்த காதலனை வாள்போல் பிரித்துவிட்டது.

தேடித் தேடிப் பார்த்தாள்; தேசிகப்பாவையின் வீட்டுக்கும் ஆள் அனுப்பிப் பார்த்தாள். “அவர் வந்துபோய் விட்டார்” என்று அவள் சொல்லி விட்டாள்.

இந்தச் செய்தியை அவள் தன் தாய்க்கு அறத்தொடு நின்றாள்; தாய்க்குச் சொல்ல அவள் தன் கணவனுக்கும் மகனுக்கும் சொல்லக் காணவில்லை என்று அனைவரும் கண் கலங்கினர்.

அவள் தாய் “மகளே! இந்தக் கடல் ஏன் உப்புக் கரிக்கிறது தெரியுமா?” என்று கேட்டாள்.

“தெரியாது” என்றாள்.

“மங்கையர் அழுத கண்ணிர்தான்; பிரிந்தவர் அடைந்த வேதனையின் விளைவுதான்” என்றாள்.

அதைவிட அவளுக்கு ஆறுதல் கூறக்கூடிய மொழிகள் வேறு அமையவில்லை.

பதுமையின் தந்தை நரபதி ஆளைவிட்டுத் தேடினார்; தேடிய அவர்கள் ஊரின் எல்லையை அடைந்து அவனைச் சந்தித்து உரையாடினர்.

அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிய வில்லை; மாறுவேடம் கொண்டிருந்தான்; அவர்கள் அவன் தான் என்று தெளிவு கொள்ள இயலவில்லை.

“உன்னைப் போல் ஒருவன்” என்றான் அவர்களுள் ஒருவன்.

“ஒருவனைப் போலவே ஒன்பது பேர் இருப்பார்கள். அது படைப்பின் இயல்பு” என்றான்.

“அரசமகளைக் கட்டிக்கொண்டு இப்பொழுது தொடர்பு வெட்டிக்கொண்டு போய்விட்டான்”

“அவனா ! இப்பொழுதுதான் என்னிடம் பேசி விட்டுச் சென்றான். இன்னும் ஒன்பது மாதத்தில் வந்து அழைத்துப் போகிறேன்; யாராவது தேடிக்கொண்டு வந்தால் சொல்லி விடு என்று கூறிவிட்டுச் சென்றான்”

“நீ அவனை ஒன்றுமே கேட்கவில்லையா?”

“கேட்டேன்; இப்படி விட்டுப் பிரியலாமா என்று கேட்டேன். என்ன செய்வது? என் தாய் உடல் நலம் இல்லாமல் இருக்கிறாள்; அவளைப் பார்க்கப் போக வேண்டும்; சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள். நீ சொல்லிவிடு என்று கூறிவிட்டுச் சென்றான். பார்த்தால் நல்லவனாக இருக்கின்றான்; கடமைகள் காத்துக் கொண்டிருக்கும். அவன் கண்ணியமானவன் தான்; இதை அவர்களிடம் கூறி விடு என்று சொல்லிச் சென்றான்”

“நாடகமே இந்த உலகம்”

“என்ன செய்வது இப்படியும் நடிக்க வேண்டி இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.